Wednesday, February 29, 2012

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா


"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா" - திருமதி ரமணிச்சந்திரன், அழகான கதை। கதை படிக்குமளவுக்கு பொறுமையை தந்த 'உடைஞ்சுபோன என் லப்டொப்க்கு' நன்றி।

நினைவுகளுக்கும் பழமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மீழப்பெறமுடியாதவை , மனதை ஆட்கொள்ளும் இனிய உணர்வுகள் இப்படி வார்த்தைகளில் பல அர்த்தங்கள் சொல்லமுடியும். எப்படிச் சொன்னாலும் அவை இழப்பின் ஒருவகை வலியைதான் உணர்த்துகின்றன. நினைவுகள் சுவாரிஸ்யமானவை, அவை பழமையை நோக்கிப் பயணிப்பவை. நாங்கள் அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் கூட அவை, அவ்வப்போது மனதை பனிமூட்டமாக வந்து முற்றுகையிடும். சில நிமிடங்களிலோ சில மணித்துளிகளிலோ அவை கலைந்துபோய்விடும். காலம் செல்லச் செல்லதான் நினைவுகளுக்கு சுவாரிஸ்யம் கூடுகிறது. நாவல்களையோ கதைகளையோ நாடிச் செல்பவர்களுக்கும் இந்தப் பனிமூட்டத்துக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. எவரோ எழுதும் கதைகளில், அவரவர் தங்கள் தங்கள் நினைவுகளைப் படிக்கிறார்கள். இந்தக் கதைகள் பனிமூட்டம் கலையாமல் வைத்துக்கொள்கின்றன.

மனிதரில், பாந்தமில்லாமல் பந்தம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயற்கை அக்கறையாக இருக்கிறதோ என்னவோ, கதாசிரியர்கள் அக்கறையாகவே இருக்கிறார்கள். பந்தமிருந்தாலும், நல்ல பாந்தமே ஆனாலும் வாழ்நாளின் பாதி நாட்கள் சஞ்சலங்களோடுதானே கழிகின்றன, என்பதுதான் பெரும்பாலான அவதானங்களாகக் காணப்படுகின்றன. ஏன் இப்படி உறவுகளையும் உணர்வுகளைப் போட்டுக் குளப்பிக்கொள்கிறார்கள் என்று எனக்குள் அடிக்கடி எண்ணத் தோன்றும். எல்லாவற்றுக்கும் அன்புதான் காரணகர்த்தா என்பது குன்றின்மேல் தூக்கிவைத்த விளக்குகாய் இருக்கிறது. உணர்வுகள் இருக்கின்றவரையில் உறவுகளுக்கான தேவையும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பது நியதி. ஆக உயிர்வாழ்கின்ற வரையில், மனிதர்களுக்கு ஏதோ ஒரு அனுபந்தம் இருக்கவேண்டும் என்பது அவசியமாகிவிடுகிறது.

"அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு"

அன்பினால் ஏற்படும் ஆசை அல்லது விருப்பம், எல்லோரிடத்திலும் நட்பாயிருக்கின்ற மேன்மையை தேடித்தரும், என்று என்னதான் இந்த அன்பை பற்றி உயர்வாகச் சொன்னாலும் அதுவே "இன்பம் - துன்பம்" என்கிற அதலபாதாள இடைவெளிக்குள் மனிதனைப் போட்டு பந்தாடுகின்றது என்பதுதானே ஜதார்த்தம்.

"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா " என்கிற பாரதியின் வரிகளை, இந்த நாவலின் தலைப்பாகப் பார்த்ததும் மனம் அதனுள் இழுத்துக்கொண்டு போய்விட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். திருட்டு மாங்காய்க்கு எவ்வளவு சுவை அதிகமோ, அதேபோல திருடிப் படிப்பதுவும் அலாதியானதுதான்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்று ஆரம்பிக்கும் பாரதியின் பாடலின் இடையில் வரும் வரிகள்தான் அவை. உண்மையில் "உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" என்றுதான் அந்தவரி முளுமையடைகின்றது. 'உன்மத்தம்' என்றால் உணர்ச்சியின் உச்சனிலை என்று ஒரு பொருள் இருக்கிறது. உன்னை தழுவினால் நான் உணர்வின் முளுமையான சுகத்தை அனுபவிக்கிறேன் என்பதாக பாடல் வரி சொல்கிறது. அவ்வளவு காதல் அதனால் ஏற்பட்ட ஈர்ப்பு என்பதுதான் பொருள், அன்றி வேறு திசைக்கு அர்த்தங்களை நகர்த்திச்செல்லவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது விளக்கமும்கூட.

இன்னும், திருமதி।ரமனைச்சந்திரனின் வார்த்தைகளையும், இடையிடையே அவர் பயன்படுத்தியிருந்த முதுமொழிகளையும் ரசித்துக்கொண்டும், பெண்மையின் உணர்வுகள் இப்படித்தானிருக்குமோ என்று பலதடவை எனக்குள்ளே கேட்டுக்கொண்டும் படித்துமுடித்திருந்தேன்। இனிமேல், சந்தேகம் என்கிற வார்த்தையை கேட்டால் எனக்கு "அபராஞ்சி" தான் நினைவுக்கு வருவாள் போலிருக்கிறது, அவள் நினைவுக்குள் வந்தால் இலவச வெளிச்சம்தானே, வரட்டும்। காரணம் ஆவள்தான் புடம்போட்ட தங்கம் ஆயிற்றே!... ("அபராஞ்சி" என்றால் - புடம்போட்ட தங்கம் என்று பொருளாம்)

"கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" - பாரதி

2 comments:

அன்புடன் அருணா said...

அட!படிக்கணுமே!!

ப. அருள்நேசன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு
[என்று சொல்வதே வாடிக்கையாய்போய்விட்டது :)]

மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா