
காயத்திரி
நீ என்னோடு பேசிய வார்த்தைகள்
அவ்வளவு இருக்காது
ஆனால் உன்னிடம் நான்
சேகரித்த புன்னகைகள்
அதிகம்
அழகு என்றவார்த்தைக்கு
அர்த்தம் கொடுக்கும்
அழகு நீ
அறிவிக்கப்படாத
எம் ஊரின்
எம் பள்ளியின்
எங்கள் வகுப்பறையின்
அழகி நீ
கானமிசைத்தபடி
காற்றில் உன்
விரல்களின் நடனத்தை
கண்டு மயங்காத
காளைகள் கிடையாது
நம் தெருவில்
சித்திரா, யானகி அம்மா, பவதாரணி
இவர்களுக்குப் பிறகு
நான் ரசித்தது
உன் குரலைத்தான்
ஆனால் எங்கே நீ பாடினாய்....
வெட்கம் நிரப்பிவைத்த
பூங்குவளை நீ
கொங்சம் உறுக்கினால்
குழைந்து அழுதுவிடுவாய்
நீண்ட கருங்கூந்தல்
குண்டுக் கருவிழி நிலவுகள்
மெல்லிடை
அன்ன நடை
எல்லாம் அளவோடு கொடுத்திருந்தான்
ஆண்டவன்
அளவுக்கு அதிகமாகவே
அழகாயிருந்தாய் நீ
அரை வழியில்
அத்தனையும்
சேர்த்துப் பறித்துப்போய்விட்டான்
அவன்
அத்தனையையும் விட
உன் அமைதியும்
வார்த்தைகளுக்கு பதிலாக
நீ பரிமாறும் புன்னகைகளுமே
அழகு
இன்னொருமுறை
உயிர்த்தெழுந்த மோனலீசாக்கள்
உன் புன்னகைகள்
அத்தனையையும் விட
இருதயத்தில் இன்னும்
இறுக்குகின்ற நம் நட்பே அழகு
எம் கல்லூரியில்
எம் வகுப்பிலிருந்து
அணைந்துவிட்ட இன்னொரு
புன்னகை நீ
எம் தோழிகளில்
உதிர்ந்துவிட்ட
முதல் பெண் பூ நீ
தூங்கு சிநேகிதியே தூங்கு
விடியல்களில்லாத ஒரு
இரவினில்
கல்லறைத் தொட்டிலில்
கண்மூடித் தூங்கு நீ
காலமோ கடவுளோ
வந்து தட்டி
எலுப்புகிறார்களோ இல்லையோ
மனிதர்கள் உன்னை கிளறி எடுக்காதவரை
நீ நேசித்த
பூமியின் மடிமீது
தலை சாய்த்து தூங்கு நீ
உன் நினைவுகளை
தாங்கி நிற்கிறோம்
அமைதியாய் தூங்கு நீ
No comments:
Post a Comment