Thursday, December 25, 2008

கடலின் மக்கள்


வானம் பார்த்தபடி
மல்லாந்து கிடக்கிறாள்
கடல் இராட்சசி
வார்த்தைகளற்ற மொழியின்
சங்கீதம்
கரையின் நீளத்திற்கும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அலைகளின் கரங்களால்
தழுவிக்கொண்டேயிருக்கிறாள்
தன் மக்களை.

அவர்களுக்கு
கடலே தாய்
கடலே காதலி
கடலே சொந்தம் இன்னும்
கடலே தெய்வம்

அவர்களிடம் கண்ணீர் இருக்காது
கவலை இருக்காது

அந்த நாள்
அவளுக்கு என்ன துயரமோ…
என்ன கோபமோ…
என்ன நோய் தொற்றிக்கொண்டதோ…

இல்லை யார் மீது மோக வெறியோ…
அலைச்சேலையை
அவிழ்த்தெறிந்து அம்மணமானாள்
தலைவிரித்து கரைக்கேறி
தாண்டவமாடினாள்
தன் மக்களைத் தின்று
சக்கை துப்பினாள்
பூமியின் முதல் கர்ப்பம்
கலைந்து
சிதைந்து கிடந்தது
கரையெங்கும் பிணங்கள்…

முதன்முதலாய்
அலைகளையும் மீறிற்று
உலகின் ஒப்பாரிக் குரல்கள்
முதன்முதலாய்
பூமியே அழுதது
ஒருமுறை

சாதி
மதம்
இனம்
ஒன்றாகச் செத்துக்கிடந்தது

அவர்களின் சமாதிகள் மீது
மலர்ந்திருந்தது
மாசற்ற மனிதநேயம்
அத்தனை வலிகளையும்
வேதனைகளையும்
மெதுவாய் வருடிக்கொண்டு…

Wednesday, December 3, 2008

புல்வெளி

வார்த்தைகளின்
இடைவெளிக்குள்
சொல்லத் தெரியாத
எத்தனையோ தகிப்புக்கள்
ஏதோ ஒரு நிலையில்
எழுந்து
அதற்கான அர்த்தங்கள்
புரியாமலே
பனிபடர்ந்திருக்கிறது உணர்வு
தனித்தலின் வெளியை
வெறித்தபடி
மெலிந்தபடியே காத்திருக்கிறது
பசியோடு கனவுப் பறவை
அது
தனது பச்சை வெளியை
நெருங்கி
மேய்ந்து விடுவதான
ஆசையை
ஒடித்துக் கொண்டிருக்கிறது
மரக்கிளை ஒன்றின்
மீதிருந்து
ஒவ்வொன்றாய் தருணங்கள்
தப்பிப்போக
கனவை வானுக்கு விரித்துவிட்டு
தன் திசையை
துரத்தி
தூரத்தே தொலைந்து விடுகிறது
பறவை
ஒரு புளியாகி.....