Monday, September 21, 2009

நிறம் மாறாத நினைவுகள்


இது ஒரு பிரபல்யமடையாத உன்னதமான ஒரு மனிதனின் கதை. அலங்காரங்கள் சூடப்படாமல் எழுதப்படுகிற ஓர் இளைஞனின் வரலாறு. எனது எழுத்துக்கள் அவருக்கு மரியாதை செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைகிறேன்.

எடின் ஜூட், ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை. அவருக்கு மூத்த சகோதரி ஜூடித், அவர்கள் எப்போதும் நண்பர்களைப்போலவே பழகுவார்கள். அன்பு மட்டுமே தெரிந்த அம்மா, பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றித்தர எப்போதும் தயாராயிருக்கிற அப்பா, இதுதான் எடினின் அமைதியான குடும்பம்.
எடின் தனது விருப்பங்களை எப்போதும் தனது பெற்றோரிடம் எடுத்துச்சென்று சம்மதம் பெற்ற பின்னரே எதையும் செய்வான். ஆனால் யூடித், தான் நினைத்ததை செய்தேமுடிக்கும் பிடிவாதக்காரி. படிப்பில் இருவரும் மிகவும் திறமைசாலிகள், எடின் படிப்பு மட்டும் அல்லாமல் நல்ல மேடைப்பேச்சாளனாகவும் இருந்தான்.

அப்போது எடின் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தான், வசிட்டர்கள் வாயால் இவன் "பொறியியல் பீடம்" செல்வான் என்று முத்திரை குத்தினார்கள். வசிட்டர்களுக்கு திறமைசாலிகளை அடையாளம் காணத்தெரியுமே தவிர வருங்காலத்தை எதிர்வுகூறவா முடியும். அந்த நாட்களில் எடின், கம்யூனிஸம், பொருளாதாரம், அரசியல், சமுகவியல்..... என்று தேடித் தேடி படித்து அனல் பறக்க மேடைகளில் பேசிக்கொண்டிருந்தான்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் எடின் பாடசாலை முடித்து வீட்டுக்கு வருகிறான், உடைகளை மாற்றிக்கொண்டு நேராக தாயிடம் செல்கிறான். " அம்மா, நான் போராட்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்ளப் போகிறேன்" என்று சொல்கிறான். தாய் அதிர்ச்சிகலந்த வேதனையோடு அமைதியாய் இருக்கிறாள். "அம்மா, ...." அவன் அவள் காலடியில் வந்து அமர்கிறான். "அப்பாவை கேட்டிட்டு போப்ப்பா" அவன் தலையை வருடியபடி எங்கோ வெறித்தபடி சொல்கிறாள் தாய். அவன் வளமையான புன்னகையோடு எழுந்து செல்கிறான்
எடின் அப்பாவின் அறைக்குள் செல்கிறான், "அப்பா உங்களோட ஒரு விசயம் பேசவேணும்"
தந்தை, புரட்டிக்கொண்டிருந்த பத்திரிகையை ஓரமாக வைத்துவிட்டு கேட்கிறார் "என்னப்பா என்ன விசயம்..... என்ன வேணும் கேளுங்கோ" வரப்போகிற துயரத்தை அறியாமலே தந்தை அவனது முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். "அப்பா நான் இயக்கத்தில சேரலாம் எண்டு இருக்கிறன்" அந்த நிமிடத்திலேயே எரிமலையாய் வெடித்துப்போனவர், எந்தவித சஞ்சலமும் இல்லாமல் கேட்கிறார் " நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுத்தநீங்களோ"

ஓம் அப்பா, நான் முழுத்திருப்தியோடதான் இதைச்சொல்லுறன்"

ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு தந்தை சொல்கிறார், "சரி, உமக்கு எது சரி எனத் தெரிகிறதோ அதையே செய்யும்"

எப்ப சேரப்போறீர்"

இண்டைக்கே,.... அப்பா போட்டுவாறன்!

"போட்டுவாங்கோ"

இவைதான் அவனது வாழ்வின் மிகக் கனதியான உரையாடல். அவனது வாழ்வின் பாதையை மாற்றிய துடுப்பு விசை. அந்த நிமிடம் தான் அவனது குடும்பத்தின், வசந்தகாலத்தின் முடிவு என அவன் எண்ணிப் பார்த்திருந்திருப்பானே என்னவோ?

வீட்டில் ஒருத்தருக்கு ஒருத்தர் அவனது பிரிவின் வேதனையை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்கள். நாட்கள் நகர்ந்தன, ஒரு வருடம் ஓடி மறைந்தது. ஒரு போராளியாக விடுமுறையில் வருகிறான் எடின். மகனைப் பார்த்ததும் தந்தைக்கும் தாய்க்கும் மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எடின் தனது சகோதரியை ஒருவாறாக சமாதானப்படுத்திவிட்டு, தனது அறைக்குள் நுழைகிறான். அவன் வைத்துவிட்டுப்போன பொருட்கள் ஒவ்வொன்றும் அப்படியே அந்தந்த இடத்தில் இருக்கின்றன, ஆனால் தூசியோ ஒட்டடையோ படராமல் அப்போதுதான் அவன் வெளியே போய் வருவதுபோல் காட்சியளிக்கிறது அறை. அவனது பெற்றோருக்கும் சகோதரிக்கும் அந்த அறைதான் மகனாகவும் தம்பியாகவும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறான். கண்கள் பனிக்க வாசல் கதவில் சாய்ந்து நிற்கிற சகோதரியை பார்க்கிறான், அவள் புன்னகைத்தபடியே சொல்கிறாள் "எடின் நல்லா படுத்து தூங்கும் காலையில் சந்திப்போம்.. குட்நைட்"

கதவை சாத்திவிட்டு அறையை சுற்றிப் பார்த்தபடியே பழைய ஞாபகங்களோடு கலந்துபோகிறான். உணர்ச்சி பெருக்கோடு அவனது இரகசியங்களின் பேளையாக இருந்த அலுமாரியை திறக்கிறான் அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. சின்ன வயசிலிருந்து அக்கா யூடித், எடினோடு சண்டைபோட்டுக்கொண்டு பிடிவாதத்தோடு பறித்து வைத்திருந்த பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அவை எடினுக்கு மிகவும் விருப்பமாயிருந்த பொருட்கள். அன்றிரவு அவனது சௌகரியமான கட்டிலில் கூட அவனால் தூங்க முடியவில்லை. நினைவுகள் முட்களாயிருந்தன, உறவுச் சிலுவையில் அன்பின் ஆணிகள் அவனை அறைந்துகொண்டிருந்தன.

அவன் விடைபெறும் நாள் வந்தது. யூடித், எடினிடம் கேட்கிறாள் "தம்பி நீர் இதில இருந்து விலகி வந்துவிடும், உமக்காக இல்லாட்டியும் அம்மா அப்பாவின் சந்தோசத்திற்காகவாவது..... எங்களுக்கு பயமா இருக்கு எடின்..."
எடின் பதில் சொல்கிறான், இல்லை அக்கா இது நானாகத் தெரிவுசெய்த பாதை, இப்ப நான் போயே ஆகவேண்டும், இதை நீங்களும் புரிந்துகொண்டேதான் ஆகவேண்டும்......
என் முழுவாழ்விற்கும் போதுமான அன்பை உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட திருப்தி எனக்கிருக்கிறது, நான் புதிய சூழலுக்கு என்னை பழக்கப் படுத்திக்கொண்டதை போல நீங்களும் நானில்லாத சூழலுக்கு உங்களை தயார்ப்படுத்தவேண்டும்" அவனது பேச்சைவிட அவன் சிரிப்பைத்தான் அதிகமாக கோபித்துக்கொண்டாள் யூடித். வார்த்தைகளால் மனங்களை வென்றுவிடுகிற சக்தியை கடவுள் உமக்கு கொடுத்திருக்கலாம், ஆனால் உமது நியாயங்கள் என்னிடம் எடுபடாது......என்று சொல்லிவிட்டு எழுந்துசெல்கிற அக்கவை பார்த்து, "பிடிவாதக்காற அக்கா" சொல்லிச் சிரிக்கிறான் எடின்.

ஆண்டுகள் கடந்தன, எடினின் குடும்பம் அவனது பிரிவால் தவிப்பதை மறந்து அவனது வரவிற்காய் காத்திருக்க தொடங்கியிருந்தது. இம்முறை அவனது வருகை புதுமாதிரியாக இருந்தது. ஒருநாள் காலை பத்திரிகை வாங்கிவந்த தந்தை அதை இரண்டுமுறை புரட்டிவிட்டு, அதை ஒரு ஒரத்திலே தூக்கிப் போட்டிருந்தார். இதை அவதானித்த யூடித் பத்திரிகையை எடுத்து என்ன செய்தியாக இருக்கும் என்று தேடுகிறாள், "எடின் யூட் என்றளைக்கப்ப்படும்.............நேரடிச் சமரில் வீரச்சாவடைந்தார்........" மீண்டும் மீண்டும் படிக்கிறாள் யூடித் " தம்பீ......" ஒலித்தடங்கியது வெறும் குரல் மட்டுமாயிருந்திருக்குமா!

அந்தச் செய்தி மிச்சமிருந்த இன்பங்களையும் பிடுங்கிக்கொண்டதன் பிறகு துயரத்தின் முழுமையான பிம்பத்தை ஒட்டிக்கொண்டது அந்த வீடு. மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியே அவனது தாயின் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறது, தந்தை நோய்வாய்ப்படுகிறார், யூடித் தனது உயர்கல்வியை பாதியிலே நிறுத்திக்கொள்கிறாள்.
இரண்டு ஆண்டுகளில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுகிறது, சமாதாச் சூழல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. யூடித் தந்தையை அழைத்துக்கொண்டு எடினின் கல்லறையை பார்க்க வருகிறாள். அங்கே அவனது அணிப் போராளிகளை கண்கிறார்கள்

நாங்கள் அவரை " கண்ணாடி அண்ண " எண்டுதான் கூப்பிடுவம், நல்ல மனிதர் அவர், சண்டை நேரம் தவிர்த்து எங்களோட அவரும் ஒருஆளா தான் இருப்பார். அவரிட்ட இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட விடயங்கள் நிறைய, அவர் ஒரு நல்ல ஆசான். ஆனால் நாங்கள் அவரை இவ்வளவு விரைவில் இழந்துவிடுவோம் என்று நினைக்கவில்லை.
அண்டைக்கு ஆமி எங்களை சுத்திவளைச்சிட்டான், வெளியால வர இருந்த ஒரு வழியையும் நெருங்கிக்கொண்டிருந்தாங்கள். அப்பதான் கண்ணாடி அண்ண சொன்னார், நான் வாறன் நீங்கள் முதல்ல வெளியேறுங்கோ" அவரோட ஒரு பத்துப்பேர் தான் அப்ப இருந்தாங்கள், எங்கள போகச் சொல்லீட்டு அவர் வாறவனை மறிச்சு அடிக்க தயாராகீட்டார், அவர முதல்ல வெளியேறச்சொல்லி நாங்கள் எவ்வளவு கேட்டும் அவர் கேக்கேல்ல, அவற்ற கட்டளையை எங்களால மீற முடியேல்ல. அவர் சண்டையை தொடக்க நாங்கள் அந்த நேரத்தில வெளியால வந்திட்டம். அவர் அடிச்சுக்கொன்டே எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கேக்க ஆமீன்ர செல்லில பீஸ் பட்டு அந்த இடத்திலயே வீரச்சாவடைஞ்சிட்டார். சரியான சிரமப்பட்டுத்தான் அவற்ற உடல மீட்டுக்கொண்டுவந்தனாங்கள்." களத்தில் நடந்ததை கண்கள் கசிய சொல்லிமுடித்தான் ஒரு போராளி.

அப்போதுதான் எடின், ஐம்பது பேர் கொண்ட அணியின் தலைவனாக இருந்திருக்கிறான் என்பதே தெரிய வந்தது. அன்றைய தினம், கார்த்திகை 27., இராணுவ மரியாதையோடு அடக்கம்செய்யப்பட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒரு நிமிடம் தீர்த்தக்கரைபோல திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் பேரமைதி விழுந்து சத்தங்களை எல்லாம் சிறை செய்து செல்கிறது. பின்பு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. சந்தன வாடையும் பூக்களின் புனிதமும் வீச, யூடித் றோஜாக்களால் தம்பியின் கல்லறையை அழகுசெய்துகொண்டிருந்தாள்.