Saturday, January 24, 2009

மலையடி வாசிகள்


பூமி தன்
புறமுதுகை உதறிக்கொண்டு
புரண்டு படுத்தது
வானில் இருந்து
சூரியன் ஓங்காளித்த
தணற் திரள்கள்
தரை மேல் விழுந்து
பொருமின
அரணாய் நின்ற
சுவர்களில் இருந்து
உயிர் வளிந்துபோக
அசுர பூதமொன்று
அசைந்துகொண்டிருக்கிறது
எஞ்சிய
துளிகளை எல்லாம்
சிலுப்பி எறிந்தபடி.
சரிந்துபோன
மலையின்
பாறைகளைச் சேர்த்து
தூக்கி நிமிதிவிடலாம்
என்கிற முனைப்போடு - தங்கள்
முதுகுகளை சொருகியபடி
உந்தும்
அதன் இடைவெளிகளுக்குள்
ஓடி ஒளிந்துகொண்டன
அதன் அடிவாரத்தின் மீதிருந்த
ஜீவராசிகள்
இராட்சத பூதம்
திசைகளெல்லாம் சேர்த்துக்கொண்ட
பெருமேனி சிலிர்த்தபடி
எழுகிறது
ஒரே மூச்சில்
மலையை அமுக்கித்த்
தள்ளிவிடலாமென....
அதன் சத்தங்களுக்குள்
மௌனித்துப் போயிருக்கிறது
சாவின் குரல்

Tuesday, January 13, 2009

சாத்தான் தின்னும் நகரம்


பரலோகத்திலிருந்து
தேவதைகள் வெளியேற
பிசாசுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன
புனித வாசலெங்கும்

தெருவழியாக
இழுத்துப்போய்
சூரியனைக் கொன்றுவிட்டு
திசைகளெங்கிலும்
வௌவால்களை தொங்கவிட்டு
விழாக்கோலம்
சூடுகிறது தேசம்

ஒருபோதும்
எழமுடியா பாதாளத்திலிருந்தும்
இன்னும் துரத்திக்கொண்டிருக்கின்றன
நரபலிவாசிகள்

முடிவிடம்
தெரிந்த ஒரு
தூரத்திற்கு
முடிவு தெரியாமல்
ஓடுகிறார்கள்
தம் தேசத்தினின்றும்...
ஆனைஇறாஞ்சிகள் தின்ற
உறவுகளினதும்
பிள்ளைகளினதும்
இரத்த வாடைகளினூடும்...

ஜபங்களாலும்
வேண்டுதல்களாலும்
நிறைந்துபோன
இரட்சணிய பூமி
இரணியம் புரள..
வானிலிருந்து
வரங்கள் வருமென்று
நம்பியிருந்தவர்கள்
தங்கள்மீது செய்யப்பட்ட
சாபங்களை
சுமந்தபடி நடக்கிறார்கள்

சிறைப்பிடிக்கப்பட்ட அழகி
முன்
இரத்தமும் சதையும் படைத்து
சாவோடும் அவலக்கிலிகளோடும்
வென்று
சாம்ராச்சியமேறுகிறான்
சாத்தான்

Monday, January 5, 2009

என் ஒருவனுக்குள்

வசதியாய்
அகதியானேன் - வழியிலே
வழிப்பறி
தெருவெலாம் நீ
மலர்த்திய இராணுவம்,
என் சுதந்திர
தேசமெல்லாம் கைப்பற்றி
எனை வென்று கைதியாக்கி
சிறைக்கெய்தினாய்

நீ எனக்கு
திறந்து விட்ட - என் கனவுகளின்
பூ வனத்தில் - உன் காவலர்
துப்பாக்கி
பூக்களை அறுவடை செய்கின்றது.
என் இருதய இருதயம்
வேகம் பிடித்து
மூச்செறிகிற சுருதியில்
காற்றை சூடாக்கி
நீ சுகம் காண்கிறாய்.
அடுத்து
எனன செய்யப் போகிறாய்.
எல்லாமும் இழந்து விட்டவனிடம்
இன்னும் என்ன
தேடுகிறாய்.
எத்தனை முறை
அழிக்கப்பட்ட பிறகும்
மீண்டுவரும்
சூட்சுமத்தை தவிர
அத்தனையும் நாம் இழந்துவிட்டோமே

இப்போதெல்லாம்
ஒவ்வொரு
தெரு முனை கடக்கிறபோதும்
ஒலி பெருக்கி பொருத்தி
என் ஒருவனுக்குள்
ஒலிக்கிற
உயிரின் ஓசை - நீ
மரணம் அல்லது ஜனனம்
எது வென்று தீர்மானிக்கிற
உன் விழி வீச்சின்
சோதனைச் சாவடியில்....