Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, February 29, 2012

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா


"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா" - திருமதி ரமணிச்சந்திரன், அழகான கதை। கதை படிக்குமளவுக்கு பொறுமையை தந்த 'உடைஞ்சுபோன என் லப்டொப்க்கு' நன்றி।

நினைவுகளுக்கும் பழமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மீழப்பெறமுடியாதவை , மனதை ஆட்கொள்ளும் இனிய உணர்வுகள் இப்படி வார்த்தைகளில் பல அர்த்தங்கள் சொல்லமுடியும். எப்படிச் சொன்னாலும் அவை இழப்பின் ஒருவகை வலியைதான் உணர்த்துகின்றன. நினைவுகள் சுவாரிஸ்யமானவை, அவை பழமையை நோக்கிப் பயணிப்பவை. நாங்கள் அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் கூட அவை, அவ்வப்போது மனதை பனிமூட்டமாக வந்து முற்றுகையிடும். சில நிமிடங்களிலோ சில மணித்துளிகளிலோ அவை கலைந்துபோய்விடும். காலம் செல்லச் செல்லதான் நினைவுகளுக்கு சுவாரிஸ்யம் கூடுகிறது. நாவல்களையோ கதைகளையோ நாடிச் செல்பவர்களுக்கும் இந்தப் பனிமூட்டத்துக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. எவரோ எழுதும் கதைகளில், அவரவர் தங்கள் தங்கள் நினைவுகளைப் படிக்கிறார்கள். இந்தக் கதைகள் பனிமூட்டம் கலையாமல் வைத்துக்கொள்கின்றன.

மனிதரில், பாந்தமில்லாமல் பந்தம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயற்கை அக்கறையாக இருக்கிறதோ என்னவோ, கதாசிரியர்கள் அக்கறையாகவே இருக்கிறார்கள். பந்தமிருந்தாலும், நல்ல பாந்தமே ஆனாலும் வாழ்நாளின் பாதி நாட்கள் சஞ்சலங்களோடுதானே கழிகின்றன, என்பதுதான் பெரும்பாலான அவதானங்களாகக் காணப்படுகின்றன. ஏன் இப்படி உறவுகளையும் உணர்வுகளைப் போட்டுக் குளப்பிக்கொள்கிறார்கள் என்று எனக்குள் அடிக்கடி எண்ணத் தோன்றும். எல்லாவற்றுக்கும் அன்புதான் காரணகர்த்தா என்பது குன்றின்மேல் தூக்கிவைத்த விளக்குகாய் இருக்கிறது. உணர்வுகள் இருக்கின்றவரையில் உறவுகளுக்கான தேவையும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பது நியதி. ஆக உயிர்வாழ்கின்ற வரையில், மனிதர்களுக்கு ஏதோ ஒரு அனுபந்தம் இருக்கவேண்டும் என்பது அவசியமாகிவிடுகிறது.

"அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு"

அன்பினால் ஏற்படும் ஆசை அல்லது விருப்பம், எல்லோரிடத்திலும் நட்பாயிருக்கின்ற மேன்மையை தேடித்தரும், என்று என்னதான் இந்த அன்பை பற்றி உயர்வாகச் சொன்னாலும் அதுவே "இன்பம் - துன்பம்" என்கிற அதலபாதாள இடைவெளிக்குள் மனிதனைப் போட்டு பந்தாடுகின்றது என்பதுதானே ஜதார்த்தம்.

"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா " என்கிற பாரதியின் வரிகளை, இந்த நாவலின் தலைப்பாகப் பார்த்ததும் மனம் அதனுள் இழுத்துக்கொண்டு போய்விட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். திருட்டு மாங்காய்க்கு எவ்வளவு சுவை அதிகமோ, அதேபோல திருடிப் படிப்பதுவும் அலாதியானதுதான்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்று ஆரம்பிக்கும் பாரதியின் பாடலின் இடையில் வரும் வரிகள்தான் அவை. உண்மையில் "உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" என்றுதான் அந்தவரி முளுமையடைகின்றது. 'உன்மத்தம்' என்றால் உணர்ச்சியின் உச்சனிலை என்று ஒரு பொருள் இருக்கிறது. உன்னை தழுவினால் நான் உணர்வின் முளுமையான சுகத்தை அனுபவிக்கிறேன் என்பதாக பாடல் வரி சொல்கிறது. அவ்வளவு காதல் அதனால் ஏற்பட்ட ஈர்ப்பு என்பதுதான் பொருள், அன்றி வேறு திசைக்கு அர்த்தங்களை நகர்த்திச்செல்லவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது விளக்கமும்கூட.

இன்னும், திருமதி।ரமனைச்சந்திரனின் வார்த்தைகளையும், இடையிடையே அவர் பயன்படுத்தியிருந்த முதுமொழிகளையும் ரசித்துக்கொண்டும், பெண்மையின் உணர்வுகள் இப்படித்தானிருக்குமோ என்று பலதடவை எனக்குள்ளே கேட்டுக்கொண்டும் படித்துமுடித்திருந்தேன்। இனிமேல், சந்தேகம் என்கிற வார்த்தையை கேட்டால் எனக்கு "அபராஞ்சி" தான் நினைவுக்கு வருவாள் போலிருக்கிறது, அவள் நினைவுக்குள் வந்தால் இலவச வெளிச்சம்தானே, வரட்டும்। காரணம் ஆவள்தான் புடம்போட்ட தங்கம் ஆயிற்றே!... ("அபராஞ்சி" என்றால் - புடம்போட்ட தங்கம் என்று பொருளாம்)

"கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" - பாரதி

Friday, January 27, 2012

நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு (சீதையின் காதல்)


ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்


ராமன் வனவாசம் செல்லத் தயாராகும்வேளையில் தன் அருமைப் பெண்டாட்டியை பார்த்துச் சொல்கிறான், அடியேன் யாராலும் வளைக்கமுடியாத வில்லை எப்பெரும்பாடுபட்டு வளைத்து நான் கரம் பற்றிய என் காதலியே, நான் போகவிருப்பது சிங்கப்பூர் ஃபிக்னிக் அல்ல, வனவாசம். அதனால் நீ இங்கேயே அரண்மனையிலேயே இருந்துவிடு என்று சொல்கிறான். சதா டொக்கு ஃபிகருகளே கொஞ்சம் பௌசு வந்ததுமே மகாராணிமாதிரி பில்டப் போட்டு ஊருக்கே சீன்போடுற இந்தக்காலத்தில - இவள் தேவதைபோன்ற ராஜகுமாரி, பிறந்ததிலிருந்து எந்தத் துன்பத்தையும் அனுபவித்திராதவள், பூவிலும் மென்மையான பாதங்களை உடையவள் - எப்படி என்னோடு காட்டுக்கு அதுவும் சிங்கம், புலி, நரி இந்தமாதிரி அனிமல்ஸ் எல்லாம் இருக்கிக்கிற பயங்கரக் காட்டுக்கு, சூடு குளிர் கூதல் பார்க்காமல்?.. சான்ஸே இல்ல. வருவாயா? என்று கேட்டாலே டைவேஸ்தான் என்று ராமன் நினைத்திருப்பானோ என்னவோ.

ஆனால் சீதைக்கு வருத்தம், பெரியவர்கள் சொல் கேட்டல் அறமே ஆயினும் பாற்கடலிலிருந்து பிரியாமல் அயோத்திவரை கூட வந்தவளாகிய மனைவியை நடுவழியில் விட்டுவிட்டு பிரிந்து செல்வதென்பது, அப்பெரியவர்கள் சொல்லும் அறத்தை பாதிக்கவில்லையா, சரி போகட்டும் குரவர் தமக்கு நன்மை பயப்பவைதானே அறங்களாகக் கொள்ளப்பட்டன, ஆனாலும் இவ்வளவுதூரம் நம்பி கூட வந்தவளை அருகில் இருக்கும் வனத்துக்கு அழைத்துச் செல்லாமல் தடுப்பதேன் என்று எண்ணி வருந்தினாளாம் சீதை. (அதுவரை நந்தவனத்துக்கும் - வனத்துக்கும் வித்தியாசம் அறிந்திராதவளாய் இருந்தாள் - சீதை எனச் சொல்லப்படுகிறது)

இருந்தாலும் ராமன் யார், அவன் ராஜகுமாரன், வரலாறுகளில் படிக்கப்பட்டு துதிக்கப்படப்போகின்றவன், அப்பழுக்கில்லாதவன் நின்று ஜோசித்து நிதானமக அறங்களுக்கு நியாயம்கற்பிக்கின்றவகையிலும் பெண்டாட்டியை சமாதானம் செய்கின்ற வகையிலும் பதில்சொல்கின்றான்.

"மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய கற்கள் உற்ற வழி, எனவே வெப்பமான கூர்ங்கற்கள் உராய்வதனால் ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்; குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம். அதனால்தான். இங்கேயெ இருந்துவிடுமாறு கூறினேன் அன்றி உன்னைப் பிரிகின்ற வல்லமை எனக்குமட்டும் எப்படி இருக்கும், ஆதலால் வருத்தாதெ! குரவர் சொன்னால் கொலைகூடக் குற்றமில்லை என்பதைறியாதவளா நீ, என்பது போல ராமன் சமாதானம் செய்யப்பார்க்கிறான்.

ஆனால், இளம் பெண்டாட்டி ராஜகுமாரி - சீதை அக்கணமே பதிலுரைக்கிறாள் இவ்வாறு, மேனியில் மட்டுமல்ல சிந்தையிலும் அழகிற்கு தன்னை விஞ்சியவர் யாருமில்லை என்பது புலப்பட. அந்தப் பாடல் இதுதான்,

"பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."

அடேய் என் புருசனாகிய காதலனே!, "இரக்கம் அற்ற மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல் என்னை விட்டு விலகிச் செல்கின்றாய், உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் நிகராகாது, அப்படி இருக்கும்போது, நீ என்னை பிரிந்து செல்வதாகிய பெருந்துயரைவிடவா சுட்டுவிடப்போகிறது உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு என்றுரைக்கிறாள்.
அப்படி கேட்ட சீதை உடனேயே உள்ளே சென்று மரவுரியை அணிந்து கொண்டு ராமனுக்கு முன்பே தயார் ஆகிவிடுகிறாள், என்று சொல்கிறது ராமாயணம்.

தன் துணைவிக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாது என்று கணவனும், துன்பம் என்பதே நான் உனைப் பிரிந்திருப்பதுதான் என்று மனையாளும் நினைக்கிறார்கள். உன் காட்டில் நீ தனியாகப் படப்போகும் இன்பதுன்பங்களோடு பங்கெடுக்காமல் இங்கிருக்கின்ற சௌகரியங்களை நான் அனுபவிக்கின்றதென்பது நரகமல்லவா, அதில் என் ஆன்மா வெந்து வெந்து எரியுமல்லவா - அதைவிட என் மேனி வெந்துபோவது ஒன்றும் வலியில்லை என்றுசொல்லி, கல்லும் முள்ளும் குத்த வெயிலும் பனியும் வாட்ட காட்டுக்குச் செல்கிறாள். காடென்பது எப்படி இருக்கும் என்று அறிந்திராத ராஜகுமாரி கணவனோடு கைகோர்த்துக்கொண்டு செல்கிறாள் உள்ளத்திலே உவகை பொங்கப் புறப்படுகிறாள் என்று ராமாணம் சொல்கிறது. சீதையின் உன்னதமான காதல் வெளிப்படுகின்ற இடமாக இதைச் சொல்வார்கள்.

ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்.

இந்தக்காலத்திலும் சீதைகள் இருக்கிறார்கள். மேக்கப்பிற்குப் பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் அழகு சீதைகள், சௌகரியங்களுக்குப் பின்னால் வருகிற சாதுர்ய சீதைகள், "குணம் என்ன குணம்" சற்குணம் என்பதே ஆணாதிக்க கட்டுப்பாடுகள்தான் என்று அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து புதுமைப் பெண்ண்களாய் தம்மை காணும் மொடல் சீதைகள். காதல் என்கிற பெயரில் - என்னென்னவோ செய்கிற சீதைகள். இப்படியான சீதைகளால் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறாள் பெண்மையின் அடையாளமாகச் சொல்லப்பட்ட "சீதை". நாளுக்கு நாள் மாறிவரும் இன்றைய உலகத்தில், புதுமை என்று சொல்லிக்கொண்டு பெண்மையின் பண்புகளையே (Qualities of Women) இழந்துகொண்டுபோகிறாள் "சீதை".

-----------------

பிற்குறிப்பு :- ஒரு நான்கு நாட்களுக்கு முதல் இந்தமாதிரி ஒரு சீன் என் வாழ்க்கையிலும் நடந்தது!!!, என்னை பார்த்து ஒரு பொண் சொன்னாள் "நின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு". இதை யாரும் நம்பப்போவதில்லை என்பத எனக்கு தெரியும்!!!. பிறகு "இன்றுபோய் நாளைவா" என நயம்படக் கொப்பியடித்து மாட்ட நான் என்ன 'வில்லிபுத்தூரார் ஆழ்வாரா'. அழகான, தெய்வீகமான "சீதையின் காதலை" ரசித்தேன், அதை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். எழுத்தில், சொல், பொருளில் குற்றமிருப்பின் இந்தச் சிறியவனாகிய அடியேனை மன்னிக்க.

- ப. அருள்நேசன்

Friday, January 22, 2010

வளக்கு


நாம் ஒரு வீட்டுக்கு ஏதேனும் விடயமாக சென்றால் உபசரிப்பின் வடிவமாக தேநீர் தருகிறார்கள், நமக்கு தேநீர் பிடிக்கிறதோ இல்லையோ அதை நாம் அருந்தவேண்டும். இல்லைஎன்றால் வீட்டார் தம்மை நாம் அவமதிப்பதாய் உணர்வார்கள் என்கிற (வளக்கம்) பழக்கதோசப் பயம் நம்மிடமிருக்கிறது. இப்படி சமுகத்தின் சட்டமில்லாச் சட்டங்களுக்கு அதாவது பண்பாடு, கலாச்சாரம், மதச் சம்பிரதாயங்கள், குலவளக்கு, ஊர்வளக்கு சாதி வளக்கு இப்படி ஒரு நூறு வளக்குகளுக்கு கட்டுண்டு கட்டுண்டு முடங்கிக்கிடக்கிறான் மனிதன். இந்த மூட நம்பிக்கைக்ளில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டு வெளியே வந்த சமுகம் நாகரீகமடைந்த சமுகமாகக் கருதப்படுகிறது. அந்த மூட நம்பிக்கைகளுக்குள் அடையுண்டுகொண்டு அவற்றை காத்துக்கொண்டும் இருக்கிறவர்களை நாகரீகமடைந்த சமுகம் ஏமாளிகளாகவே பார்க்கிறது, "பட்டிக்காட்டார்" என்ற பளந்தமிழ் வார்த்தையை பெயராகச் சூடி அளைக்கிறது.

இந்த நூற்றாண்டிலும் பட்டிக்காட்டாரா? இருக்கிறார்கள் இன்னும் சமயச் சம்பிரதாயங்கள் மறையவில்லையே! ஊர்வளக்கு அழியவில்லையே! சாதிவளக்கு சாகவில்லையே! பண்பாடு கலாச்சாரம் இவை தரும் காயங்கள் ஆறவில்லையே இன்னும்! ஆக பட்டிக்காட்டார் இன்னும் இருக்கிறார்கள்தானே. இவ்வகைச் சட்டங்களால் மனிதனை கட்டியாள்வது சமுகத்தின் ஒருசாரார் அடிமாடாய் போவது இன்னொருசாரார்.

இந்தவகையான வளக்கங்களுக்கு பளகிப் பளகியே, சமுகத்தின் இம்சைகளை சகித்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் ஆங்கிலேயர்கள் மிகச்சரியாக இருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டதை மட்டுமே செய்கிறார்கள் அதேபோல தம் விருப்பத்தை இன்னொருவர்மீது திணிப்பதுமில்லை. அந்த மனனிலைதான் சுதந்திரமான உயர்தர வாழ்க்கையை அவர்களுக்கு வளங்கிருக்கிறது. இங்கே நாம் சகித்துக்கொண்டே பிறந்து சகித்துக்கொண்டே வாழ்ந்து சகித்துக்கொண்டே இறக்கவேண்டியிருக்கிறது காரணம் வைத்தியசாலை தொடங்கி சுடுகாடுவரை பிரச்சனை. நாம் நம்மைப்பற்றி நினைப்பதைவிட மற்றவரைப் பற்றியே அதிகம் நினைக்கிறோம் காரணம் நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களை கடக்கவேண்டியிருக்கிறது, அவற்றிலிருந்து தவறி விடுவோமோ என்கிற பயம், யாரும் அந்தச் சட்டங்களை மீறிநடக்கிறார்களா? என்று துப்பறியும் சமுகவியல் அக்கறை. ஆக எம் வாழ்வை நாம் வாழ்வதற்கு எங்கே நேரம்?

இன்றய காலத்து வளக்கங்களின் கேலிக்கூத்துக்கள் போகட்டும், பண்டயகாலத்தில் பளங்குடி மக்கள் (அல்லது மனிதக் குளுக்கள்) பின்பற்றிய வளக்கங்கள் மிகச் சுவாரிஸ்யமாகவும் வினோதமானவையாகவும் இருந்திருக்கின்றன. அதிலும் திருமணச் சடங்கு, திருமண ஒப்பந்தங்கள் மிக மிகச் சுவாரிஸ்யமானவை. அண்மையில் "மொங்கோல்" என்கிற திரைப்படம் பார்த்தேன் அது ஒரு சீனத் திரைப்படம், அதில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் ஆவது, ஒரு ஆண்குளந்தை தனது ஐந்து வயதில் தனக்குரிய ராணியை தெரிவுசெய்யவேண்டும் என்பதாகும். நாயகன் குளந்தையாக இருக்கும்போது தனது ராணியை தன் தகப்பனின் கருத்துக்கு மாறாக தெரிவுசெய்வதாக அதில ஒரு கட்சிவரும். இப்படி ஆச்சரியங்கள் நிறைந்ததே மனிதப் பரிமாண வளர்ச்சியுமாயிருக்கிறது.

வேறொரு பளங்குடி மக்களின் வளக்கு சுவாரிஸ்யமாகவும் அதேவேளை விசித்திரமானதாகவும் இருந்திருக்கிறது. அந்த மக்களிடம் இருந்த வளக்கு அவர்களின் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வீட்டிற்கு நண்பர் ஒருவர் விருந்தாளியாக வந்தால் அன்றிரவு அந்த வீட்டின் ஆண்மகன் தனது மனையியை வந்தவருக்கு விருந்தாகக் கொடுக்கவேண்டும், அப்படி கொடுக்காவிட்டால் விருந்தாளி தான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறான். அதுவே பகையுணர்வாகிவிடும் என்பதால் எல்லோரும் அதை பின்பற்றினார்கள் (சமுகவியல் ஆய்வு நூலிலிருந்து). இப்போதும் இந்த நிலை வளக்கத்திலிருந்தால் அதையும் பின்பற்றியிருப்பார்கள் தெய்வகுற்றம் ஆகிவிடுமே என்று சகித்துக்கொண்டு. என்ன ஆண்களுக்குத்தன் வேட்டையாக இருந்திருக்கும், பெண்கள்... இல்லை இல்லை, பெண்களில் சிலர் ஆயுதங்களோடு தீவிரவாதிகளாய் அலைந்துகொண்டிருந்திருப்பார்கள்.

இன்னொரு சுவாரிஸ்யமான வளக்கு விசாரித்தோம் கேளுங்கள், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணகாலம் வந்தவுடன் வீதியில் ஊர்வலமாகப் போகிறாள். அங்கே அவள் காண்கிற ஆண்களில் தன்னைக் கவர்ந்தவர்களை அளைத்து தன்னோடு உறவுவைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறாள். அவள் கருவுற்றவுடன் ஊரைக்கூட்டி இருக்கும் ஆடவர்களில் இருந்து ஒருவரை தன் விருப்பம்போல் தெரிவுசெய்கிறாள். அந்தக்கணத்திலேயே இருவருக்கும் திருமணம் நடக்கும். இங்கே ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆடவன் அவளுடன் முன்பு தொடர்வைத்திருக்காவிட்டாலும் கூட அவளின் தீர்ப்புக்கு பணிந்தே ஆகவேண்டும் என்பதே அந்த மக்களின் வளக்கமாக இருந்திருக்கிறது. தெரிவுசெய்யப்பட்ட ஆடவன் அதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறான். அவனுக்கு சீர்வரிசைகள் சொத்து சுகம் எல்லாம் வளங்கப்படுகிறது, இப்படி ஒரு வளக்கம். இந்தவளக்கத்தில் ஆண்களுக்குத்தான் திண்டாட்டமய் இருந்திருக்கிறது. காரணம் அங்கே பெண்களின் கையே உயர்ந்திருக்கிறது.

இப்படியான வளக்கங்கள் - சமூகச்சட்டங்கள் கதைகளாய் கேட்கிறபோது சுவாரிஸ்யமாக இருக்கலாம் ஆனால் அவற்றை வாழ்வதென்பது எத்தனை கொடுமையானதென்பது நம்மால் ஜீரணித்துப்பார்க்கக்கூட முடியாது. அதைவிட அன்றய மக்களுக்கு அந்த வளக்கங்களை பின்பற்றுவதிலும் அவற்றை பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. இப்படி தத்தம் வளக்குகளை (பண்பாடு) பாதுகாப்பதில் வெவ்வேறு பளக்கங்களையுடைய மக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் விளைந்த பகைமை போராகி அழிந்துபோன இனங்கள், மொழ்கள் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாயிருக்கிறது. வளக்கங்களால் வாழ்ந்த இனமொன்று உண்டா? பளக்கங்களால் பருத்த மொழி ஒன்றுண்டா? என்றால் 'இல்லை' என்பதே பதிலாகக்க் கிடைக்கும்.

இன்னும் பூமியில் மனிதன் தன்னைத்தானே கொன்றளிகிறதன் அடிப்படை எங்கிருந்து வந்தது, மேலே சொல்லப்பட்ட வளக்குகளில் இருந்துதானே!

ஆக இன்னும் நாம் எதற்காக வளக்கங்களால் எம்மையே முடக்கிக்கொண்டும், சகித்துக்கொண்டும் வாழவெண்டும்?

மனிதா வளக்கங்களை விங்ஞானமாய் மாற்று வளக்கங்களை மனிதத்துக்காய் செலவிடு, மறுநாளே பூமி தன்னை புன்னகைகளால் நிறைக்கக் காத்திருக்கிறது.

Wednesday, November 12, 2008

கண்ணீரோடு கலந்து போகிறது இன்னுமொரு தீபாவளி

வழமைபோல் சில புன்னகைகளையும் நிறையவே வருத்தங்களையும் சுமந்து கொண்டு கடந்து போகிறது தீபாவளி. இந்தநாள் தமிழனுக்கு மிக முக்கியமான நாள். சமய கலாச்சார சம்பந்தமான மிக முக்கியமான நாள் மட்டுமன்றி அனேகமாக தமிழன் சந்தோசமாக இருக்கின்ற ஒருநாள் இது. நாம் எமது இனிமையான பொழுதுகளை இப்படியான ஒரு சில நாட்களில் நிரப்பி ஞாபகங்களாக மாற்றி வைத்திருப்போம். ஒரு காலத்தில் தீபாவளி தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு இப்படியான நாட்கள் வருகிற போதும் சரி நம்மை கடந்து போகிற போதும் கடந்துவிட்ட பிறகும் சுகமான அனுபவத்தை அல்லது ஒரு இனிய உணர்வையே தருவதாகவே இருந்தது. எமது மக்கள் தமது எதிர்காலத்திற்காக சேமிக்கிறார்களோ இல்லையோ வருகிற தீபாவளிக்காவது சேமிப்பார்கள்.

அவ்வளவு இன்பம் நிறைந்த இந்த தமிழ்க் கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் நாள் சில காலமாக வேதனைகளை மட்டுமே விட்டுச் செல்கின்றது இன்பத்தை மட்டுமே நிரப்பி வைத்த அதே நாளில் இன்று துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் எமது மக்கள்.

இம்முறையும் தீபாவளி வந்தது. அணைந்து கிடக்கின்ற எங்கள் வாழ்க்கைத் தீபத்தை ஏற்றத் தெரியாத வருத்தத்தோடு அது கடந்து போகிறது. எம் மக்கள் பாவம் என்ன செய்வார்கள். எண்ணை தீர்ந்த பிறகு, எண்ணை தீர்ந்த பிறகு எங்கள் உயிர்த்திரிகளும் கருகிய பிறகு அவர்கள் எப்படி தீபமேற்றி வரவேற்பார்கள். அதனால் இருட்டினிலே கடந்து போகிறது ஓர் தீபத்திருநாள். ஒருபுறம் ஈழதேசத்தின் வன்னிப் பெருநிலப் பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் தம் ஊரை, உறவுகளைப் பிரிந்து உடமைகளை இழந்து மரங்களுக்கு கீழேயும், மழையிலும், வெய்யிலுமாய் உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் படும் அவலங்களும் மறுபுறம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் கடத்தப்படுதல், இராணுவச்சோதனைகள் சிறைவாசம் எனச் சொல்லணாத்துயரிலும் அகப்பட்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

தமிழ் இனப் படுகொலைகளையும் இத்துணை துயரங்களையும் ஒரு பொருட்டாகவும் கொள்ளாத சர்வதேசம் தன்நிலை மறவாதிருக்க இம்முறை இந்தியா தீபாவளிப் பரிசாக தமிழ்களுக்கு ஒரு அருமையான ஏமாற்று நாடகமொன்றை அரங்கேற்றியது. தமிழ் நாட்டரசும் இந்திய மத்திய அரசும் இணைந்து நடத்திய நாடகம் இன்னும் தொடர்கின்ற போதும் அதற்காக தன் மக்களையே பலிக்கடாவாக்கியது இந்திய அரசு.

தனது அடுத்த தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் இலங்கை அரசு, தனது பலத்தை, தமிழர்களைக் கொன்றொழித்து ஓரளவுக்கு நிரூபித்திருக்கின்ற இந்நிலையில், இந்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியும் தனது அரசியல் ஞானத்தைக் கொண்டு நிகழ்த்திய இந்த கபட நாடகத்தின் மூலம் வெளியுலகில் இருந்து தன்னைப் பாதுகாக்க கவசம் ஒன்றை மகிந்த ராஜபக்ஸ அரசுக்கு வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் ஆக்ரோசமாக பொங்கி எழுந்த கருணாநிதி கடைசியாக பெட்டிப் பாம்பாக அடங்கி கைவிரித்தார். தன் இயலாமையை தமிழர்களுக்கு தந்திரோபாயமாக காட்ட முயன்ற கலைஞர் கருணாநிதி உணவுப் பண்டங்களை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு தானமாகத் தர ஓப்புதல் பெற்றுக் கொடுத்தார். தமிழ் இனத்தின் தலைவர் என தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கலைஞர் இந்த நாடகத்தின் மூலம் மத்திய அரசுக்கு தனது பணிவையும் விசுவாசத்தையும் இன்னொரு முறை வெளிப்படுத்தவும் இந்த நாடகத்தை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் தனது வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை, மத்திய அரசில் நிலைத்து நிற்கும் உறுதிப்பாட்டையும் மேலும் ஒரு முறை வலுப்படுத்தினார்.

இந்தநிலையில் எப்போதும் தமிழர்களை ஜென்ம விரோதியாக இருதயத்தில் வைத்துக் கொண்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், நடிகையும் தமிழ்நாட்டு மக்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவருமான செல்வி ஜெயலலிதா தன் கொள்கையில் மிக உறுதியாக இருந்ததுடன் கலைஞரின் நாடகத்தை விளங்கிக் கொண்டிருந்ததோடு, தங்கள் உணர்வை வெளிப்படுத்திய (தமிழர்கள்) சிலரை சிறைக்கனுப்ப தன்னாலனவற்றை செய்துதவினார். இங்கே இவரின் விசேடமான பண்பு என்னவென்றால் தனது கொள்கையில் இருந்து எப்போதும் மாறாமல் ஒரே போக்கை கடைப்படிப்பதன் மூலம் ஆசியாவின் வியத்தகு பெண்மகளில் தானும் ஒருவர் என்ற பெயரை நிலைநாட்டியவர். அதை இந்த முறையும் சரியாக செய்து முடித்து தனது பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டு மக்கள் ‘செல்வி’ ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பதுதான் வேடிக்கையான தொன்றாகும். அம்மா என்றால் அன்பு அமைதி பாரபட்சமற்ற பாசம் தன்னை ஒறுத்து தன் குழந்தைகளை வளர்த்தல் என்ற பல பண்புகளின் சொல் அடக்கமாகும் என்பது தென்னிந்தியத் தமிழர்கள் அறியாதது ஒன்றல்ல. ஒரு அரசியல் தலைவன் அல்லது தலைவி இந்தப் பண்புகளைக் கொண்டிருப்பது எந்தவித்திலும் சாத்தியமில்லை. அப்படி இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர் ஒரு நல்ல தலைவனாகவோ அல்லது தலைவியாகவோ இன்னும் வழிகாட்டியாகவோ இருக்க முடியாது. Management Principles and knowledge இன்னும் Behavior of Leadership மற்றும் ; Political techniques புரிந்த அவற்றில் ஆளுமையுள்ள ஒருவரே ஒரு நாட்டின் தலமைப் பதவியில் இருக்க முடியும். மாறாக அம்மா பண்பு அல்ல என்றும் புரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். இருந்தும் அவரை ஏன் அம்மா என்று அழைக்கிறார்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது. இன்னும் செல்வி ஜெயலலிதா ஒரு கன்னி. ஆவர் திருமணம் செய்யவோ பிள்ளை பெற்றுக் கொள்ளவோ இல்லை. இருந்தும் அவரை அம்மா என்றழைப்பதற்கான நியாயத்தன்மை தான் புரியவில்லை.

இவர்கள் பற்றியெல்லாம் இங்கே பேசவேண்டிய காரணம், இவர்கள் சட்டங்களை ஆளும் வல்லமை கொண்டவர்கள், ஈழத்தமிழர்கள் மீது கரிசனை கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் என்பதனால் அவர்களையும் இங்கே நினைத்துப் பார்க்கின்றோம்.

இந்திய தமிழர்களினதும் ஆட்சியாளர்களினதும் கோபம் நியாயமானது தான். சகல நியாயங்களுக்குப் பிறகும், தம் இளந்தலைவனை இழந்த சோகம் இலேசில் மறக்காது என்பது நியாயம் தான். அதற்காக பரம்பரை பரம்பரையாக தங்கள் கோபம் மட்டுமே கடத்தப்பட்டு ஈழத்தமிழர்களை பழிவாங்குவது பொருத்தமற்றதாகும். அதற்காக, பழைய விடயங்களை மறந்து புதிய உறவை புதுப்பிப்போம் என்று எங்கள் பெரியவர்களும் கூட இறங்கி வந்து கேட்டாயிற்று. இந்திய அமைதி காக்கும் படை தமிழர்களுக்குச் செய்த அனியாயங்களையும், பெண்களின், தாய்மாரின் கற்பைத் தின்று போதைக்கு உயிரைப் பிழிந்து இரத்தம் குடித்ததையும் நாங்கள் மறந்து விட்டோம். இப்போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கு தேவை நிம்மதியான வாழ்வு. இந்தியர்களுக்கு நீயாயம் கற்பிக்கவோ பரிகாரம் செய்யவோ இப்போது அவர்களுக்கு நேரமில்லை என்பதை முதலில் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். தந்தை செல்வா பண்டா உடன்படிக்கையை நிறைவேற்ற இலங்கைக்கு இந்திய இளந்தலைவர் (மக்கள் மனங்களில் தலைவனாக கொண்டாடப்படுபவர், தலைவராக வர இருந்தார்) வந்திறங்கிய பொழுது இலங்கை இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் கொலைவெறியுடன் அவரைத் தாக்கினார். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் அதுவும் விமானத்திலிருந்தும் இறங்கும் நேரத்தில் நேரத்தில் நிகழ்ந்தது. ரஜீவ்காந்தியின் அதிஸ்டம், இலங்கை ஆட்சியாளர்களின் அதிஸ்டம், ஈழத்தமிழர்களின் துரதிஸ்டம், இரஜீவ் காந்தி தன்னைத் தாக்க வருபவனைக் கண்டு விலகிவிட்டார். தலைக்கு வந்தது தோழ்ப் பட்டையுடன் போக அவர் உயிர் பிழைத்தார். மன்னிப்புக் கேட்டது சிங்களம். அதை மறந்தது இந்தியா. அந்தக் கொலைப் பழி ஈழத்தமிழர் பெயரில் வரவேண்டும் என்று இருந்திருக்கின்றது. இல்லையேல் எப்போதோ தமிழீழம் மலர்ந்திருக்கும். இல்லை தமிழன் சுதந்திரமடைந்திருப்பான்.

இன்று அதே சிங்களத்திற்கு இந்தியா ஆயுதங்களைக் கொடுத்து தமிழனைக் கொல்ல ஆளும் கொடுத்து உதவுகின்றது. பகை மறக்காத (காந்தி) ரஜீவ் குடும்பத்துக்கு கிழட்டு வயதில் செல்லப் பிள்ளையாகிவிட்டார் தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர் கருணாநிதி. திருமதி சோனியா காந்தி பிரதமராகாமல் திரு.மன்மோகன் சிங்கை அந்தப் பதவியில் அமர்த்தியதற்காக கண்ணீர் வடித்த கலைஞர், காந்தி குடும்ப விரோதிகளான விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினரும் சமாதானப்பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியுமான திரு. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட போது தனது இரங்கலைத் தெரிவித்து, அன்புத் தம்பி என்று உறவு கொண்டாடவும் செய்தார். இப்படியாக தமிழ்த் தலைவன் தானே என சூடிக்கொண்ட பெயரை காத்துக்கொள்ளவும், மத்திய அரசின் அன்பையும் ஆதரவையும் பெற கலைஞர் எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்திய மக்களை வசப்படுத்தினாலும் ஈழத்தமிழர்கள் அது குறித்து கரிசனை காட்டுவதில்லை என்பதே இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஈழத்தமிழர்களின் ஒரே வருத்தம் இந்தியாவும் சரி ஏனைய நாடுகளும் சரி, ஈழப்பிரச்சினை மட்டில் நடந்துகொள்ளும் கேவலமான போக்குக் குறித்ததாகும். இலட்சக்கணக்கான படுகொலை செய்யப்பட்ட எம் மக்களின் சமாதிகள் மீதும், அவர்களின் சொல்லில் அடங்காத் துயரங்கள் மீதும் அவர்களின் சொல்லில் அடங்காத் துயரங்கள் மீதும் ஏறி நின்று தங்கள் அரசியலைச் செய்வதே எங்கள் வருத்தம்.

இப்படியாக உலக நாடுகளின் ஒத்துழைப்பையும், யுத்தத்திற்கு தேவையான சகல வசதிகளையும் பெற்று தமிழ் மண் ஆக்கிரமிப்பிலும் தமிழ் படுகொலைகளிலும் வெற்றிகளைச் சம்பாதித்து வீறு நடைபோடுகின்றது ராஜபக்~ அரசு.

இதற்கு முதலில் இருந்த இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இதுபோன்ற வெற்றிகளை சம்பாதித்து பின்பு ஒரே நாளில் தவிடுபொடியாகி நிலைகுலைந்து திக்குமுக்காடி நின்ற கதையும் எமக்குத் தெரிந்ததே. இன்று அவர் மோசடிக் குற்றச்சாட்டில் அகப்பட்டு தன் மக்களிடம் மடிப்பிச்சை ஏந்தவும் துணிந்து விட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் சிங்க மக்கள் போரின் மூலம் தமிழனை அடக்கி இலங்கையை தமது பூரண கட்டுப்பாட்டில் பௌத்த சிங்கள நாடாக்க முடியும் என்றே நம்புகின்றனர். படித்த சமூகமும் சரி பாமர மக்களும் சரி ஆட்சியாளர்களின் பிரச்சாரங்களினாலும், ஊடகங்கள் மீது அரசின் வலிந்த ஆக்கிரமிப்பினாலும் அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளையே நம்ப வேண்டும் என்ற கட்டாயத்தாலும், யுத்த பிரதேசங்களில் இருந்து அவர்கள் புறம்பாயிருப்பதாலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அனியாயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு சிங்கள மக்களுக்கு இல்லாதிருப்பதாலும் தமிழ் மக்கள் மீது நிரந்தரப் பகையுணர்வை அவர்கள் கொண்டிருக்கிறரார்கள்.

இது இப்படி இருக்கையில் நாட்டின் பொருளாதாரம் யுத்தத்தால் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றது. சாதாரண மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடினாலும் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்ற அரசின் மந்திரத்தை நம்பி அதன்பால் ஆறுலடைந்து கொள்கின்றனர்.

அண்மையில் இலங்கையின் இராணுவத் தளபதி கூறிய கருத்தாவது இலங்கை நாடு சிங்கள மக்களின் முழு உரிமையையும் கொண்டுள்ள நாடு. என்றும் ஏனைய சிறுபான்மை இனங்களை இங்கு வாழ தாம் அனுமதித்ததோடு மேலும் எந்த உரிமையை கேட்கவும் அவர்கள் தகுதியற்றவர்கள். என்றும் கூறியிருந்தார். அதனை ஹெல உறுமயவின் அரசியல் கட்சியினர் (பௌத்த பிக்குமார்) ஆமோதித்தும் அவரது கூற்றை வலுப்படுத்தியும் அறிக்கைகளை வெளியிட்டனர். ஏனைய சிங்கள அரசியல் கட்சிகள் அதனை நியாயப்படுத்தும் முகமாக நடந்து கொண்டனர். தமிழ் போராட்டம் குறித்தளவு பின்னடைவை அடைகின்ற போதெல்லாம் இவ்வாறான இனவாத தீவிரக்கருத்துக்களை வெளியிட சிங்கள சமூகம் தவறியதில்லை என்பது தெரிந்ததே. ஆரசியல் இலாபம் குறித்தும் மக்கள் திசை திரும்பக் கூடாது என்பதற்காகவும், சிங்கள ஆட்சியாளர்கள் கொடுக்கும் மிட்டாய்கள் இவை. ஆனாலும் சிங்கள சமூகம் அதை நம்பி அந்த மோகத்தில் தம்மைத் தொலைத்து விடுவதே வருந்தத்தக்க விடயமாகும்.

மாறாக நிண்ட பெரும் வரலாற்றை கொண்ட தமிழனைப் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தான் புரியவில்லை. புராணக் கதைகளில் சொல்லப்படுகின்ற (இராமாயணம்) இராணவன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டிருக்கின்றான். அத்தோடு இலங்கையின் இறுதி மன்னாக கண்ணுச்சாமி என்ற தமிழ் மன்னனே இருந்திருக்கின்றான் என்று வரலாறு கூறுகின்றது. அதைவிட எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன், என நீழும் தமிழ் மன்னர்கள் வரலாறுகளை சிங்களம் எப்படி மறந்திருக்க முடியும். அதுபோக இலங்கை பிரித்தானியரின் ஆட்சியில் இருந்த காலத்தில் சிங்களத் தலைவர்கள் அத்தனை பேரும் சிறைவைக்கப்பட தனி மனிதகாகப் பிரித்தானிய சென்று வாதாடி அவர்களை விடுவித்தார். சட்டத்தரணியும் தமிழ் தலைவர்களில் ஒருவருமான சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர் இலங்கை வந்தடைந்த போது இலங்கையின் பிரதான வீதியொன்றில் குதிரைகளை அவிழ்த்து விட்டு தேரில் வைத்து அவரை இலங்கையின் சிங்களத் தலைவர்கள் இழுத்துச் சென்றதை அவ்வளவு விரைவில் சிங்களம் மறந்திருக்க கூடாது. சேர்.பொன் இராமநாதனை தேரில் வைத்து இழுத்துச் சென்ற பெருமை திஸநாயக்க ஜே.ஆர் ஜெயவர்த்தன உட்பட அப்போதிருந்த அனைத்து அரசியல் தலைவர்களையும் சாரும் என்பதை இங்கே குறிப்பிடலாம். இரண்டாம் உலக யுத்தம் நிறைவுக்கு வந்தபோது ஆக்கிரமிப்பு நாடுகள் தங்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அப்போது பல சுதந்திரம் மிக்க நாடுகள் உருவாகின. பாரத நாடு பிரிந்து சுதந்திரமான இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளானது. இலங்கைத் தலைவர்களிடமிருந்து பிரித்தானியா ஆட்சியாளர்களினால் வினவப்பட்டது. பிரித்துத் தரவா? இல்லை ஒரே நாடாக இருக்கப் போகின்றீர்களா? ஏன்று இலங்கையில் அப்போது இருந்த தமிழ்த் தலைவர்களின் மனங்களை இலகுவாக வென்று விட்ட சிங்களத் தலைவர்கள் ஒரே நாடாக இருப்போம் என்ற சம்மதத்தை பெற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தி தமிழர்களைப் புறக்கணித்து அவர்களின் உரிமைகளை தரமறுத்து அவர்களின் சுயநிர்ணய உரிமையை பிடுங்கியெடுத்தது சிங்களம்.

இருந்தும் தமிழன் திறமையுள்ளவனாக காணப்பட்டதாலும், உயர்பதவிகளிலெல்லாம் தமிழனே காணப்பட்டதாலும் தமிழனை விழுத்த கல்வியில் கைவைத்தது சிங்கள அரசு. கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழகத் தெரிவை நடைமுறைப்படுத்தியது. இதன் காரணமாகவே ஈழப்போராட்டம் பல குழுக்களாகத் தொடங்கியது போராட்டம் ஆனாலும் சிங்கள அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒரே அமைப்பே ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக கொள்கை மாறாது சுதந்திரத்திற்காக இன்றும் போராடி வருகின்றார்கள் இந்த சங்கதி ஏதுவும் தெரியாத ஒருவர் இன்று இராணுவத் தளபதி என்பது தான் நகைப்புக்குரிய விடயமாகும்.

இது இப்படி இருக்க இலங்கையின் சிங்கள சமூகத்தின் ஒரு பகுதியினர் மேற்குலக கலாச்சாரத்தில் மூழ்கிப் போக பெரும்பகுதி பொருளாதார வீழ்ச்சியால் துவண்டு போயிருக்கிறார்கள். அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்து போரில் வெற்றி பெற்றாலும் பொருளாதாரத்தில் பாதாள வீழ்ச்சி கண்டு இப்பொழுது எழ முடியாமல் பள்ளத்தில் கிடக்கின்றது. போர்ச் சூழலில் அரசு கவிழ்ந்து போகும் நிலையில் உள்ளது. இதே நிலையை மிகச் சிறிய ஒரு வளர்முக நாடான இலங்கை எதிர்கொண்டிருக்கின்றது. அமெரிக்கா சுதகரித்து எழ காலம் எடுக்காது. ஆனால் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டால் இந்த வீழ்ச்சியில் இருந்து எழ குறிப்பிட்ட காலம் எடுக்கவே செய்யும். ஆனாலும் அரசு தன் முழுப் பலத்தையும் இன்னும் யுத்தத்திற்கே பயன்படுத்தத் தீர்மானித்திருக்கின்றது. இதுவரை காலமும் பெரிய எதிர்ப்பு எதனையும் காட்டாமல் (தந்திரோபாய) பின்னகர்வுகளை மேற்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் முழுமூச்சான பதிலடி ஒன்றைக் கொடுக்க முனைனவார்கள். உலக நாடுகளே வியந்து நிற்கும் ஒரு போராட்ட அமைப்பே விடுதலைப் புலிகள் அமைப்பு. மிகப்பெரும் படைப்பலத்தையும் வான்படை, கடற்படை தரைப்படை என முப்படைகளும் கொண்ட பலமான அமைப்பு அவர்களுடையது. யாராலும் எதிர்பார்க்க முடியாத போரியற் தந்திரோபாயம் தாக்குதல் வியூகங்களையும் மதிநுட்பங்களையும் அனுபவம் மிக்க மதிநுட்பம் நிறைந்த தலைவரையும் கொண்ட விடுதலைப் புலிகளை தேற்கடித்து தமது திட்டத்தை நிறைவேற்றுவது என்பது எந்தளவுக்கு சுலபமான காரியம் என்பது இலங்கை அரசுக்கே புரியும். அப்படி அவர்களின் பதில் தாக்குதலை இந்த நாடு எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்பதே அனைவரினதும் கேள்வியாக இருக்கின்றது.

இப்படியாக இழப்புக்கள் ஏமாற்றங்கள், வருத்தங்கள் இன்னும் கடந்த கால நினைவுகளோடும் ஒரு போதும் அழியாத கண்கள் நிறைந்த கனவுகளோடும் ஒரு தீபாவளி எங்களைக் கடந்து போகிறது. விடியல் ஒளியாக எங்கள் கண்களில் மின்னியபடி!!!!