Thursday, April 28, 2011

காட்சியும் - ஓவியமும்



ஓர் நிலாக் காதலனின் கவிதை (ஓவியக் குறிப்புக்கள் )

OOO

அவன்
காய்ந்துபோன ஒரு
தூரிகைகையை எடுத்துக்கொண்டு
அந்த ஓவியத்தை வேறுவிதமாய் மாற்ற
முனைந்துகொண்டிருக்கிறான்.

OOO

காட்சி நகர்ந்து நகர்ந்துபோக
அந்த ஓவியமும்
தனக்குள் ஒழிந்து ஒழிந்து
புதுமுகம் பூசிக்கொண்டேயிருந்தது

ஓவியத்திற்காகவும்
காட்சி தன்மீது வண்ணங்களை பூசியது

ஓவ்வொரு பொழுதும்
வண்ணங்கள் குழைத்த பாத்திரங்கள்
ஒவ்வொன்றும்
பழைய ஓவியத்தின்
புதிய முகங்களின்
பிறப்பைத் தந்த பெருமிதத்தோடும்
மகிழ்வோடும் - அந்தக் களைப்பில்
காய்ந்துபோயிருந்தன

காட்சியாய் தெரிகிற
ஓவியத்தோடு கலந்துபோய்
தானும் ஒரு காட்சியாய்ச் செய்து
ஒட்டிக்கொண்டான்

OOO

பின்னொரு பொழுதில்
புலர்ந்த
காட்சியின் சாயலோடு
அந்த ஓவியம் சேரவேயில்லை

காட்சி முழுதாய்
வேறொன்றாகியிருந்தது

அவன் வரைவதை நிறுத்திவிட்டு
ஓவியத்தை வைத்துக்கொண்டு
காட்சியை திருத்த முயன்றான்

ஓவியம் காட்சியில்னின்று திரும்பி
பின்னோக்கி நகர்ந்தது
காட்சியால் திரும்ப முடியவில்லை
ஓவியத்தின் பழையமுக வண்ணங்கள்
காட்சியிடம் தீர்ந்துபோயிருந்தன

காட்சிவேறு - ஓவியம் வேறாகின
ஓவியம் கற்பனையாகியிருந்தது