Monday, April 7, 2008

சகாரவின் புன்னகை

ஒரு மாலைப் பொழுதின்
மழை நனைத்த
நினைவுகள்
மூச்சுக்காற்றின்
உஸ்ணத்தில் காய்கின்றன
நிலவு
துண்டுகளாய் உடைந்து
சிந்திய முத்தங்களில்
மிதக்கிறது எனது புன்னகை…
மனசின்
அலைகளின் உதைப்பில்
கரையொதுங்கிய கனவு
சிறங்கை உணர்வைத் தாங்கி
எப்படியோ உயிர்த்துவிட்டதில்
வானம் முழுக்க
அதன் வர்ணங்களை
கிறுக்குகிறேன்
ஒளி தீர்ந்துபோன
இரவொன்றின் உடலுக்குள்
இட்டு நிரப்பமுடியாத
நிலவின் காட்சி
கிளறப்பட்டுக் கிடக்கிறது
விழிகளை விழிகளேவிழுங்கிக்கொண்டு...

என்றைக்கோ
நடைபழகி மறந்துபோன
முட்களின் தெருவில்
தெரிந்துகொண்டே
குதித்து ஓடுகிறது
நெஞ்சுக்குள்ளே இருந்து – ஒரு
குழந்தை.

எப்பொழுதோ
வலித்து ஆறிவிட்ட
எனது காயங்களிலிருந்து
இரத்தம் பீறிட
மீண்டும் எனது புன்னகையை
எழுத ஆரம்பிக்கிறேன் - என்
இரத்தத்தில் மையெடுத்து…