Wednesday, November 12, 2008

கண்ணீரோடு கலந்து போகிறது இன்னுமொரு தீபாவளி

வழமைபோல் சில புன்னகைகளையும் நிறையவே வருத்தங்களையும் சுமந்து கொண்டு கடந்து போகிறது தீபாவளி. இந்தநாள் தமிழனுக்கு மிக முக்கியமான நாள். சமய கலாச்சார சம்பந்தமான மிக முக்கியமான நாள் மட்டுமன்றி அனேகமாக தமிழன் சந்தோசமாக இருக்கின்ற ஒருநாள் இது. நாம் எமது இனிமையான பொழுதுகளை இப்படியான ஒரு சில நாட்களில் நிரப்பி ஞாபகங்களாக மாற்றி வைத்திருப்போம். ஒரு காலத்தில் தீபாவளி தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு இப்படியான நாட்கள் வருகிற போதும் சரி நம்மை கடந்து போகிற போதும் கடந்துவிட்ட பிறகும் சுகமான அனுபவத்தை அல்லது ஒரு இனிய உணர்வையே தருவதாகவே இருந்தது. எமது மக்கள் தமது எதிர்காலத்திற்காக சேமிக்கிறார்களோ இல்லையோ வருகிற தீபாவளிக்காவது சேமிப்பார்கள்.

அவ்வளவு இன்பம் நிறைந்த இந்த தமிழ்க் கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் நாள் சில காலமாக வேதனைகளை மட்டுமே விட்டுச் செல்கின்றது இன்பத்தை மட்டுமே நிரப்பி வைத்த அதே நாளில் இன்று துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் எமது மக்கள்.

இம்முறையும் தீபாவளி வந்தது. அணைந்து கிடக்கின்ற எங்கள் வாழ்க்கைத் தீபத்தை ஏற்றத் தெரியாத வருத்தத்தோடு அது கடந்து போகிறது. எம் மக்கள் பாவம் என்ன செய்வார்கள். எண்ணை தீர்ந்த பிறகு, எண்ணை தீர்ந்த பிறகு எங்கள் உயிர்த்திரிகளும் கருகிய பிறகு அவர்கள் எப்படி தீபமேற்றி வரவேற்பார்கள். அதனால் இருட்டினிலே கடந்து போகிறது ஓர் தீபத்திருநாள். ஒருபுறம் ஈழதேசத்தின் வன்னிப் பெருநிலப் பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் தம் ஊரை, உறவுகளைப் பிரிந்து உடமைகளை இழந்து மரங்களுக்கு கீழேயும், மழையிலும், வெய்யிலுமாய் உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் படும் அவலங்களும் மறுபுறம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் கடத்தப்படுதல், இராணுவச்சோதனைகள் சிறைவாசம் எனச் சொல்லணாத்துயரிலும் அகப்பட்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

தமிழ் இனப் படுகொலைகளையும் இத்துணை துயரங்களையும் ஒரு பொருட்டாகவும் கொள்ளாத சர்வதேசம் தன்நிலை மறவாதிருக்க இம்முறை இந்தியா தீபாவளிப் பரிசாக தமிழ்களுக்கு ஒரு அருமையான ஏமாற்று நாடகமொன்றை அரங்கேற்றியது. தமிழ் நாட்டரசும் இந்திய மத்திய அரசும் இணைந்து நடத்திய நாடகம் இன்னும் தொடர்கின்ற போதும் அதற்காக தன் மக்களையே பலிக்கடாவாக்கியது இந்திய அரசு.

தனது அடுத்த தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் இலங்கை அரசு, தனது பலத்தை, தமிழர்களைக் கொன்றொழித்து ஓரளவுக்கு நிரூபித்திருக்கின்ற இந்நிலையில், இந்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியும் தனது அரசியல் ஞானத்தைக் கொண்டு நிகழ்த்திய இந்த கபட நாடகத்தின் மூலம் வெளியுலகில் இருந்து தன்னைப் பாதுகாக்க கவசம் ஒன்றை மகிந்த ராஜபக்ஸ அரசுக்கு வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் ஆக்ரோசமாக பொங்கி எழுந்த கருணாநிதி கடைசியாக பெட்டிப் பாம்பாக அடங்கி கைவிரித்தார். தன் இயலாமையை தமிழர்களுக்கு தந்திரோபாயமாக காட்ட முயன்ற கலைஞர் கருணாநிதி உணவுப் பண்டங்களை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு தானமாகத் தர ஓப்புதல் பெற்றுக் கொடுத்தார். தமிழ் இனத்தின் தலைவர் என தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கலைஞர் இந்த நாடகத்தின் மூலம் மத்திய அரசுக்கு தனது பணிவையும் விசுவாசத்தையும் இன்னொரு முறை வெளிப்படுத்தவும் இந்த நாடகத்தை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் தனது வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை, மத்திய அரசில் நிலைத்து நிற்கும் உறுதிப்பாட்டையும் மேலும் ஒரு முறை வலுப்படுத்தினார்.

இந்தநிலையில் எப்போதும் தமிழர்களை ஜென்ம விரோதியாக இருதயத்தில் வைத்துக் கொண்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், நடிகையும் தமிழ்நாட்டு மக்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவருமான செல்வி ஜெயலலிதா தன் கொள்கையில் மிக உறுதியாக இருந்ததுடன் கலைஞரின் நாடகத்தை விளங்கிக் கொண்டிருந்ததோடு, தங்கள் உணர்வை வெளிப்படுத்திய (தமிழர்கள்) சிலரை சிறைக்கனுப்ப தன்னாலனவற்றை செய்துதவினார். இங்கே இவரின் விசேடமான பண்பு என்னவென்றால் தனது கொள்கையில் இருந்து எப்போதும் மாறாமல் ஒரே போக்கை கடைப்படிப்பதன் மூலம் ஆசியாவின் வியத்தகு பெண்மகளில் தானும் ஒருவர் என்ற பெயரை நிலைநாட்டியவர். அதை இந்த முறையும் சரியாக செய்து முடித்து தனது பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டு மக்கள் ‘செல்வி’ ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பதுதான் வேடிக்கையான தொன்றாகும். அம்மா என்றால் அன்பு அமைதி பாரபட்சமற்ற பாசம் தன்னை ஒறுத்து தன் குழந்தைகளை வளர்த்தல் என்ற பல பண்புகளின் சொல் அடக்கமாகும் என்பது தென்னிந்தியத் தமிழர்கள் அறியாதது ஒன்றல்ல. ஒரு அரசியல் தலைவன் அல்லது தலைவி இந்தப் பண்புகளைக் கொண்டிருப்பது எந்தவித்திலும் சாத்தியமில்லை. அப்படி இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர் ஒரு நல்ல தலைவனாகவோ அல்லது தலைவியாகவோ இன்னும் வழிகாட்டியாகவோ இருக்க முடியாது. Management Principles and knowledge இன்னும் Behavior of Leadership மற்றும் ; Political techniques புரிந்த அவற்றில் ஆளுமையுள்ள ஒருவரே ஒரு நாட்டின் தலமைப் பதவியில் இருக்க முடியும். மாறாக அம்மா பண்பு அல்ல என்றும் புரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். இருந்தும் அவரை ஏன் அம்மா என்று அழைக்கிறார்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது. இன்னும் செல்வி ஜெயலலிதா ஒரு கன்னி. ஆவர் திருமணம் செய்யவோ பிள்ளை பெற்றுக் கொள்ளவோ இல்லை. இருந்தும் அவரை அம்மா என்றழைப்பதற்கான நியாயத்தன்மை தான் புரியவில்லை.

இவர்கள் பற்றியெல்லாம் இங்கே பேசவேண்டிய காரணம், இவர்கள் சட்டங்களை ஆளும் வல்லமை கொண்டவர்கள், ஈழத்தமிழர்கள் மீது கரிசனை கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் என்பதனால் அவர்களையும் இங்கே நினைத்துப் பார்க்கின்றோம்.

இந்திய தமிழர்களினதும் ஆட்சியாளர்களினதும் கோபம் நியாயமானது தான். சகல நியாயங்களுக்குப் பிறகும், தம் இளந்தலைவனை இழந்த சோகம் இலேசில் மறக்காது என்பது நியாயம் தான். அதற்காக பரம்பரை பரம்பரையாக தங்கள் கோபம் மட்டுமே கடத்தப்பட்டு ஈழத்தமிழர்களை பழிவாங்குவது பொருத்தமற்றதாகும். அதற்காக, பழைய விடயங்களை மறந்து புதிய உறவை புதுப்பிப்போம் என்று எங்கள் பெரியவர்களும் கூட இறங்கி வந்து கேட்டாயிற்று. இந்திய அமைதி காக்கும் படை தமிழர்களுக்குச் செய்த அனியாயங்களையும், பெண்களின், தாய்மாரின் கற்பைத் தின்று போதைக்கு உயிரைப் பிழிந்து இரத்தம் குடித்ததையும் நாங்கள் மறந்து விட்டோம். இப்போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கு தேவை நிம்மதியான வாழ்வு. இந்தியர்களுக்கு நீயாயம் கற்பிக்கவோ பரிகாரம் செய்யவோ இப்போது அவர்களுக்கு நேரமில்லை என்பதை முதலில் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். தந்தை செல்வா பண்டா உடன்படிக்கையை நிறைவேற்ற இலங்கைக்கு இந்திய இளந்தலைவர் (மக்கள் மனங்களில் தலைவனாக கொண்டாடப்படுபவர், தலைவராக வர இருந்தார்) வந்திறங்கிய பொழுது இலங்கை இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் கொலைவெறியுடன் அவரைத் தாக்கினார். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் அதுவும் விமானத்திலிருந்தும் இறங்கும் நேரத்தில் நேரத்தில் நிகழ்ந்தது. ரஜீவ்காந்தியின் அதிஸ்டம், இலங்கை ஆட்சியாளர்களின் அதிஸ்டம், ஈழத்தமிழர்களின் துரதிஸ்டம், இரஜீவ் காந்தி தன்னைத் தாக்க வருபவனைக் கண்டு விலகிவிட்டார். தலைக்கு வந்தது தோழ்ப் பட்டையுடன் போக அவர் உயிர் பிழைத்தார். மன்னிப்புக் கேட்டது சிங்களம். அதை மறந்தது இந்தியா. அந்தக் கொலைப் பழி ஈழத்தமிழர் பெயரில் வரவேண்டும் என்று இருந்திருக்கின்றது. இல்லையேல் எப்போதோ தமிழீழம் மலர்ந்திருக்கும். இல்லை தமிழன் சுதந்திரமடைந்திருப்பான்.

இன்று அதே சிங்களத்திற்கு இந்தியா ஆயுதங்களைக் கொடுத்து தமிழனைக் கொல்ல ஆளும் கொடுத்து உதவுகின்றது. பகை மறக்காத (காந்தி) ரஜீவ் குடும்பத்துக்கு கிழட்டு வயதில் செல்லப் பிள்ளையாகிவிட்டார் தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர் கருணாநிதி. திருமதி சோனியா காந்தி பிரதமராகாமல் திரு.மன்மோகன் சிங்கை அந்தப் பதவியில் அமர்த்தியதற்காக கண்ணீர் வடித்த கலைஞர், காந்தி குடும்ப விரோதிகளான விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினரும் சமாதானப்பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியுமான திரு. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட போது தனது இரங்கலைத் தெரிவித்து, அன்புத் தம்பி என்று உறவு கொண்டாடவும் செய்தார். இப்படியாக தமிழ்த் தலைவன் தானே என சூடிக்கொண்ட பெயரை காத்துக்கொள்ளவும், மத்திய அரசின் அன்பையும் ஆதரவையும் பெற கலைஞர் எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்திய மக்களை வசப்படுத்தினாலும் ஈழத்தமிழர்கள் அது குறித்து கரிசனை காட்டுவதில்லை என்பதே இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஈழத்தமிழர்களின் ஒரே வருத்தம் இந்தியாவும் சரி ஏனைய நாடுகளும் சரி, ஈழப்பிரச்சினை மட்டில் நடந்துகொள்ளும் கேவலமான போக்குக் குறித்ததாகும். இலட்சக்கணக்கான படுகொலை செய்யப்பட்ட எம் மக்களின் சமாதிகள் மீதும், அவர்களின் சொல்லில் அடங்காத் துயரங்கள் மீதும் அவர்களின் சொல்லில் அடங்காத் துயரங்கள் மீதும் ஏறி நின்று தங்கள் அரசியலைச் செய்வதே எங்கள் வருத்தம்.

இப்படியாக உலக நாடுகளின் ஒத்துழைப்பையும், யுத்தத்திற்கு தேவையான சகல வசதிகளையும் பெற்று தமிழ் மண் ஆக்கிரமிப்பிலும் தமிழ் படுகொலைகளிலும் வெற்றிகளைச் சம்பாதித்து வீறு நடைபோடுகின்றது ராஜபக்~ அரசு.

இதற்கு முதலில் இருந்த இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இதுபோன்ற வெற்றிகளை சம்பாதித்து பின்பு ஒரே நாளில் தவிடுபொடியாகி நிலைகுலைந்து திக்குமுக்காடி நின்ற கதையும் எமக்குத் தெரிந்ததே. இன்று அவர் மோசடிக் குற்றச்சாட்டில் அகப்பட்டு தன் மக்களிடம் மடிப்பிச்சை ஏந்தவும் துணிந்து விட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் சிங்க மக்கள் போரின் மூலம் தமிழனை அடக்கி இலங்கையை தமது பூரண கட்டுப்பாட்டில் பௌத்த சிங்கள நாடாக்க முடியும் என்றே நம்புகின்றனர். படித்த சமூகமும் சரி பாமர மக்களும் சரி ஆட்சியாளர்களின் பிரச்சாரங்களினாலும், ஊடகங்கள் மீது அரசின் வலிந்த ஆக்கிரமிப்பினாலும் அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளையே நம்ப வேண்டும் என்ற கட்டாயத்தாலும், யுத்த பிரதேசங்களில் இருந்து அவர்கள் புறம்பாயிருப்பதாலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அனியாயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு சிங்கள மக்களுக்கு இல்லாதிருப்பதாலும் தமிழ் மக்கள் மீது நிரந்தரப் பகையுணர்வை அவர்கள் கொண்டிருக்கிறரார்கள்.

இது இப்படி இருக்கையில் நாட்டின் பொருளாதாரம் யுத்தத்தால் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றது. சாதாரண மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடினாலும் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்ற அரசின் மந்திரத்தை நம்பி அதன்பால் ஆறுலடைந்து கொள்கின்றனர்.

அண்மையில் இலங்கையின் இராணுவத் தளபதி கூறிய கருத்தாவது இலங்கை நாடு சிங்கள மக்களின் முழு உரிமையையும் கொண்டுள்ள நாடு. என்றும் ஏனைய சிறுபான்மை இனங்களை இங்கு வாழ தாம் அனுமதித்ததோடு மேலும் எந்த உரிமையை கேட்கவும் அவர்கள் தகுதியற்றவர்கள். என்றும் கூறியிருந்தார். அதனை ஹெல உறுமயவின் அரசியல் கட்சியினர் (பௌத்த பிக்குமார்) ஆமோதித்தும் அவரது கூற்றை வலுப்படுத்தியும் அறிக்கைகளை வெளியிட்டனர். ஏனைய சிங்கள அரசியல் கட்சிகள் அதனை நியாயப்படுத்தும் முகமாக நடந்து கொண்டனர். தமிழ் போராட்டம் குறித்தளவு பின்னடைவை அடைகின்ற போதெல்லாம் இவ்வாறான இனவாத தீவிரக்கருத்துக்களை வெளியிட சிங்கள சமூகம் தவறியதில்லை என்பது தெரிந்ததே. ஆரசியல் இலாபம் குறித்தும் மக்கள் திசை திரும்பக் கூடாது என்பதற்காகவும், சிங்கள ஆட்சியாளர்கள் கொடுக்கும் மிட்டாய்கள் இவை. ஆனாலும் சிங்கள சமூகம் அதை நம்பி அந்த மோகத்தில் தம்மைத் தொலைத்து விடுவதே வருந்தத்தக்க விடயமாகும்.

மாறாக நிண்ட பெரும் வரலாற்றை கொண்ட தமிழனைப் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தான் புரியவில்லை. புராணக் கதைகளில் சொல்லப்படுகின்ற (இராமாயணம்) இராணவன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டிருக்கின்றான். அத்தோடு இலங்கையின் இறுதி மன்னாக கண்ணுச்சாமி என்ற தமிழ் மன்னனே இருந்திருக்கின்றான் என்று வரலாறு கூறுகின்றது. அதைவிட எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன், என நீழும் தமிழ் மன்னர்கள் வரலாறுகளை சிங்களம் எப்படி மறந்திருக்க முடியும். அதுபோக இலங்கை பிரித்தானியரின் ஆட்சியில் இருந்த காலத்தில் சிங்களத் தலைவர்கள் அத்தனை பேரும் சிறைவைக்கப்பட தனி மனிதகாகப் பிரித்தானிய சென்று வாதாடி அவர்களை விடுவித்தார். சட்டத்தரணியும் தமிழ் தலைவர்களில் ஒருவருமான சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர் இலங்கை வந்தடைந்த போது இலங்கையின் பிரதான வீதியொன்றில் குதிரைகளை அவிழ்த்து விட்டு தேரில் வைத்து அவரை இலங்கையின் சிங்களத் தலைவர்கள் இழுத்துச் சென்றதை அவ்வளவு விரைவில் சிங்களம் மறந்திருக்க கூடாது. சேர்.பொன் இராமநாதனை தேரில் வைத்து இழுத்துச் சென்ற பெருமை திஸநாயக்க ஜே.ஆர் ஜெயவர்த்தன உட்பட அப்போதிருந்த அனைத்து அரசியல் தலைவர்களையும் சாரும் என்பதை இங்கே குறிப்பிடலாம். இரண்டாம் உலக யுத்தம் நிறைவுக்கு வந்தபோது ஆக்கிரமிப்பு நாடுகள் தங்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அப்போது பல சுதந்திரம் மிக்க நாடுகள் உருவாகின. பாரத நாடு பிரிந்து சுதந்திரமான இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளானது. இலங்கைத் தலைவர்களிடமிருந்து பிரித்தானியா ஆட்சியாளர்களினால் வினவப்பட்டது. பிரித்துத் தரவா? இல்லை ஒரே நாடாக இருக்கப் போகின்றீர்களா? ஏன்று இலங்கையில் அப்போது இருந்த தமிழ்த் தலைவர்களின் மனங்களை இலகுவாக வென்று விட்ட சிங்களத் தலைவர்கள் ஒரே நாடாக இருப்போம் என்ற சம்மதத்தை பெற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தி தமிழர்களைப் புறக்கணித்து அவர்களின் உரிமைகளை தரமறுத்து அவர்களின் சுயநிர்ணய உரிமையை பிடுங்கியெடுத்தது சிங்களம்.

இருந்தும் தமிழன் திறமையுள்ளவனாக காணப்பட்டதாலும், உயர்பதவிகளிலெல்லாம் தமிழனே காணப்பட்டதாலும் தமிழனை விழுத்த கல்வியில் கைவைத்தது சிங்கள அரசு. கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழகத் தெரிவை நடைமுறைப்படுத்தியது. இதன் காரணமாகவே ஈழப்போராட்டம் பல குழுக்களாகத் தொடங்கியது போராட்டம் ஆனாலும் சிங்கள அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒரே அமைப்பே ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக கொள்கை மாறாது சுதந்திரத்திற்காக இன்றும் போராடி வருகின்றார்கள் இந்த சங்கதி ஏதுவும் தெரியாத ஒருவர் இன்று இராணுவத் தளபதி என்பது தான் நகைப்புக்குரிய விடயமாகும்.

இது இப்படி இருக்க இலங்கையின் சிங்கள சமூகத்தின் ஒரு பகுதியினர் மேற்குலக கலாச்சாரத்தில் மூழ்கிப் போக பெரும்பகுதி பொருளாதார வீழ்ச்சியால் துவண்டு போயிருக்கிறார்கள். அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்து போரில் வெற்றி பெற்றாலும் பொருளாதாரத்தில் பாதாள வீழ்ச்சி கண்டு இப்பொழுது எழ முடியாமல் பள்ளத்தில் கிடக்கின்றது. போர்ச் சூழலில் அரசு கவிழ்ந்து போகும் நிலையில் உள்ளது. இதே நிலையை மிகச் சிறிய ஒரு வளர்முக நாடான இலங்கை எதிர்கொண்டிருக்கின்றது. அமெரிக்கா சுதகரித்து எழ காலம் எடுக்காது. ஆனால் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டால் இந்த வீழ்ச்சியில் இருந்து எழ குறிப்பிட்ட காலம் எடுக்கவே செய்யும். ஆனாலும் அரசு தன் முழுப் பலத்தையும் இன்னும் யுத்தத்திற்கே பயன்படுத்தத் தீர்மானித்திருக்கின்றது. இதுவரை காலமும் பெரிய எதிர்ப்பு எதனையும் காட்டாமல் (தந்திரோபாய) பின்னகர்வுகளை மேற்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் முழுமூச்சான பதிலடி ஒன்றைக் கொடுக்க முனைனவார்கள். உலக நாடுகளே வியந்து நிற்கும் ஒரு போராட்ட அமைப்பே விடுதலைப் புலிகள் அமைப்பு. மிகப்பெரும் படைப்பலத்தையும் வான்படை, கடற்படை தரைப்படை என முப்படைகளும் கொண்ட பலமான அமைப்பு அவர்களுடையது. யாராலும் எதிர்பார்க்க முடியாத போரியற் தந்திரோபாயம் தாக்குதல் வியூகங்களையும் மதிநுட்பங்களையும் அனுபவம் மிக்க மதிநுட்பம் நிறைந்த தலைவரையும் கொண்ட விடுதலைப் புலிகளை தேற்கடித்து தமது திட்டத்தை நிறைவேற்றுவது என்பது எந்தளவுக்கு சுலபமான காரியம் என்பது இலங்கை அரசுக்கே புரியும். அப்படி அவர்களின் பதில் தாக்குதலை இந்த நாடு எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்பதே அனைவரினதும் கேள்வியாக இருக்கின்றது.

இப்படியாக இழப்புக்கள் ஏமாற்றங்கள், வருத்தங்கள் இன்னும் கடந்த கால நினைவுகளோடும் ஒரு போதும் அழியாத கண்கள் நிறைந்த கனவுகளோடும் ஒரு தீபாவளி எங்களைக் கடந்து போகிறது. விடியல் ஒளியாக எங்கள் கண்களில் மின்னியபடி!!!!

Tuesday, November 4, 2008

தொலைந்த பக்கங்கள்


மனச்சேற்றில்
ஞாபகத் தாமரைகள்
பூத்திருக்க
பார்வை தொலைந்து
மௌனியாய் இருக்கிறேன் நான்
அறையின் நிசப்தத்தை
நிரப்பிக்கொண்டிருக்கிறது
யன்னலேறிக் குதிக்கும்
அடுத்த தெருவின் சலசலப்பு
நாங்கள் பேசி முடிந்த
வார்த்தைகள் மேசை எங்கும்
கசங்கிக் கிடக்கின்றன.
மீண்டும் - வெறுமை
வேதாளம் முருங்கை மரமேறி
கிளை ஒடிக்கிறது – விரக்தி
நேற்றைய பொழுதின்
ஞாபகப் பருக்கை ஒன்று
அடக்கமுடியாத ஆனந்தமாய்
விரிந்து விரிந்து
என் தனிமையை வெல்ல
போராடிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் நாம்
சந்திக்கும் தொலைவு மீதான
ஆவலின் தாபம்
எல்லையற்று வளர்ந்து
தீர்த்துக் கொள்ள முடியா
தவிப்பை சிந்திக்கொண்டிருக்கிறது மனசு
மழை விட்டும் நிற்காத
தூறலாய்