ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்
ராமன் வனவாசம் செல்லத் தயாராகும்வேளையில் தன் அருமைப் பெண்டாட்டியை பார்த்துச் சொல்கிறான், அடியேன் யாராலும் வளைக்கமுடியாத வில்லை எப்பெரும்பாடுபட்டு வளைத்து நான் கரம் பற்றிய என் காதலியே, நான் போகவிருப்பது சிங்கப்பூர் ஃபிக்னிக் அல்ல, வனவாசம். அதனால் நீ இங்கேயே அரண்மனையிலேயே இருந்துவிடு என்று சொல்கிறான். சதா டொக்கு ஃபிகருகளே கொஞ்சம் பௌசு வந்ததுமே மகாராணிமாதிரி பில்டப் போட்டு ஊருக்கே சீன்போடுற இந்தக்காலத்தில - இவள் தேவதைபோன்ற ராஜகுமாரி, பிறந்ததிலிருந்து எந்தத் துன்பத்தையும் அனுபவித்திராதவள், பூவிலும் மென்மையான பாதங்களை உடையவள் - எப்படி என்னோடு காட்டுக்கு அதுவும் சிங்கம், புலி, நரி இந்தமாதிரி அனிமல்ஸ் எல்லாம் இருக்கிக்கிற பயங்கரக் காட்டுக்கு, சூடு குளிர் கூதல் பார்க்காமல்?.. சான்ஸே இல்ல. வருவாயா? என்று கேட்டாலே டைவேஸ்தான் என்று ராமன் நினைத்திருப்பானோ என்னவோ.
ஆனால் சீதைக்கு வருத்தம், பெரியவர்கள் சொல் கேட்டல் அறமே ஆயினும் பாற்கடலிலிருந்து பிரியாமல் அயோத்திவரை கூட வந்தவளாகிய மனைவியை நடுவழியில் விட்டுவிட்டு பிரிந்து செல்வதென்பது, அப்பெரியவர்கள் சொல்லும் அறத்தை பாதிக்கவில்லையா, சரி போகட்டும் குரவர் தமக்கு நன்மை பயப்பவைதானே அறங்களாகக் கொள்ளப்பட்டன, ஆனாலும் இவ்வளவுதூரம் நம்பி கூட வந்தவளை அருகில் இருக்கும் வனத்துக்கு அழைத்துச் செல்லாமல் தடுப்பதேன் என்று எண்ணி வருந்தினாளாம் சீதை. (அதுவரை நந்தவனத்துக்கும் - வனத்துக்கும் வித்தியாசம் அறிந்திராதவளாய் இருந்தாள் - சீதை எனச் சொல்லப்படுகிறது)
இருந்தாலும் ராமன் யார், அவன் ராஜகுமாரன், வரலாறுகளில் படிக்கப்பட்டு துதிக்கப்படப்போகின்றவன், அப்பழுக்கில்லாதவன் நின்று ஜோசித்து நிதானமக அறங்களுக்கு நியாயம்கற்பிக்கின்றவகையிலும் பெண்டாட்டியை சமாதானம் செய்கின்ற வகையிலும் பதில்சொல்கின்றான்.
"மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய கற்கள் உற்ற வழி, எனவே வெப்பமான கூர்ங்கற்கள் உராய்வதனால் ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்; குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம். அதனால்தான். இங்கேயெ இருந்துவிடுமாறு கூறினேன் அன்றி உன்னைப் பிரிகின்ற வல்லமை எனக்குமட்டும் எப்படி இருக்கும், ஆதலால் வருத்தாதெ! குரவர் சொன்னால் கொலைகூடக் குற்றமில்லை என்பதைறியாதவளா நீ, என்பது போல ராமன் சமாதானம் செய்யப்பார்க்கிறான்.
ஆனால், இளம் பெண்டாட்டி ராஜகுமாரி - சீதை அக்கணமே பதிலுரைக்கிறாள் இவ்வாறு, மேனியில் மட்டுமல்ல சிந்தையிலும் அழகிற்கு தன்னை விஞ்சியவர் யாருமில்லை என்பது புலப்பட. அந்தப் பாடல் இதுதான்,
"பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாதுஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."அடேய் என் புருசனாகிய காதலனே!, "இரக்கம் அற்ற மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல் என்னை விட்டு விலகிச் செல்கின்றாய், உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் நிகராகாது, அப்படி இருக்கும்போது, நீ என்னை பிரிந்து செல்வதாகிய பெருந்துயரைவிடவா சுட்டுவிடப்போகிறது உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு என்றுரைக்கிறாள்.
அப்படி கேட்ட சீதை உடனேயே உள்ளே சென்று மரவுரியை அணிந்து கொண்டு ராமனுக்கு முன்பே தயார் ஆகிவிடுகிறாள், என்று சொல்கிறது ராமாயணம்.
தன் துணைவிக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாது என்று கணவனும், துன்பம் என்பதே நான் உனைப் பிரிந்திருப்பதுதான் என்று மனையாளும் நினைக்கிறார்கள். உன் காட்டில் நீ தனியாகப் படப்போகும் இன்பதுன்பங்களோடு பங்கெடுக்காமல் இங்கிருக்கின்ற சௌகரியங்களை நான் அனுபவிக்கின்றதென்பது நரகமல்லவா, அதில் என் ஆன்மா வெந்து வெந்து எரியுமல்லவா - அதைவிட என் மேனி வெந்துபோவது ஒன்றும் வலியில்லை என்றுசொல்லி, கல்லும் முள்ளும் குத்த வெயிலும் பனியும் வாட்ட காட்டுக்குச் செல்கிறாள். காடென்பது எப்படி இருக்கும் என்று அறிந்திராத ராஜகுமாரி கணவனோடு கைகோர்த்துக்கொண்டு செல்கிறாள் உள்ளத்திலே உவகை பொங்கப் புறப்படுகிறாள் என்று ராமாணம் சொல்கிறது. சீதையின் உன்னதமான காதல் வெளிப்படுகின்ற இடமாக இதைச் சொல்வார்கள்.
ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்.
இந்தக்காலத்திலும் சீதைகள் இருக்கிறார்கள். மேக்கப்பிற்குப் பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் அழகு சீதைகள், சௌகரியங்களுக்குப் பின்னால் வருகிற சாதுர்ய சீதைகள், "குணம் என்ன குணம்" சற்குணம் என்பதே ஆணாதிக்க கட்டுப்பாடுகள்தான் என்று அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து புதுமைப் பெண்ண்களாய் தம்மை காணும் மொடல் சீதைகள். காதல் என்கிற பெயரில் - என்னென்னவோ செய்கிற சீதைகள். இப்படியான சீதைகளால் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறாள் பெண்மையின் அடையாளமாகச் சொல்லப்பட்ட "சீதை". நாளுக்கு நாள் மாறிவரும் இன்றைய உலகத்தில், புதுமை என்று சொல்லிக்கொண்டு பெண்மையின் பண்புகளையே (Qualities of Women) இழந்துகொண்டுபோகிறாள் "சீதை".
-----------------
பிற்குறிப்பு :- ஒரு நான்கு நாட்களுக்கு முதல் இந்தமாதிரி ஒரு சீன் என் வாழ்க்கையிலும் நடந்தது!!!, என்னை பார்த்து ஒரு பொண் சொன்னாள் "நின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு". இதை யாரும் நம்பப்போவதில்லை என்பத எனக்கு தெரியும்!!!. பிறகு "இன்றுபோய் நாளைவா" என நயம்படக் கொப்பியடித்து மாட்ட நான் என்ன 'வில்லிபுத்தூரார் ஆழ்வாரா'. அழகான, தெய்வீகமான "சீதையின் காதலை" ரசித்தேன், அதை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். எழுத்தில், சொல், பொருளில் குற்றமிருப்பின் இந்தச் சிறியவனாகிய அடியேனை மன்னிக்க.
- ப. அருள்நேசன்