Thursday, September 4, 2008

கடவுள்க் கல்


எங்களுக்கு
எதற்காக கனவுகள்
இன்றைக்கோ நாளைக்கோ
அல்லது இன்னுமொரு பொழுதில்
உதிரப்போகிற
கடைசி மூச்சை காப்பாற்றும்
வல்லமை கூட
கிடையாது எம்மிடம்
பசிப்பதும்
வலிப்பதும் கூட
நியாயமற்றதாகிப் போனபிறகு
படிப்பும்
பலவர்ணக் கனவுகளும்
எதற்காக,
எங்களுக்கே இது
வேடிக்கைதான் - இருந்தும்
வருகிறதே என்ன செய்வது

உலக நியதிகளும்
சட்டங்களும்
எங்களையே கடிந்து கொள்கிறபோதும்
கடிவாளம் போடும் போதும்
கனத்து வருகிற
வேதனைகள்
கொட்டித் தீர்க்க இயலாது
கடவுள்க் கல்லையே
கழுவிப்போகிறது

காலம் எங்களை
எழுதாது போயிருக்கலாம்
ஏனோ
ஒரேயடியாக
அழிக்கக்கூடத் தெரியாமல்
சொட்டு வைத்துக்கொண்டு போகிறது
பொருளற்றுப்போன
வாழ்வை - சாவு
சப்பித்துப்பிக் கொண்டேதான் இருக்கிறது
எங்களுக்கான
கருணைப் படகை
நாங்களே செய்தாலும்
அவற்றை விழுங்கும்
பூத டோறாக்களும்தான்
படைக்கப்பட்டிருக்கிறதே...
அவற்றிலிருந்து மீண்டு
தப்பித்தாலும்
இந்தப் பூமியில்
எம்மைத் தாங்கும்
சுதந்திரமான
கரை ஒன்றிற்கு
நாங்கள்
எங்கே போவது...

No comments: