Thursday, December 25, 2008

கடலின் மக்கள்


வானம் பார்த்தபடி
மல்லாந்து கிடக்கிறாள்
கடல் இராட்சசி
வார்த்தைகளற்ற மொழியின்
சங்கீதம்
கரையின் நீளத்திற்கும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அலைகளின் கரங்களால்
தழுவிக்கொண்டேயிருக்கிறாள்
தன் மக்களை.

அவர்களுக்கு
கடலே தாய்
கடலே காதலி
கடலே சொந்தம் இன்னும்
கடலே தெய்வம்

அவர்களிடம் கண்ணீர் இருக்காது
கவலை இருக்காது

அந்த நாள்
அவளுக்கு என்ன துயரமோ…
என்ன கோபமோ…
என்ன நோய் தொற்றிக்கொண்டதோ…

இல்லை யார் மீது மோக வெறியோ…
அலைச்சேலையை
அவிழ்த்தெறிந்து அம்மணமானாள்
தலைவிரித்து கரைக்கேறி
தாண்டவமாடினாள்
தன் மக்களைத் தின்று
சக்கை துப்பினாள்
பூமியின் முதல் கர்ப்பம்
கலைந்து
சிதைந்து கிடந்தது
கரையெங்கும் பிணங்கள்…

முதன்முதலாய்
அலைகளையும் மீறிற்று
உலகின் ஒப்பாரிக் குரல்கள்
முதன்முதலாய்
பூமியே அழுதது
ஒருமுறை

சாதி
மதம்
இனம்
ஒன்றாகச் செத்துக்கிடந்தது

அவர்களின் சமாதிகள் மீது
மலர்ந்திருந்தது
மாசற்ற மனிதநேயம்
அத்தனை வலிகளையும்
வேதனைகளையும்
மெதுவாய் வருடிக்கொண்டு…

Wednesday, December 3, 2008

புல்வெளி

வார்த்தைகளின்
இடைவெளிக்குள்
சொல்லத் தெரியாத
எத்தனையோ தகிப்புக்கள்
ஏதோ ஒரு நிலையில்
எழுந்து
அதற்கான அர்த்தங்கள்
புரியாமலே
பனிபடர்ந்திருக்கிறது உணர்வு
தனித்தலின் வெளியை
வெறித்தபடி
மெலிந்தபடியே காத்திருக்கிறது
பசியோடு கனவுப் பறவை
அது
தனது பச்சை வெளியை
நெருங்கி
மேய்ந்து விடுவதான
ஆசையை
ஒடித்துக் கொண்டிருக்கிறது
மரக்கிளை ஒன்றின்
மீதிருந்து
ஒவ்வொன்றாய் தருணங்கள்
தப்பிப்போக
கனவை வானுக்கு விரித்துவிட்டு
தன் திசையை
துரத்தி
தூரத்தே தொலைந்து விடுகிறது
பறவை
ஒரு புளியாகி.....

Wednesday, November 12, 2008

கண்ணீரோடு கலந்து போகிறது இன்னுமொரு தீபாவளி

வழமைபோல் சில புன்னகைகளையும் நிறையவே வருத்தங்களையும் சுமந்து கொண்டு கடந்து போகிறது தீபாவளி. இந்தநாள் தமிழனுக்கு மிக முக்கியமான நாள். சமய கலாச்சார சம்பந்தமான மிக முக்கியமான நாள் மட்டுமன்றி அனேகமாக தமிழன் சந்தோசமாக இருக்கின்ற ஒருநாள் இது. நாம் எமது இனிமையான பொழுதுகளை இப்படியான ஒரு சில நாட்களில் நிரப்பி ஞாபகங்களாக மாற்றி வைத்திருப்போம். ஒரு காலத்தில் தீபாவளி தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு இப்படியான நாட்கள் வருகிற போதும் சரி நம்மை கடந்து போகிற போதும் கடந்துவிட்ட பிறகும் சுகமான அனுபவத்தை அல்லது ஒரு இனிய உணர்வையே தருவதாகவே இருந்தது. எமது மக்கள் தமது எதிர்காலத்திற்காக சேமிக்கிறார்களோ இல்லையோ வருகிற தீபாவளிக்காவது சேமிப்பார்கள்.

அவ்வளவு இன்பம் நிறைந்த இந்த தமிழ்க் கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் நாள் சில காலமாக வேதனைகளை மட்டுமே விட்டுச் செல்கின்றது இன்பத்தை மட்டுமே நிரப்பி வைத்த அதே நாளில் இன்று துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் எமது மக்கள்.

இம்முறையும் தீபாவளி வந்தது. அணைந்து கிடக்கின்ற எங்கள் வாழ்க்கைத் தீபத்தை ஏற்றத் தெரியாத வருத்தத்தோடு அது கடந்து போகிறது. எம் மக்கள் பாவம் என்ன செய்வார்கள். எண்ணை தீர்ந்த பிறகு, எண்ணை தீர்ந்த பிறகு எங்கள் உயிர்த்திரிகளும் கருகிய பிறகு அவர்கள் எப்படி தீபமேற்றி வரவேற்பார்கள். அதனால் இருட்டினிலே கடந்து போகிறது ஓர் தீபத்திருநாள். ஒருபுறம் ஈழதேசத்தின் வன்னிப் பெருநிலப் பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் தம் ஊரை, உறவுகளைப் பிரிந்து உடமைகளை இழந்து மரங்களுக்கு கீழேயும், மழையிலும், வெய்யிலுமாய் உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் படும் அவலங்களும் மறுபுறம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் கடத்தப்படுதல், இராணுவச்சோதனைகள் சிறைவாசம் எனச் சொல்லணாத்துயரிலும் அகப்பட்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

தமிழ் இனப் படுகொலைகளையும் இத்துணை துயரங்களையும் ஒரு பொருட்டாகவும் கொள்ளாத சர்வதேசம் தன்நிலை மறவாதிருக்க இம்முறை இந்தியா தீபாவளிப் பரிசாக தமிழ்களுக்கு ஒரு அருமையான ஏமாற்று நாடகமொன்றை அரங்கேற்றியது. தமிழ் நாட்டரசும் இந்திய மத்திய அரசும் இணைந்து நடத்திய நாடகம் இன்னும் தொடர்கின்ற போதும் அதற்காக தன் மக்களையே பலிக்கடாவாக்கியது இந்திய அரசு.

தனது அடுத்த தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் இலங்கை அரசு, தனது பலத்தை, தமிழர்களைக் கொன்றொழித்து ஓரளவுக்கு நிரூபித்திருக்கின்ற இந்நிலையில், இந்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியும் தனது அரசியல் ஞானத்தைக் கொண்டு நிகழ்த்திய இந்த கபட நாடகத்தின் மூலம் வெளியுலகில் இருந்து தன்னைப் பாதுகாக்க கவசம் ஒன்றை மகிந்த ராஜபக்ஸ அரசுக்கு வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் ஆக்ரோசமாக பொங்கி எழுந்த கருணாநிதி கடைசியாக பெட்டிப் பாம்பாக அடங்கி கைவிரித்தார். தன் இயலாமையை தமிழர்களுக்கு தந்திரோபாயமாக காட்ட முயன்ற கலைஞர் கருணாநிதி உணவுப் பண்டங்களை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு தானமாகத் தர ஓப்புதல் பெற்றுக் கொடுத்தார். தமிழ் இனத்தின் தலைவர் என தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கலைஞர் இந்த நாடகத்தின் மூலம் மத்திய அரசுக்கு தனது பணிவையும் விசுவாசத்தையும் இன்னொரு முறை வெளிப்படுத்தவும் இந்த நாடகத்தை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் தனது வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை, மத்திய அரசில் நிலைத்து நிற்கும் உறுதிப்பாட்டையும் மேலும் ஒரு முறை வலுப்படுத்தினார்.

இந்தநிலையில் எப்போதும் தமிழர்களை ஜென்ம விரோதியாக இருதயத்தில் வைத்துக் கொண்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், நடிகையும் தமிழ்நாட்டு மக்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவருமான செல்வி ஜெயலலிதா தன் கொள்கையில் மிக உறுதியாக இருந்ததுடன் கலைஞரின் நாடகத்தை விளங்கிக் கொண்டிருந்ததோடு, தங்கள் உணர்வை வெளிப்படுத்திய (தமிழர்கள்) சிலரை சிறைக்கனுப்ப தன்னாலனவற்றை செய்துதவினார். இங்கே இவரின் விசேடமான பண்பு என்னவென்றால் தனது கொள்கையில் இருந்து எப்போதும் மாறாமல் ஒரே போக்கை கடைப்படிப்பதன் மூலம் ஆசியாவின் வியத்தகு பெண்மகளில் தானும் ஒருவர் என்ற பெயரை நிலைநாட்டியவர். அதை இந்த முறையும் சரியாக செய்து முடித்து தனது பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டு மக்கள் ‘செல்வி’ ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பதுதான் வேடிக்கையான தொன்றாகும். அம்மா என்றால் அன்பு அமைதி பாரபட்சமற்ற பாசம் தன்னை ஒறுத்து தன் குழந்தைகளை வளர்த்தல் என்ற பல பண்புகளின் சொல் அடக்கமாகும் என்பது தென்னிந்தியத் தமிழர்கள் அறியாதது ஒன்றல்ல. ஒரு அரசியல் தலைவன் அல்லது தலைவி இந்தப் பண்புகளைக் கொண்டிருப்பது எந்தவித்திலும் சாத்தியமில்லை. அப்படி இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர் ஒரு நல்ல தலைவனாகவோ அல்லது தலைவியாகவோ இன்னும் வழிகாட்டியாகவோ இருக்க முடியாது. Management Principles and knowledge இன்னும் Behavior of Leadership மற்றும் ; Political techniques புரிந்த அவற்றில் ஆளுமையுள்ள ஒருவரே ஒரு நாட்டின் தலமைப் பதவியில் இருக்க முடியும். மாறாக அம்மா பண்பு அல்ல என்றும் புரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். இருந்தும் அவரை ஏன் அம்மா என்று அழைக்கிறார்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது. இன்னும் செல்வி ஜெயலலிதா ஒரு கன்னி. ஆவர் திருமணம் செய்யவோ பிள்ளை பெற்றுக் கொள்ளவோ இல்லை. இருந்தும் அவரை அம்மா என்றழைப்பதற்கான நியாயத்தன்மை தான் புரியவில்லை.

இவர்கள் பற்றியெல்லாம் இங்கே பேசவேண்டிய காரணம், இவர்கள் சட்டங்களை ஆளும் வல்லமை கொண்டவர்கள், ஈழத்தமிழர்கள் மீது கரிசனை கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் என்பதனால் அவர்களையும் இங்கே நினைத்துப் பார்க்கின்றோம்.

இந்திய தமிழர்களினதும் ஆட்சியாளர்களினதும் கோபம் நியாயமானது தான். சகல நியாயங்களுக்குப் பிறகும், தம் இளந்தலைவனை இழந்த சோகம் இலேசில் மறக்காது என்பது நியாயம் தான். அதற்காக பரம்பரை பரம்பரையாக தங்கள் கோபம் மட்டுமே கடத்தப்பட்டு ஈழத்தமிழர்களை பழிவாங்குவது பொருத்தமற்றதாகும். அதற்காக, பழைய விடயங்களை மறந்து புதிய உறவை புதுப்பிப்போம் என்று எங்கள் பெரியவர்களும் கூட இறங்கி வந்து கேட்டாயிற்று. இந்திய அமைதி காக்கும் படை தமிழர்களுக்குச் செய்த அனியாயங்களையும், பெண்களின், தாய்மாரின் கற்பைத் தின்று போதைக்கு உயிரைப் பிழிந்து இரத்தம் குடித்ததையும் நாங்கள் மறந்து விட்டோம். இப்போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கு தேவை நிம்மதியான வாழ்வு. இந்தியர்களுக்கு நீயாயம் கற்பிக்கவோ பரிகாரம் செய்யவோ இப்போது அவர்களுக்கு நேரமில்லை என்பதை முதலில் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். தந்தை செல்வா பண்டா உடன்படிக்கையை நிறைவேற்ற இலங்கைக்கு இந்திய இளந்தலைவர் (மக்கள் மனங்களில் தலைவனாக கொண்டாடப்படுபவர், தலைவராக வர இருந்தார்) வந்திறங்கிய பொழுது இலங்கை இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் கொலைவெறியுடன் அவரைத் தாக்கினார். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் அதுவும் விமானத்திலிருந்தும் இறங்கும் நேரத்தில் நேரத்தில் நிகழ்ந்தது. ரஜீவ்காந்தியின் அதிஸ்டம், இலங்கை ஆட்சியாளர்களின் அதிஸ்டம், ஈழத்தமிழர்களின் துரதிஸ்டம், இரஜீவ் காந்தி தன்னைத் தாக்க வருபவனைக் கண்டு விலகிவிட்டார். தலைக்கு வந்தது தோழ்ப் பட்டையுடன் போக அவர் உயிர் பிழைத்தார். மன்னிப்புக் கேட்டது சிங்களம். அதை மறந்தது இந்தியா. அந்தக் கொலைப் பழி ஈழத்தமிழர் பெயரில் வரவேண்டும் என்று இருந்திருக்கின்றது. இல்லையேல் எப்போதோ தமிழீழம் மலர்ந்திருக்கும். இல்லை தமிழன் சுதந்திரமடைந்திருப்பான்.

இன்று அதே சிங்களத்திற்கு இந்தியா ஆயுதங்களைக் கொடுத்து தமிழனைக் கொல்ல ஆளும் கொடுத்து உதவுகின்றது. பகை மறக்காத (காந்தி) ரஜீவ் குடும்பத்துக்கு கிழட்டு வயதில் செல்லப் பிள்ளையாகிவிட்டார் தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர் கருணாநிதி. திருமதி சோனியா காந்தி பிரதமராகாமல் திரு.மன்மோகன் சிங்கை அந்தப் பதவியில் அமர்த்தியதற்காக கண்ணீர் வடித்த கலைஞர், காந்தி குடும்ப விரோதிகளான விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினரும் சமாதானப்பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியுமான திரு. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட போது தனது இரங்கலைத் தெரிவித்து, அன்புத் தம்பி என்று உறவு கொண்டாடவும் செய்தார். இப்படியாக தமிழ்த் தலைவன் தானே என சூடிக்கொண்ட பெயரை காத்துக்கொள்ளவும், மத்திய அரசின் அன்பையும் ஆதரவையும் பெற கலைஞர் எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்திய மக்களை வசப்படுத்தினாலும் ஈழத்தமிழர்கள் அது குறித்து கரிசனை காட்டுவதில்லை என்பதே இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஈழத்தமிழர்களின் ஒரே வருத்தம் இந்தியாவும் சரி ஏனைய நாடுகளும் சரி, ஈழப்பிரச்சினை மட்டில் நடந்துகொள்ளும் கேவலமான போக்குக் குறித்ததாகும். இலட்சக்கணக்கான படுகொலை செய்யப்பட்ட எம் மக்களின் சமாதிகள் மீதும், அவர்களின் சொல்லில் அடங்காத் துயரங்கள் மீதும் அவர்களின் சொல்லில் அடங்காத் துயரங்கள் மீதும் ஏறி நின்று தங்கள் அரசியலைச் செய்வதே எங்கள் வருத்தம்.

இப்படியாக உலக நாடுகளின் ஒத்துழைப்பையும், யுத்தத்திற்கு தேவையான சகல வசதிகளையும் பெற்று தமிழ் மண் ஆக்கிரமிப்பிலும் தமிழ் படுகொலைகளிலும் வெற்றிகளைச் சம்பாதித்து வீறு நடைபோடுகின்றது ராஜபக்~ அரசு.

இதற்கு முதலில் இருந்த இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இதுபோன்ற வெற்றிகளை சம்பாதித்து பின்பு ஒரே நாளில் தவிடுபொடியாகி நிலைகுலைந்து திக்குமுக்காடி நின்ற கதையும் எமக்குத் தெரிந்ததே. இன்று அவர் மோசடிக் குற்றச்சாட்டில் அகப்பட்டு தன் மக்களிடம் மடிப்பிச்சை ஏந்தவும் துணிந்து விட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் சிங்க மக்கள் போரின் மூலம் தமிழனை அடக்கி இலங்கையை தமது பூரண கட்டுப்பாட்டில் பௌத்த சிங்கள நாடாக்க முடியும் என்றே நம்புகின்றனர். படித்த சமூகமும் சரி பாமர மக்களும் சரி ஆட்சியாளர்களின் பிரச்சாரங்களினாலும், ஊடகங்கள் மீது அரசின் வலிந்த ஆக்கிரமிப்பினாலும் அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளையே நம்ப வேண்டும் என்ற கட்டாயத்தாலும், யுத்த பிரதேசங்களில் இருந்து அவர்கள் புறம்பாயிருப்பதாலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அனியாயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு சிங்கள மக்களுக்கு இல்லாதிருப்பதாலும் தமிழ் மக்கள் மீது நிரந்தரப் பகையுணர்வை அவர்கள் கொண்டிருக்கிறரார்கள்.

இது இப்படி இருக்கையில் நாட்டின் பொருளாதாரம் யுத்தத்தால் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றது. சாதாரண மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடினாலும் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்ற அரசின் மந்திரத்தை நம்பி அதன்பால் ஆறுலடைந்து கொள்கின்றனர்.

அண்மையில் இலங்கையின் இராணுவத் தளபதி கூறிய கருத்தாவது இலங்கை நாடு சிங்கள மக்களின் முழு உரிமையையும் கொண்டுள்ள நாடு. என்றும் ஏனைய சிறுபான்மை இனங்களை இங்கு வாழ தாம் அனுமதித்ததோடு மேலும் எந்த உரிமையை கேட்கவும் அவர்கள் தகுதியற்றவர்கள். என்றும் கூறியிருந்தார். அதனை ஹெல உறுமயவின் அரசியல் கட்சியினர் (பௌத்த பிக்குமார்) ஆமோதித்தும் அவரது கூற்றை வலுப்படுத்தியும் அறிக்கைகளை வெளியிட்டனர். ஏனைய சிங்கள அரசியல் கட்சிகள் அதனை நியாயப்படுத்தும் முகமாக நடந்து கொண்டனர். தமிழ் போராட்டம் குறித்தளவு பின்னடைவை அடைகின்ற போதெல்லாம் இவ்வாறான இனவாத தீவிரக்கருத்துக்களை வெளியிட சிங்கள சமூகம் தவறியதில்லை என்பது தெரிந்ததே. ஆரசியல் இலாபம் குறித்தும் மக்கள் திசை திரும்பக் கூடாது என்பதற்காகவும், சிங்கள ஆட்சியாளர்கள் கொடுக்கும் மிட்டாய்கள் இவை. ஆனாலும் சிங்கள சமூகம் அதை நம்பி அந்த மோகத்தில் தம்மைத் தொலைத்து விடுவதே வருந்தத்தக்க விடயமாகும்.

மாறாக நிண்ட பெரும் வரலாற்றை கொண்ட தமிழனைப் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தான் புரியவில்லை. புராணக் கதைகளில் சொல்லப்படுகின்ற (இராமாயணம்) இராணவன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டிருக்கின்றான். அத்தோடு இலங்கையின் இறுதி மன்னாக கண்ணுச்சாமி என்ற தமிழ் மன்னனே இருந்திருக்கின்றான் என்று வரலாறு கூறுகின்றது. அதைவிட எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன், என நீழும் தமிழ் மன்னர்கள் வரலாறுகளை சிங்களம் எப்படி மறந்திருக்க முடியும். அதுபோக இலங்கை பிரித்தானியரின் ஆட்சியில் இருந்த காலத்தில் சிங்களத் தலைவர்கள் அத்தனை பேரும் சிறைவைக்கப்பட தனி மனிதகாகப் பிரித்தானிய சென்று வாதாடி அவர்களை விடுவித்தார். சட்டத்தரணியும் தமிழ் தலைவர்களில் ஒருவருமான சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர் இலங்கை வந்தடைந்த போது இலங்கையின் பிரதான வீதியொன்றில் குதிரைகளை அவிழ்த்து விட்டு தேரில் வைத்து அவரை இலங்கையின் சிங்களத் தலைவர்கள் இழுத்துச் சென்றதை அவ்வளவு விரைவில் சிங்களம் மறந்திருக்க கூடாது. சேர்.பொன் இராமநாதனை தேரில் வைத்து இழுத்துச் சென்ற பெருமை திஸநாயக்க ஜே.ஆர் ஜெயவர்த்தன உட்பட அப்போதிருந்த அனைத்து அரசியல் தலைவர்களையும் சாரும் என்பதை இங்கே குறிப்பிடலாம். இரண்டாம் உலக யுத்தம் நிறைவுக்கு வந்தபோது ஆக்கிரமிப்பு நாடுகள் தங்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அப்போது பல சுதந்திரம் மிக்க நாடுகள் உருவாகின. பாரத நாடு பிரிந்து சுதந்திரமான இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளானது. இலங்கைத் தலைவர்களிடமிருந்து பிரித்தானியா ஆட்சியாளர்களினால் வினவப்பட்டது. பிரித்துத் தரவா? இல்லை ஒரே நாடாக இருக்கப் போகின்றீர்களா? ஏன்று இலங்கையில் அப்போது இருந்த தமிழ்த் தலைவர்களின் மனங்களை இலகுவாக வென்று விட்ட சிங்களத் தலைவர்கள் ஒரே நாடாக இருப்போம் என்ற சம்மதத்தை பெற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தி தமிழர்களைப் புறக்கணித்து அவர்களின் உரிமைகளை தரமறுத்து அவர்களின் சுயநிர்ணய உரிமையை பிடுங்கியெடுத்தது சிங்களம்.

இருந்தும் தமிழன் திறமையுள்ளவனாக காணப்பட்டதாலும், உயர்பதவிகளிலெல்லாம் தமிழனே காணப்பட்டதாலும் தமிழனை விழுத்த கல்வியில் கைவைத்தது சிங்கள அரசு. கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழகத் தெரிவை நடைமுறைப்படுத்தியது. இதன் காரணமாகவே ஈழப்போராட்டம் பல குழுக்களாகத் தொடங்கியது போராட்டம் ஆனாலும் சிங்கள அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒரே அமைப்பே ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக கொள்கை மாறாது சுதந்திரத்திற்காக இன்றும் போராடி வருகின்றார்கள் இந்த சங்கதி ஏதுவும் தெரியாத ஒருவர் இன்று இராணுவத் தளபதி என்பது தான் நகைப்புக்குரிய விடயமாகும்.

இது இப்படி இருக்க இலங்கையின் சிங்கள சமூகத்தின் ஒரு பகுதியினர் மேற்குலக கலாச்சாரத்தில் மூழ்கிப் போக பெரும்பகுதி பொருளாதார வீழ்ச்சியால் துவண்டு போயிருக்கிறார்கள். அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்து போரில் வெற்றி பெற்றாலும் பொருளாதாரத்தில் பாதாள வீழ்ச்சி கண்டு இப்பொழுது எழ முடியாமல் பள்ளத்தில் கிடக்கின்றது. போர்ச் சூழலில் அரசு கவிழ்ந்து போகும் நிலையில் உள்ளது. இதே நிலையை மிகச் சிறிய ஒரு வளர்முக நாடான இலங்கை எதிர்கொண்டிருக்கின்றது. அமெரிக்கா சுதகரித்து எழ காலம் எடுக்காது. ஆனால் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டால் இந்த வீழ்ச்சியில் இருந்து எழ குறிப்பிட்ட காலம் எடுக்கவே செய்யும். ஆனாலும் அரசு தன் முழுப் பலத்தையும் இன்னும் யுத்தத்திற்கே பயன்படுத்தத் தீர்மானித்திருக்கின்றது. இதுவரை காலமும் பெரிய எதிர்ப்பு எதனையும் காட்டாமல் (தந்திரோபாய) பின்னகர்வுகளை மேற்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் முழுமூச்சான பதிலடி ஒன்றைக் கொடுக்க முனைனவார்கள். உலக நாடுகளே வியந்து நிற்கும் ஒரு போராட்ட அமைப்பே விடுதலைப் புலிகள் அமைப்பு. மிகப்பெரும் படைப்பலத்தையும் வான்படை, கடற்படை தரைப்படை என முப்படைகளும் கொண்ட பலமான அமைப்பு அவர்களுடையது. யாராலும் எதிர்பார்க்க முடியாத போரியற் தந்திரோபாயம் தாக்குதல் வியூகங்களையும் மதிநுட்பங்களையும் அனுபவம் மிக்க மதிநுட்பம் நிறைந்த தலைவரையும் கொண்ட விடுதலைப் புலிகளை தேற்கடித்து தமது திட்டத்தை நிறைவேற்றுவது என்பது எந்தளவுக்கு சுலபமான காரியம் என்பது இலங்கை அரசுக்கே புரியும். அப்படி அவர்களின் பதில் தாக்குதலை இந்த நாடு எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்பதே அனைவரினதும் கேள்வியாக இருக்கின்றது.

இப்படியாக இழப்புக்கள் ஏமாற்றங்கள், வருத்தங்கள் இன்னும் கடந்த கால நினைவுகளோடும் ஒரு போதும் அழியாத கண்கள் நிறைந்த கனவுகளோடும் ஒரு தீபாவளி எங்களைக் கடந்து போகிறது. விடியல் ஒளியாக எங்கள் கண்களில் மின்னியபடி!!!!

Tuesday, November 4, 2008

தொலைந்த பக்கங்கள்


மனச்சேற்றில்
ஞாபகத் தாமரைகள்
பூத்திருக்க
பார்வை தொலைந்து
மௌனியாய் இருக்கிறேன் நான்
அறையின் நிசப்தத்தை
நிரப்பிக்கொண்டிருக்கிறது
யன்னலேறிக் குதிக்கும்
அடுத்த தெருவின் சலசலப்பு
நாங்கள் பேசி முடிந்த
வார்த்தைகள் மேசை எங்கும்
கசங்கிக் கிடக்கின்றன.
மீண்டும் - வெறுமை
வேதாளம் முருங்கை மரமேறி
கிளை ஒடிக்கிறது – விரக்தி
நேற்றைய பொழுதின்
ஞாபகப் பருக்கை ஒன்று
அடக்கமுடியாத ஆனந்தமாய்
விரிந்து விரிந்து
என் தனிமையை வெல்ல
போராடிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் நாம்
சந்திக்கும் தொலைவு மீதான
ஆவலின் தாபம்
எல்லையற்று வளர்ந்து
தீர்த்துக் கொள்ள முடியா
தவிப்பை சிந்திக்கொண்டிருக்கிறது மனசு
மழை விட்டும் நிற்காத
தூறலாய்

Saturday, October 18, 2008

“ஹலோ”


அன்றொருநாள் பூக்கள் பனித்துளிகளில் முகம் பார்த்து அலங்காரம் செய்யத் தொடங்கும் நேரம், நானும் அம்மாவும் தெரியாத தேசம் ஒன்றின் தொலைபேசி அழைப்புப் பொன்றுக்காய் காத்திருக்கின்றோம். அம்மாவுக்கு பழகி மறந்து போன ஆண்டுகளின் தூரம் பதினாறு. எனக்கோ எல்லாமும் புதிது, அன்று அலர்கிற அழகிய மொட்டைப் போல அதிசயமாய் எல்லாவற்றையும் பார்த்தபடியிருக்கின்றேன். நான் டெலிபோன் வயர்களுக்கூடாய் என் குரல் எப்படிப் போகும், பின்பு காற்றில் மின்காந்த அலைகளாய் பயணிக்கும், இப்படி நான் ஏட்டில் படித்த தொலைபேசியை வியந்து கொண்டிருக்கின்றேன். எப்படிச் சொல்வது உங்களுக்கு இது எனக்கு முதல் தடைவை. ஆச்சரியம், சந்தோசம் இவைகளையும் தாண்டி வெட்கம் நிரம்பி வழிந்து நான் கதிரையின் ஓரத்திற்கே வந்துவிட்டேன். கடைக்காரர் குரல் கொடுத்து என் நாடித்துடிப்பை இன்னும் அதிகரித்து உச்சத்தில் வைத்து விட்டார், “புஸ்ப்பவதி யாரு, உங்களுக்கு Call”! அம்மா எழுந்து சென்று Receiver ஐ எடுத்து காதுக்குச் செருகும் வரை என் இருதயம் அடிக்கவில்லை, மூச்சு வாசலும் அடைபட்டுவிட்டது. இதென்ன பூமி இயங்கவேயில்லை எனக்கு. அம்மா என்னிடம் Receiver ஐத் தரப்போகிற நிமிடத்தின் கனம் என் வயசுக்கு சுமக்க முடிந்த அதியுச்ச கனமாயிருந்தது. அப்போது தான் அம்மாவின் அந்த வார்த்தைகள் தொலைபேசி வயருக்குள் நுழைந்து கொண்டிருந்தது, “என்ர மகன் நிற்கிறான் கொஞ்சம் கதையுங்கோ” நான் புரியாதது போல் யார் என்றேன்! அம்மா, மாமா கதை என்றார். நானும் எழுந்து சென்று காதுக்குள் ரிசீவரைச் சொருகியபடி “ஹலோ” என்றேன்.

ஹலோ, இந்த Greating words இன் அர்த்தம் How long என்றும் அதன் திரிபே “ஹலோ” ஆக மாறியிருப்பதாக அறிந்திருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் சுரங்கத் தொழிலாளிகளிடம் அதிகாரிகள் பேசும் போது How long என்ற வார்த்தையை உரக்க கூறுவார்களாம் அது அவர்களுக்கு “ஹலோ” என்று கேட்கவே இந்தச் சொல் தோன்றியாக ஒரு சுவையான கதை ஓன்றும் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இப்போது இந்த வார்த்தையை கனடாவில் இருக்கும் எனது மாமாவிடம் நான் கூறுகின்றேன். அவருக்கு அந்த வார்த்தை அவரை விழிப்பதாக தோன்றியிருக்கும். எனக்குள்ளேயே அதன் அர்த்தம் இப்படியாக இருந்தது.
“மாமா எவ்வளவு தூரமாகிவிட்டோம் நாம்” உறவிலும் சரி, பூமியின் மேற்பரப்பிலும் சரி, நாம் எட்டமுடியாத் தூரம் என்பதைச் சொல்வதாய்ப்பட்டது எனக்கு. முதன்முதலில் தொலைபேசியில் ஹலோ என்ற விழிக்கும் சொல்லை அதன் உண்மை அர்த்தத்தோடு சொன்ன பெருமை எனக்குள்ளே செல்லச் சிரிப்பொன்றை உதிர்த்து அப்போது.

மாமா சில வார்த்தைகள் பேசினார். எல்லா அறிதலின் பொருட்டு என்னிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளாயிருந்தன. எனது பதில்கள் இருக்கிறம் சுகம், ஓம் என்கின்ற ஒற்றைச் சொல்லாயிருந்தது. முதல் தடவை பேசுவதால் மிகுந்த அன்பை அவரிடம் நான் உணர்ந்தேன். அவர் சில வாக்குறுதிகளை என்னிடம் முன்வைத்தார். அம்மா நமக்கு இவ்வளவு அன்பான நல்ல உறவுக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்களா? அம்மாவின் முகத்தை பெருமையோடு பார்த்தேன். “சே.. இத்தனை நாள் தவறி விட்டோமே, இழந்த அன்பை சுவைத்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள, என்று என் குழந்தை மனம் நொந்துகொண்டது, யதார்த்தங்கள் புரியாத அந்த பதினாறு வயது.

மீண்டும் அம்மா பேசிவிட்டு மாமியுடன் கதை என்றார். அந்தப் புகைப்படம் என் நினைவை சட்டென்று ஆக்கிரமித்தது. குண்டா சிவப்புச் சேலையில் அவங்களா?, கையில் ஒரு குழந்தை (தெரியாத என்ன) யாருக்கும் தெரியாமல் நான் அடிக்கடி ரசிக்கும் என் சின்ன தேவதை. என்னுடைய மச்சாள். வெள்ளை அடுக்குச் சட்டையில் பளீர் எனச் சிரிக்கும் சிம்ரெல்லா. இப்ப எப்படி இருப்பாள். வளர்ந்திருப்பாள். என்னை மாதிரியே பேசுவாளா? நான் எப்படிப் பேசுவது?
இப்படி நீளும் என் கனவுகளை இழுத்து நிறுத்தியது என் மாமியின் “ஹலோ” நானும் பதிலுக்கு “ஹலோ” என்றேன். எப்படி இருக்கின்றீர்கள்? என்றார் அவர். என் மூளையில் சட்டெனத் தோன்றி பட்டெனப் போட்டு உடைத்தேன் அந்த வார்த்தைகளை “உங்களுக்கு எங்களைத் தெரியுமா” இதயத்தில் இருந்து அறுந்து விழுந்தது வார்த்தை. மாமியும் இந்தக் கேள்வியை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் சற்று தடுமாறி, “போட்டோவில் பார்த்திருக்கிறேன்” என்றார். அப்போது என் இந்தக் கேள்வியைக் கேட்டேன் எனத் தெரியவில்லை அவர்களும் நம்மைப்போல், எம்மை நினைப்பார்களா என்று அறியும் ஆவலா, இல்லை பிரிந்திருக்கின்றோமே நாம் உறவுக்காரர்கள் தெரியுமா? என்று சொல்வதாக இருந்திருக்கலாம்.

மீண்டும் இன்னொரு தடைவை நான் பேச அழைக்கப்பட்டேன். இம்முறை நிச்சயம் அவள்தான். எனக்குள்ளும் இரகசியம் தந்தவள். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பொழுது மச்சாளின் பெயரைச் சொல்லிக் கிண்டல் பண்ணும் போதெல்லாம் எனக்கும் ஒரு சின்ன இராட்சசி மச்சாள் இருக்கிறாள் என்ற கௌரவம் தந்தவள் அவள்தான்.

“தம்பி அணுக்குட்டியோடை கதை” உறுதிப்படுத்தினாள் அம்மா. அனுஷா என்கிற எனது மச்சாளின் பெயரை வெட்டிக் குறைத்து கவர்ச்சியாய், நாவுக்கு இனிப்பாய் சொன்னாள் அம்மா. அட எனக்கும் இந்தச் செல்லப் பெயர் பிடித்திருந்தது. “ஹலோ” அந்தக் குரல் என் இருதயத்தில் தபேலாவும், நரம்புகளில் கிற்றாரும் வாசித்தது. அதற்குப் பிறகு எமது குரல்களில் எனது அம்மாவும், அவளது அப்பாவும் பேசினார்கள். வாலிபர்களுக்கு நடந்து விடக் கூடாத கொடுமை இது. இறுதியாக நாம் பரிமாறிக் கொண்ட வார்த்தை நல்லாப் படியுங்கோ! நீங்களும் நல்லாப் படியுங்கோ!

Sunday, October 12, 2008

விடுதலை வானம்

கொடியில் படபடக்கிறது
மனவசின் சல்லடைகள்
கனவிற்கும் நிஐத்திற்குமாய்
இடம்பெயர்ந்துகொண்டு – புத்தகத்
தாள்களைத் தட்டுகிறேன.
நாளைய 9.00 மணி
புகையிரதச் சத்தம்
இருதயத்தின் தொலைவில்
கேட்கிறது.
தொலைவானில் இன்னொரு
விடுமுறைச் சிறகுகள் கட்டவிழ்கின்றன.

இன்னும் ஒரு வருடத்திற்கான
அன்பை – அம்மாவின்
மடியில் தலைசாய்த்து
ஸ்பரித்துக் கொண்டிருக்கின்றேன்
பிரிவு இயலாமையின்
குரல் ஒன்று
ஒப்பாரிக்குத் தயாராகிறது

அறையின் உட்புறமாய்
தட்டுகிறது கடிகாரம்
சில மணிகளை பாய்ந்து கடந்து
நிஐத்தில் மீழ்கிறேன்
இன்னும் பாதை திறக்கவேயில்லை.
மீண்டும் அப்பிக்கொள்கிறது
வீடு செல்ல இயலாத் துயரம்

யன்னலைத் திறந்து
நுளையும்
என் பார்வையில்
மழை நனைத்த
செடிகளிலிருந்து
உதிர்ந்து கிடக்கின்றன
என் புன்னகைகள்

Saturday, September 13, 2008

மறு அழைப்பு - சிங்களத்திலிருந்து

ஐ.நா வே வெளியேறு
ஆட்டு மந்தை போல்
மனித உயிர்
வேட்டையாடப் போகிறோம்

களவு களவாய்
கொன்று - அந்த
ருசி வேகம் கொண்டுவிட்டோம்
பொய்யாடை களைந்து
மெய்யாகவே மேயப்போகிறோம்
புரிந்துகொண்டு விலகிவிடு

புலி வேட்டை என்று போய்
எம்மையே பலிகொடுத்த
பாவம் கழுவப்போகிறோம்
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று - தமிழனுக்கு
துயரம்தான் கொடுத்தோம்
இப்போதாவது
நின்மதி தர இடம்விடு
நித்திய அமைதி
அவன்
நேசித்த நிலத்திலேயே
நீறாகட்டும்

இதுவரை யாரும் செய்யவில்லை
சாட்சியத்தை அகற்றிவிட்டு
சத்தமில்லாமல்
முழுத் தமிழனுக்கும்
சங்கூத
யாருக்கும் தோன்றவில்லை

நாங்கள் செய்யப்போகிறோம்

வெள்ளைத்தோல் தோழா
அடிக்கடி நீ
எம் கள்ளம் கண்டுபிடிக்கிறாய்
நாய்க்குட்டி புண்பட்டாலே
அழுகிறவன் நீ
இந்த அக்கிறமங்கள்
சகிக்காது உனக்கு
அங்கிருந்து வந்துவிடு
சாராயமும் சொகுசு வீடும்
தருகிறோம்
இங்கிருந்து
எங்கள் கத்திக்கு காவலிரு
கொஞ்சக்காலம்

Thursday, September 4, 2008

கடவுள்க் கல்


எங்களுக்கு
எதற்காக கனவுகள்
இன்றைக்கோ நாளைக்கோ
அல்லது இன்னுமொரு பொழுதில்
உதிரப்போகிற
கடைசி மூச்சை காப்பாற்றும்
வல்லமை கூட
கிடையாது எம்மிடம்
பசிப்பதும்
வலிப்பதும் கூட
நியாயமற்றதாகிப் போனபிறகு
படிப்பும்
பலவர்ணக் கனவுகளும்
எதற்காக,
எங்களுக்கே இது
வேடிக்கைதான் - இருந்தும்
வருகிறதே என்ன செய்வது

உலக நியதிகளும்
சட்டங்களும்
எங்களையே கடிந்து கொள்கிறபோதும்
கடிவாளம் போடும் போதும்
கனத்து வருகிற
வேதனைகள்
கொட்டித் தீர்க்க இயலாது
கடவுள்க் கல்லையே
கழுவிப்போகிறது

காலம் எங்களை
எழுதாது போயிருக்கலாம்
ஏனோ
ஒரேயடியாக
அழிக்கக்கூடத் தெரியாமல்
சொட்டு வைத்துக்கொண்டு போகிறது
பொருளற்றுப்போன
வாழ்வை - சாவு
சப்பித்துப்பிக் கொண்டேதான் இருக்கிறது
எங்களுக்கான
கருணைப் படகை
நாங்களே செய்தாலும்
அவற்றை விழுங்கும்
பூத டோறாக்களும்தான்
படைக்கப்பட்டிருக்கிறதே...
அவற்றிலிருந்து மீண்டு
தப்பித்தாலும்
இந்தப் பூமியில்
எம்மைத் தாங்கும்
சுதந்திரமான
கரை ஒன்றிற்கு
நாங்கள்
எங்கே போவது...

Monday, September 1, 2008

இரண்டம் முகம்


தூக்கம் தொலைந்த
இரவொன்றில்
தலையணைக்குள் புரண்டு புரண்டு
அடம்பிடிக்கிறது கனவு
இருளின் கர்ப்பத்தில்
பிரசவம்பார்த்தவள்
போதாதென்று துப்பிவிட்டுப்போன
வெளிச்சம்
கசிந்து பரவுகிறது அறைக்குள்ளும்...
மனசுக்குள்
இனம்புரியாத அமழி
நிரவ
காதுகளில் அறைந்துகொண்டிருந்த
நிசப்தத்தை பிடுங்கிச் செல்கிறது
செல்போனில் கூவும் சேவல்

வழக்கம்போல
தூங்காத எனது
இரவை சுருட்டிக்கொண்டு
விடியாத நாள் ஒன்றுக்குள்
பயணிக்கத் தொடங்குகிறேன்...
நேற்றய கனத்தின்
மிகுதியை இறக்காமலே
இன்றைக்கான
பொழுதின் தேவைகளையும்
சுமந்துகொண்டு...

Sunday, August 10, 2008

இன்றுமுதல்



தேன் மொழியே
கனியிதழே
குளிர் வனமே
கொஞ்சும் நிலவே - மேனி
கூசும் தென்றலே
மெல்லத் தத்தும் மேகமே
நெருப்பூங்குவளைச் சூரியனே
கசங்காத வானமே
கரைகின்ற மழையே
மலரே
கடலே
அலையே
பூமி நரம்பு அருவிகளே
புல்வெளியே
வில்வானில் விளைந்த
வெள்ளிகளே
என்னையும் உங்களோடு
சேர்த்துக்கொள்ளுங்கள்
இன்றுமுதல்
நான் கவிதை எழுதுபவன் அல்ல
கவிப்பாத்திரமாகிறேன்
காரணம்
என்னயும் ஒருத்தி
காதலிக்கிறாள்

Saturday, July 19, 2008

தாயின் கருவறையிலும் கண்ணீரின் கசிவு




விடியல்

அவளுக்காக காத்திருந்த
நாட்களின் நெடிதுயிர்ப்பை
மரண வாசலில்
சிந்திப்போகிறது காலம்

ஓ என்
நேசக்கரப் பாலைவனங்களே
எம் நெருப்புச் சுனையில் இருந்து
சிந்தி
நீழ்துயில் கொள்ளும்
நித்தியகல்யாணிகளே
உங்கள் கனவுகளின் கருவறை
இன்னும் காலியாகவே
இருக்கிறதா....

காத்திருப்பு
ஒரு யுகத்தை கடந்துவிட்டது
விடியலை சுவீகரிக்கும்
எங்கள் கனவுகளில்
நரம்பு துடிக்க நாருரிக்கும்
வலிகள் - போதும்

நிறுத்துங்கள்
நிறுத்துங்கள்

இன்னும் எவ்வளவு காலம்
காத்திருப்பது
இன்னும் எவ்வளவு காலம்
இழப்பது
இன்னும் எவ்வளவு
இழ இரத்தங்களை
இந்த
மண்ணுக்கிறைப்பது
இன்னும் எத்தனை
உயிர் திரித்து
இந்ததேசத்தை ஒளிர்விப்பது

போதும்
நிறுத்துங்கள்

அவள் வருகிறாளோ இல்லையோ
காத்திருக்க
நாம் மிச்சமிருப்போமா தெரியாது

எங்களுக்கான தேசத்தில்
எங்களுக்கான வானத்தில்
எங்களுக்கான சூரியன் ஒன்று
எழுகிறத்தோ இல்லையோ
காண நாமிருப்போமா தெரியாது

நிறுத்துங்கள்

எங்கள் தாயின்
கருவறையிலும் கண்ணீரின் கசிவு

போதுமப்பா
நிறுத்துங்கள்

குளந்தைகளுக்கு பெற்ரோரே உலகம். பெற்ரோரே காவல். அவர்கள் மீதான நம்பிக்கையே குளந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிள்ச்சியாகவும் வாளவைக்கும் மந்திரம். நம் பெற்றோர்கள் நமக்காக வாள்கிறார்கள், அவர்கள் எமக்கு ந்ல்லதைத்தான் செய்வார்கள், அவர்களை மீறி எந்தத்துயரமும் எம்மை அணுகாது என்ற நம்பிக்கை, அன்பை, பாதுகாப்பை, இன்னும் மகிள்ச்சியை ஆறுதலை குளந்தைகள் பெற்றோரிடம் உணர்வதனாலேயே பால்யப்பருவம் பூந்தோட்டமாக மகிள்ச்சியின் கூடாரமாக இருக்கிறது.

நம் தேசத்தில் இந்த இயல்பு கெட்டுக்கிடக்கிறது. அதனால் தான் "எங்கள் தாயின் கருவறைக்குள்ளூம் கண்ணீரின் கசிவு" என்று எழுதினேன்.

எப்படிச் சொல்வது இந்த இயல்பு எப்படிக் கெட்டதென்று. எங்கள் பிள்ளைகளுக்கு அன்பை தந்தோம் பாதுகாப்பை தரமுடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி எங்கள் பெற்ரோர் மனங்களை எப்பொளுதோ கொன்றுபோட்டுவிட்டது. மரணத்துக்கான முற்கூட்டிய பதிவு கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து எம் பிள்ளைகள் சாவின் சாயத்தை முகத்தில் பூசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் புன்னகைத்தாலும் நெஞ்சின் நெருப்பொளிதான் அது.

" அம்மா என்னை விடச்சொல்லுங்கோ, அக்காவை கொண்டுவந்து குடுங்கோ"

"அம்மா அண்ணா பாவம் படிக்கட்டும், நான் போறன், அவனுக்குச் சொல்லாதேங்கோ கவலைப்படுவான். "

இப்படித்தான் எங்கள் குளந்தைகள் குரல், காதுவந்து சேரும். இந்தக் குரலில் இருந்து அன்பை எப்படி அளவிடுவது சொல்லுங்கள், சொல்லிக்கொண்டே சாவை சந்திக்க யாருக்குத்துணிவிருக்கிறது ஆனாலும் அன்பிற்கு, பசத்திற்கு உயிரை விலையாய் எழுதும் அதிசயமும் எங்கள்தேசத்தில் மட்டும்தான் நிகளும்.

இந்தக் குரலில் இரண்டாம் வகை என் தங்கையின் மனக்குரல் என்றால் நான் எப்படி அதிஸ்டக்காறன் என்று என்னைச் சொலிக்கொள்ள முடியும், என் மனச்சாட்சி அரித்து அரித்தே என்னைக் கொல்லுமே, இப்படி அண்ணன்கள் நிலை என்றால் அதை விட மோசம் அம்மாக்கள் நிலை. தான் பெற்ற பிள்ளையில் ஒன்றை சாவில் தள்ள, முடிவுசெய்ய வேண்டும். மகாபாரதத்தில் குந்திதேவிக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது, யாரை அரக்கனுக்கு இரையாய் கொடுப்பதென்று மனச்சஞ்சலத்திலிருந்து இறுதியாக அவள் வீமனை தெரிவுசெய்து அனுப்பியதாக கதை சொல்கிறது.இன்றைக்கு எம் தேசத்தில் அத்தனை தாய்மாரும் நிஜக் குந்திகள். வீட்டில் ஒரு குளந்தை வீமனாக்கப்படுகிறான். இது போன்ற சங்கடத்தை காலம் எம் அம்மாக்களுக்கு தந்திருக்கக்கூடாது

பாவம், அம்மாவால் என்ன சொல்லமுடியும், என்ன செய்யமுடியும், வரப்போகிற மரண அவலத்தை இப்பொளுதே சுமக்கத் தொடங்கிவிடுவாள்.இந்த உலகத்தை சபித்தபடி.
இந்த உலகம் எங்கள் கனவுகளை கொன்றுபோடுகிறது. எதை அனுபவித்தோம் நாம், துயரத்தை தவிர, எங்களிடம் வேறெந்த தடயத்தை இந்தக் காலம் விட்டுச்செல்லப்போகிறது என்கிற விரக்க்திதான் அவளை சபிக்குமளவிற்கு தூண்டியிருக்க வேண்டும். இப்படி, ஆரோக்கியமான சூழல் இல்லாத இந்தச் சமுகம், எப்படி அடுத்த தலைமுறைக்கு, புதிய நம் விடியலில் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இன்னும் நம் இனத்தின் வாழ்வியல் விழுமியங்களையும் மட்டும் எடுத்துச் செல்லப்போகிறது, இவை இல்லாமல் பிறகெப்படி நாம் ஓர் இனமாக எஞ்சுவது. பிறகெதற்கு நாடு.

ஆக இனத்தை விடவும், நாட்டைவிடவும், குளந்தைகள் வாழ்வே பாதுகாக்கப்படவேண்டியிருக்கிறது.


ஆதலால் தான் சொல்கிறேன்
நிறுத்துங்கள்

விடியல் மீது
எனக்கு மட்டுமென்ன ஆர்வமில்லயா

நானும் இதே மண்ணில் புரண்டவன்
நானும் இதே வீதியில்
பட்டாம்பூச்சி பிடித்துத் திரிந்தவன்
என் வாலிபக் கனவுகளும் இங்கேதான்

நீங்கள் சுவாசித்த
காற்றைத்தான் நனும் சுவாசிக்கிறேன்
என் நரம்புகளிலும் எரிமலையுண்டு.
ஒலிபெருக்கி பொருத்தி
என் ஒருவனுக்குள் ஒலிக்கின்ற
குரலும்
நீங்கள் கேட்கும் அதே
சுதந்திர தாகம் தான்
எங்கள் கூட்டுக்குள் நுளைகிற
வேட்டை நாய்களை காண்கிறபோது
எனக்கும் நாடி துடிக்கிறது

ஆனாலும் அன்பர்களே
எங்கள் குளந்தைகளை
ஒருதரம்
திரும்பிப் பாருங்கள்

காய்ந்து இறுகிய அந்த முகங்களில்
சோக வடுக்களை பாருங்கள்

அவர்களின் கண்களில்
விரிகின்ற கனவுகளின்
ஏக்கத் தகிப்பை ஒருதரம்
பாருங்கள்

நீங்களும் நானும்
இழந்தது இழந்ததுதான்

அவர்களாவது வாழட்டும்
அவர்களாவது கொஞ்சம் சிரிக்கட்டும்

நீங்களும் நானும்
இழந்தது இழந்ததுதான்

Friday, July 11, 2008

அணைந்துவிட்ட புன்னகை




காயத்திரி

நீ என்னோடு பேசிய வார்த்தைகள்
அவ்வளவு இருக்காது
ஆனால் உன்னிடம் நான்
சேகரித்த புன்னகைகள்
அதிகம்

அழகு என்றவார்த்தைக்கு
அர்த்தம் கொடுக்கும்
அழகு நீ

அறிவிக்கப்படாத
எம் ஊரின்
எம் பள்ளியின்
எங்கள் வகுப்பறையின்
அழகி நீ

கானமிசைத்தபடி
காற்றில் உன்
விரல்களின் நடனத்தை
கண்டு மயங்காத
காளைகள் கிடையாது
நம் தெருவில்

சித்திரா, யானகி அம்மா, பவதாரணி
இவர்களுக்குப் பிறகு
நான் ரசித்தது
உன் குரலைத்தான்

ஆனால் எங்கே நீ பாடினாய்....

வெட்கம் நிரப்பிவைத்த
பூங்குவளை நீ
கொங்சம் உறுக்கினால்
குழைந்து அழுதுவிடுவாய்

நீண்ட கருங்கூந்தல்
குண்டுக் கருவிழி நிலவுகள்
மெல்லிடை
அன்ன நடை
எல்லாம் அளவோடு கொடுத்திருந்தான்
ஆண்டவன்
அளவுக்கு அதிகமாகவே
அழகாயிருந்தாய் நீ

அரை வழியில்
அத்தனையும்
சேர்த்துப் பறித்துப்போய்விட்டான்
அவன்

அத்தனையையும் விட
உன் அமைதியும்
வார்த்தைகளுக்கு பதிலாக
நீ பரிமாறும் புன்னகைகளுமே
அழகு

இன்னொருமுறை
உயிர்த்தெழுந்த மோனலீசாக்கள்
உன் புன்னகைகள்

அத்தனையையும் விட
இருதயத்தில் இன்னும்
இறுக்குகின்ற நம் நட்பே அழகு


எம் கல்லூரியில்
எம் வகுப்பிலிருந்து
அணைந்துவிட்ட இன்னொரு
புன்னகை நீ

எம் தோழிகளில்
உதிர்ந்துவிட்ட
முதல் பெண் பூ நீ

தூங்கு சிநேகிதியே தூங்கு

விடியல்களில்லாத ஒரு
இரவினில்
கல்லறைத் தொட்டிலில்
கண்மூடித் தூங்கு நீ

காலமோ கடவுளோ
வந்து தட்டி
எலுப்புகிறார்களோ இல்லையோ
மனிதர்கள் உன்னை கிளறி எடுக்காதவரை
நீ நேசித்த
பூமியின் மடிமீது
தலை சாய்த்து தூங்கு நீ


உன் நினைவுகளை
தாங்கி நிற்கிறோம்
அமைதியாய் தூங்கு நீ

மெல்லினத் தமிழில் வல்லின வள்ளுவன்

வாங்க, என்ன வள்ளுவனையே வம்புக்கு இழுக்க வந்திட்டானா என்றா பார்க்கிறீங்களா, இன்றைக்கு வள்ளுவன் இருந்திருந்தால் எப்படி ஈரடி எழுதுவான் என்று ஒரு கற்பனை கதவு திறந்தது எனக்குள்ளே. வாசுகிகளே மன்னித்துக்கொள்ளுங்கள்....
தலைப்புகளை பார்த்து தலை தெறிக்க ஓடுறாங்க அதனாலதான் இப்படி எழுதினேன்

உலகம்

தாய்க்குருவி அனாதையாய் விட்டுப்போன
உயிர்க் குருவிகளின் கூடு

முஸ்லீம் பெண்கள்

முக்காடு போட்ட
முழு நிலவுகள்

தமிழ் பெண்கள்

நெற்றியில் திலகமிட்ட
நிறை மலர்கள்


வருவேன்

Saturday, June 28, 2008

வழியில்....

மீண்டும் வருகிறோம்

நீங்கள் வாருங்கள்! என்று
வரவேற்கப் போவதில்லை
என்பது தெரியும்
எங்களின் வரவு குறித்து
நீங்கள் மகிளாது போனாலும்
வெறுப்பையாவது
காட்டாதிருப்பீர்களா?....
என்பதுதான்
எங்களின் எதிர்பார்ப்பு

இதென்ன கேள்வி
அடித்துத் துரத்தப்பட்டவர்கள்
நாங்கள்
விடுமுறைக்கு சென்று வரவில்லை
வஞ்சகம் தீர்க்கப்பட்டவர்கள்
நாங்கள்
வாக்கப்பட்டு ( வாழ்க்கை பெற்ரு )
போகவில்லை
துரத்தியவனையே தேடி
வந்திருக்கிறோம்
அடிமையாக்கப்பட சமமதித்துக்கொண்டு

கருணையாவது கழிவிரக்கமாவது
கடைசிவரை கிடையாது
நமது மன்றாட்டங்களுக்கு மடிப்பிச்சை

வேறு வழியின்றி
வந்த்திறுக்கிறோம்

சுற்றிவரக் கடல்
ஒரு சிறங்கை நிலம்
அதற்குள் எங்குதான் ஓடி ஒழிவது
அதனால் எங்களை நாங்களே
காட்டிக் கொடுக்கிறோம்
இதோ நாம் என்று

இன்னொருமுறை
அவனுக்கு கொலைவெறி
எடுக்கிறபோது
இரத்த தாகத்தை
தீர்த்துக்கொள் என்றுத்தான்
எங்களைத் தருகிறோம்

அதுவரை எங்களை கொஞ்சம்
ஓரமாக இருக்கவிடு

சம்மதித்துவிட்டாய்
நீ சம்மதித்துவிட்டாய்
அரை மனமுமில்லை
கால் மனமுமில்லை
மனமேயில்லாமல் சம்மதிதுவட்டாய்

கோபம் வருகிறபோது
அடித்துத் துவைக்க
ஒரு கந்த்ல் கிடைத்திருக்கிறது
என்பத்ற்காக
சம்மதித்துவிட்டாய்

எப்படியோ
மீண்டும் வருகிரோம் நாங்கள்

கொலை செய்யப்பட்ட
எங்கள் புன்னகைகளையும்
தெருவழியே அவன்
அடிக்கடி
எம்மைக் கிழறிச் சோதனை செய்த
வலிகளையும்
தூக்கித் தோழ்மீது
சுமந்துகொண்டு வருகிறோம்

நாங்கள் யார் என்று
உங்களுக்காவது தெரிகிறதா
எதைத் தவறவிட்டாலும்
அடையாளங்களை மட்டும்
நாங்கள் மறப்பதில்லை

இதோ பாருங்கள்

வெய்யில் எங்கள் மேனியில்
எழுதிய கறுப்பு

செடிகள் எம் சோகம்
கண்டு
பூப்பூக்க மறுத்தாலும்
நிறுத்தாது
விழிகளில் பூக்கும்
கண்ணீர் மழலை முகங்களே
பொதுவான எங்கள் அடையாளம்

நெற்றியில் திலகமிட்ட
எம் அன்னையின் நாவில்
அமுது பொங்கும் தமிழே
எங்களின்
அடையாளம்

ஒரு யுகமாக
விடியாத வானத்தின் கீழ்
அடையுண்ட
ஈழ்த்தின் துயரம்
நாங்கள்

இதுவே எங்கள்
அடையாளம்

நீங்களும் பாருங்கள்

அவர்களுக்குத்தான்
எத்தனை முறை காட்டினாலும்
புரியவில்லை
தூக்கிப்போய் சிறயில் அடைக்கிறார்கள்
நிரூபிக்கப்படாத அடையாளங்களாம் நாம்

மீண்டும் வருகிறோம்

சிறயிலிருந்து

பல்களைக்களகத்திலிருந்து
துரத்தப்பட்டு
கலக்கப்பட்டு
சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட
தமிழ் மாணவர்கள்
விடுதலையாகி வருகிறோம்

உடமைகள் இழ்ந்து
வெறும் கையோடு...
மீண்டும் கனவுகள்
சேகரிக்கத் தயாராகிவிட்டோம்

எங்களைப் பார்த்து
வருத்தப்படுறீங்களா
நீங்க வேற....
இது எங்களுக்கு பளகிவிட்டது

உள்ளே நடந்தது சொல்ல
இப்ப நேரமில்லை
சொல்லச் சொல்ல
தீராது

வாசலை பூட்டிவிடுவார்கள்
அத்ற்குள் செல்லவேண்டும்

எந்தவாசலா!

றோட்டு வாசல்

அது உப்பிடித்தான்
பாதுகாப்பு என்று சொல்லி றோட்டை
மறிச்சு கதவு போட்டிருக்கிறார்கள்
பூட்டமுதல் போகவேணும்

வழியில் சந்தித்தோம்
வீட்ட வாங்கோ
நிறய பேசலாம்
வீடு இரவல் வீடுடுதான்
அகதிக்கு பிறகென்ன
அடுக்கு மாடியா வாசம்

போட்டுவாறன்

Monday, April 7, 2008

சகாரவின் புன்னகை

ஒரு மாலைப் பொழுதின்
மழை நனைத்த
நினைவுகள்
மூச்சுக்காற்றின்
உஸ்ணத்தில் காய்கின்றன
நிலவு
துண்டுகளாய் உடைந்து
சிந்திய முத்தங்களில்
மிதக்கிறது எனது புன்னகை…
மனசின்
அலைகளின் உதைப்பில்
கரையொதுங்கிய கனவு
சிறங்கை உணர்வைத் தாங்கி
எப்படியோ உயிர்த்துவிட்டதில்
வானம் முழுக்க
அதன் வர்ணங்களை
கிறுக்குகிறேன்
ஒளி தீர்ந்துபோன
இரவொன்றின் உடலுக்குள்
இட்டு நிரப்பமுடியாத
நிலவின் காட்சி
கிளறப்பட்டுக் கிடக்கிறது
விழிகளை விழிகளேவிழுங்கிக்கொண்டு...

என்றைக்கோ
நடைபழகி மறந்துபோன
முட்களின் தெருவில்
தெரிந்துகொண்டே
குதித்து ஓடுகிறது
நெஞ்சுக்குள்ளே இருந்து – ஒரு
குழந்தை.

எப்பொழுதோ
வலித்து ஆறிவிட்ட
எனது காயங்களிலிருந்து
இரத்தம் பீறிட
மீண்டும் எனது புன்னகையை
எழுத ஆரம்பிக்கிறேன் - என்
இரத்தத்தில் மையெடுத்து…

Saturday, March 22, 2008

உயிர்ப்பிரிக்கை

என்னை முழுமைப்படுத்தும்
சுதந்திரம்
கால்த்துண்டாய்
உடைந்து
அதுவும் தவறப்பட்டுவிட்டது
உணர்வுகள்
எதற்கும் ஒத்துக்கொள்ளாமல்
ஆன்மாவின் குரல்
உடலில் இருந்து வேறாகி
வாழ்வைக் குறித்து
ஒலிக்கிறது
இரு துருவப் புரிதலின்
இடையே
இப்படித்தான் என்
கேள்விகளும்
நான் எதைச் சார்வது
ஆன்மாவை....
அல்லது
உடலை....

உடலின் தேவைகளே
உணர்வுகளால்,
உருவமிலா உள்ளத்தால்
உணர்த்தப்படுகின்றன

தேவைகள் அடங்கா
நிகள்தல்களில் உடலை
நிகள்காலம் பீடிக்க
வெறுமனே
மனசு அமைதியாயிருக்கிறது
நித்தியத்தை நோக்கி
ஒரு துளி
ஒளியை பொசிந்குவிட்டு...

Tuesday, February 5, 2008

சுதந்திரப் பறவைகள்

சிதைந்து போன
நகரத்தின் சில்லில்
ஒட்டிக்கொண்டு உயிர் வாழ்கிறது
ஓர் இனத்தின்
எஞ்சிய விதைகள்.
ஆழ்கூறுகளும் பிடுங்கப்பட்டுவிட்டதால்
அதன் கோலங்கள்
கிறுக்கல்களாய் குமைந்து கிடக்கின்றன.
அவர்களின்
வாழ்வில் பாடலை
பறித்துக்கொண்டும்
சுரங்களை சப்பிக்கொண்டும்
வானமதிரக் கத்திக்கொண்டு இருக்கின்றன
களுகுகள்
ஆயானால் சபிக்கப்பட்டு
சாத்தான்களால் அர்ச்சிக்கப்பட்ட
இரத்தமும் சதையுமான
அதே பூமியில் - இன்னும்
நினைவுகள் கனவுகளால் ஆன
சிறகுகளில் மிதந்து கொண்டிருக்கின்றன - கூடுகள்
பறிபோன அவ்வூரின்
சுதந்திரப் பறவைகள்
ஏன்றைக்கோ ஒர் நாள்
வாழ்வு மீட்கப்படாதோ
என்ற ஆதங்கத்தோடு...…


[ தினக்குரல் பிரசுரம் ]

அடையாளங்கள்

மனசொளி மட்டும்
மீதமிருக்கிறது
எனது அடையாளங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்
இருளின் பாளங்கள்
இடிந்து இடிந்து
அவ்வப்போது
கண்களை மூடிக்கொள்ளும்
எப்படியோ
மங்கலான ஒளி
என்னுள் இருந்தே
கசிந்து கொண்டிருக்கிறது
சந்தோசமாகவே
நானும் வலிகளும்...
எனது இருத்லை
உறுதிப்படுத்தும்
வலிகளின் நீட்சியை
உணர்கிறேன்
இப்படியே
எனது பயணத்தொலைவு
தொடர்கிறது
ஆனாலும் கடந்துவிட
என் பாதைகளை
காற்றும் நீருமாக சேர்ந்து
அழித்து வருகிறது
என்னோடு கூடவே
இப்படியாக
காயங்களில்லாமலே
வலிகளும்....
பாதைகளே இல்லாமல்
பயணமும்....
எனது இருத்தலை
சந்தேகித்து
பொய்யாக்கி
புறந்தள்ளத் தயாராய்
என் சுற்றம்
ஆனாலும் விடாது தேடுகிறேன்
அடையாளங்களையும்
ஆதாரங்களையும்
என் வாழ்வையும்
இருத்தலையும்
உறுதிப்படுத்திவிடலாம் என்று....


[தினகுரல் பிரசுரம ]

Saturday, February 2, 2008

சிவப்பு நிறம் பூசப்படும் வெள்ளைச் சீருடைகள்

பள்ளிக்கனுப்பியவள்
பதறிக் கொண்டிருக்க
சீருடை சிவப்பாகிவீடு வருகிறன்
மூத்தவன்
பி.பி.சி பேட்டியாளருக்கு
நடந்ததை கலக்கமோ தயக்கமோ
சங்கடமோ இல்லாமல்
விபரித்துக்கொண்டிருக்கிறாள்
தங்கை
சாட்சியங்கள்
பொய்யான பிரேரணையின்
நியாயங்களோடு
ஒலிபரப்பப்ப்டுகிறது செய்தி
வளக்கமானசலிப்பை உதறிகொண்டு
கலைகிறது
தெருமுனைக் கடையின்
திண்ணையிலிருந்த கூட்டம்
நாளை இந்த கலக்கம்
சற்றே குறையலாம்என்கிற ஊகத்தை
கிசுகிசுத்துக்கொண்டே...
சுமந்த வயிறு
தாங்காமல்
இன்னும் அழுது கரைகிறாள் தாய்
அவன் பாலுண்ட மார்பெரிய...