Wednesday, February 2, 2011

நாத்திகக் கடவுள்


அந்த மனிதன்
மிகச் சோகமாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான்

அவன் காணவந்த மக்கள்
கோவில்களிலும் பள்ளிகளிலும் தேவாலயங்களிலும்...இருந்தார்கள்.

நீண்ட நாட்களாக அவன் வந்து போய்க்கொண்டிருந்தான்
யாரும் அவனை கண்டுகொள்ளவில்லை

அவனுக்குச் சொந்தமான நிலம்
அறுபட்டு சதைத் துண்டங்களாகக் கிடந்தது
அறுபட்ட நிலத்தின் இடையே
மனித இரத்தம் கசிந்துகொண்டிருந்தது

மக்கள் கூட்டம் கூட்டமாக - அந்த
அறுபட்ட நிலத்தில் நின்றுகொண்டு
அதன் எஜமானுக்கு
ஆராதனைகளையும் அபிசேகங்களையும் செய்தார்கள்

அதிலிருந்து கலைந்து கூடிய மக்களை பார்த்து
பரவசத்துடன் அவன் எழுந்து சென்றான்

அவன் அவர்களை நெருங்குமுன்
கலவரம் கட்டவிழ்ந்தது
நிலம் மீண்டும் அறுபட்டது

எதிர்ப்பட்டவர்கள்
அந்த மனிதனை வழிமறித்தார்கள்
"நீ எந்த மதம்"
எனக்கேட்டார்கள் - அவன்
"என்னிடம் மதங்கள் இருக்கவில்லை" என்றான்
"இவன் நாத்திகன்" என்று சொல்லி
எல்லோருமாய்ச் சேர்ந்து அவனை
அந்த நிலத்திலிருந்து தூக்கி எறிந்தார்கள்

யாகம் கலைந்து எழுந்தவர்கள் சொல்லிக்கொண்டார்கள்
சாத்தான்களும் அசுரர்களும்
தங்கள் கடவுளின் வருகையை தடுத்துவிட்டார்கள் என்று...