Saturday, April 17, 2010

பூ என்பது - ஒரு துறவி


கனவு, அது என் தலையில் ஏறி நின்று நடனம் புரிகிற ஒரு குளந்தை. எப்போது ஏறவேண்டும் என்பதுகூட அதற்குப் புரிவதில்லை. நான் சற்றும் நினைக்காத நேரத்தில் தன் குறும்புகளை என்மீது சுமத்தத் தொடங்கிவிடும். தூக்கம் அதன் வானம். மின்குமிழ்ச் சாத்தான்கள் விழுங்கிய இரவின் மீதி அந்தக் கனவுக்கு தாரைவார்க்கப்படுகிறது. ஏன்தான் விடிகிறதோ? இன்னும் கொஞ்சம் நீழக்கூடாதா இந்த இரவு ?...இப்படித்தான் என் ஒவ்வொரு விடியலும் அதன் ஜனனத்திலேயே வெறுக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, சிலதடவை மறுதலிக்கப்பட்டும் இருக்கிறது. பொய்யான் விடியல் என்று சொல்லி விடியலை வெறுக்கின்ற சிறகுகள் இருக்கமுடியுமா? சூரியன் கூடக் குளிர்ந்துபோயிருக்கின்ற பொளுதல்லவா அது!

அப்படி ஒரு பொழுதில் அலர்ந்த கனவிது, இந்தக் கனவில் நான் குளந்தையாக தவழ்ந்தேன் ஒரு பூ என்னோடு பேசியது

பூ என்பது - ஒரு துறவி

பூவே என்னோடு ஒருமுறை பேசு
உன்னைக் குறித்து எழும்
என் கேள்விகளால்
நான் மலர்ந்துவிடுகிறேன்
என்னோடு கொஞ்சம் பேசு

உன்னைப் பார்த்ததும் நான்
இதயம் இலேசாய் உணர்கிறேன்
உன் மென்மை ஸ்பரிசித்து வியக்கிறேன்
உன் அழகை அளந்து தோற்று நிற்கிறேன்

உன் அழகின் ரகசியம்தான் என்ன?
ஒருநாள் ஆயுள் என்று சொல்லி என்னை ஓரங்கட்டாதே!

OOO

பூ என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னது
இயற்கை - இயல்பாய் தோன்றுகிற எல்லாமே அழகுதான்
நீ - உனது உடலில் இருந்து
எண்ணங்கள் வரைக்கும் செயற்கையை கலந்துவிடுகிறாய்
அதனால்தான் என்னைத் தேடிவருகிறாய்

இப்போதும்கூட நான்
உன்னோடு பேசிக்கொண்டுதான் இருந்தேன்
நீதான் எதையும் புரிந்துகொள்ளவில்லை

OOO

எப்போது பேசினாய்?

OOO

நான் அளைக்காமலா என்னிடம் நீ வந்தாய்!

எனது மொழி உணர்வு.
என்னிடம் ஒலி கிடையாது
எனது வார்த்தைகளே மௌனம்தான்.
எண்ணிலடங்கா அர்த்தங்களை வெளிப்படுத்துகிறேன் நான்.
நீயாகத்தான் உனக்கான பெருளை என் உணர்விலிருந்து
சேகரிந்து - வார்த்தைகளாக்கிக் கொள்ளவேண்டும்.

உனது மொழி வார்த்தைகள்
ஆனாலும் உனது வார்த்தைகள் தரும் உணர்வு எனக்கு
நன்றாகவே புரிகிறது.

எனக்கு இதயமில்லை
ஆனால் நேசமிருக்கிறது

சொல்லிவிட்டு தென்றலின் கைகளால் என்
முகம் வருடியது பூ.

OOO

மனிதன் நினைத்தால் எதுவும் முடியும்
இந்தப் பூமியை ஆழ்வதே அவந்தானே
நீங்கள் அவனால் ஆழப்படுவதற்காகவே படைக்கப்பட்டவைகள்
என்பது குறித்து நீங்கள் கவலைப்பட்டதுண்டா

OOO

பூ மீண்டும் புன்னகையோடு சொன்னது
மனிதன் நினைத்தால் எதுவும் முடியும் - சரி இருக்கட்டும்
எதிலாவது நீ திருப்த்திப்பட்டதுண்டா?

நாங்கள் உடல் வளர்கின்றோம்
உங்கள் உடலுக்குள் ஆசைகள் வளர்கின்றன

ஆழ்வதால்தான் பிளவும் பேதமும்
எங்களுக்குள் யுத்தமில்லை ஆதலால் நாங்கள் கவலைப்படுவதில்லை.

OOO

மனிதன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான்
சிரிக்கின்றான் அழுகின்றான்
சந்தோசங்களில் சிலாகிக்கின்றான் அது உங்களால் முடியாதே!

OOO

எங்களுக்கு ஆசைகளே இல்லாதபோது
உணர்வுகளை விற்கவேண்டிய தேவை ஏது?

OOO

அப்படியானால் நீங்கள் துறவிகளா?

OOO

ஆம் - உங்களது வரைமுறைகளில்
சிலவேளை நாங்கள் துறவிகள்தான்

OOO

ஆனால் நீங்களும் உறவுகொள்கிறீர்களே
மக்ரந்தச் சேர்க்கை என்பது மனித உடலுறவுக்கு ஒத்ததுதானே!

OOO

மகரந்தச் சேர்க்கை என்பது
எங்கள் தொழில்
எங்கள் பிறப்பின் தேவையாக மட்டுமே அதை நாங்கள் கருதுகிறோம்
எங்களைப் பொறுத்தவரையில்
உறவு என்பது வேறு இனவிருத்திக்கான தொழில் என்பது வேறு.

OOO

எப்போது உங்கள் பிறப்பு அர்த்தமுள்ளதாகி விடுவதாக உணர்கிறீர்கள்
கடவுளின் சுருபக் காலடியில் விழும்போதா?
இல்லை மரணித்தவர்களுக்கு மாலையாகும்போதா?

OOO

இரண்டிலும் இல்லை

கடவுள் என்று சொல்லி நீங்கள் எங்கள் பாதி ஆயுளைப் பறித்து
கற்சிலைகளை அலங்கரிக்கிறீர்கள்

வாழும்போது ஒரு மனிதனின் மனதை
அமைதியடையச் செய்யும் எங்களை
ஆவிபிரிந்த உடலுக்குச் சாத்துகிறீர்கள்
எந்தவகையில் அவனுக்கு நாங்கள் உதவமுடியும்?

OOO

அப்படியானால் எப்போதும் புன்னகைத்திருக்க உங்கலால் எப்படி முடிகிறது?
அப்படி எதில் திருப்த்தி கண்டுவிட்டீர்கள்?

OOO

பூமியை அழகாக்குவதில்...
மனிதனை நேசிக்கத்தூண்டுவதில்...

மனிதனின் நேசத்தின்டையாளம் - பூ
என்பதே எமது புன்னகைக்கான காரணம்


OOO

பூவே நீ என்னைப்போல எல்லா மனிதனிடமும் பேசு.
அப்போதுதான் நேசம் மலரும்,
எங்களிடம் நிஜமான நேசம் இல்லை இயல்பான காதல் இல்லை.
சுயனலத்தால் உடந்ந்துபோனோம் பிளவுபட்டோம் அழிந்துகொண்டிருக்கிறோம்

கடைசியாக மனிதனிடம் சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?

OOO

ஆம்,

உண்மையான நேசத்தை வெளிப்படுத்துங்கள்.

இந்தப் பூமிதான் உங்களின் வீடு அதை பிளவுபடுத்தாதீர்.