Tuesday, May 26, 2009

கடிதம்,- அகதிக்கு அகதி எழுதிக்கொள்வது

அண்மையில் இராமனாதன் முகாமிலிருந்து எனது தங்கை கடிதமொன்றை கொடுத்துவிட்டிருந்தாள். அதிலுள்ள அர்த்தங்களை தினம்தினம் தேடுகிறேன், நொடிக்கொருமுறை ஆயிரம் அர்த்தங்கள் அதனுள்ளே, அந்த அர்த்தங்களுக்குள் பல்லாயிரம் வலிகளும் வேதனைகளும் மடையுடைத்து வெள்ளமாகப்பாய்கிறது. இந்த அண்ணன் என்ன செய்வான் தூரத்தே நின்று அழுகிறேன் என் மொத்த கண்ணீரும் தீர்ந்துபோகட்டும் என்று, இன்னொருமுறை இதிலுமொரு துயர் காண்பேனோ என்று..... இப்பொளுதே கொட்டித்தீர்த்துவிட. ஒரு பரம்பரைக்கே போதுமான மொத்த துயரை இப்போதே கட்டிக்கொடுத்துவிட்டது இந்த யுத்தமெமக்கு என்பதை அங்குபோய் பார்த்ததும் உணர்ந்தேன்.

முகாம், இங்கே மனிதர்களை அடைத்துவைத்திருக்கிறார்கள், பூமியில் மிகவும் கொடிய விலங்கு மனிதன் தான் சந்தேகமில்லை, அதிலும் கொடிய மிருகங்கள் இந்த யுத்தததை முன்னெடுக்க காரணமானவர்களும்,அதை தூண்டியவர்களும் இன்னும் அதன்பால் அக்கறை கொண்டோருமே என்பது புரியும், முகாங்களுக்கும்,வைத்தியசாலைகளுக்குமொருமுறை போய்ப்பாருங்கள்.

இந்தக்கடிதம் அந்தத்துயர்களின் ஒரு பருக்கையை எனக்குள் உணர்த்தியது, இதோ அது

o o o o

அன்பின் அண்ணா
நலம்,உங்கள் நலத்திற்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்

மேலும் உங்கள் வொய்ஸ் எல்லாம் மாறிவிட்டது. சந்தோசமாய் இருக்கவும். இளம் பராயத்தை சந்தோசமாக செலவளிக்கிற பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நாங்கள் பட்ட கஸ்ட்டங்கள் எல்லாம் வார்த்தைகளில் அடக்க முடியாதவை.எந்தளவிற்கு துயரத்தித்தினை அனுபவிக்க வேண்டுமோ அந்தளவிற்கு அனுபவித்தோம், கஸ்ட்டப்பட்டோம். சரி அது எல்லாம் போகட்டும் அவை மீட்டுப் பார்க்க முடியாத பக்கங்கள். அத்தானையும் அக்காவையும் கேட்டதாகச் சொல்லுங்கள். டேனுவுக்கும் சதுக்குட்டிக்கும் எங்களை அறிமுகம் செய்துவையுங்கள், என்ன செய்வது பாசத்தை கூட பகிருவதற்கு இங்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே. ம்ம் இந்த உலகின் வேடிக்கையை பாருங்கள் விலங்குகள் சுதந்திரமாய் திரிய ஆரம்பித்து விட்ட காலத்தில் மனிதவேட்டை, மனிதர்கள் பட்டியில் (தொழுவம்). இத்தனை நிகள்ந்ததற்குப் பிறகு சாவதற்கு பயமா,,,, உங்களையும் அத்தானாக்களையும் ஒருக்கா பாத்துவிட்டால் போதும் எண்டுதான் இங்க வந்தனாங்கள். இதெலாசொல்லி உங்களையும் காயப்படுத்தவில்லை, நீங்கள் சந்தோசமாக இருங்கோ, உங்கட பிறந்தநாளுக்கு எங்களுக்கு என்ன ஸ்பெசல்! ம்ம் சும்மாதான் கேட்டனான், வளமை போல அண்டைக்கு நீங்கள் உங்கட நண்பர்களோட சந்தோசமா இருங்கோ அதுதான் எங்கட விருப்பம், எங்கட அண்ணா வீட்ட இருந்த சந்தோசத்தோட எப்பவும் இருக்கவேணும்.

வேற என்ன அண்ணா, அம்மா சரியா மெலிஞ்சிற்றா,அவவுக்கு மருந்தும், மாப்பொட்டியும் வாங்கி கொடுத்துவிடுங்கோ. உங்களை பார்க்கவேண்டும் போல இருக்கு,சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருக்கா வாங்கோ. படிக்கிற ஆர்வமும், ஊக்கமும் இருக்கிறபோது A/L Exam எழுதமுடியாமப் போய்விட்டதே எண்டுதான் கவலை, இப்ப கூட சந்தர்ப்பம் கிடைத்தால் திரும்பவும்படிச்சு எழுதலாம், அதெல்லாம் எம்முடைய கையில் இல்லையே, நடப்பதை பார்க்கலா. ம்ம். சரி அண்ணா, நாங்கள் விரைவில் சந்திப்போம்,நீங்கள் நலமாக இருக்கவும், எனக்கு தலைமயிர் வளரும் வரம்வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கோ.

நன்றி
இப்படிக்கு
தங்கை

o o o o


எனது
மிகத்துயரமான வரிகள்
மௌனமாகவே இருக்கின்றன
ஒருபிடி
அர்த்தங்களேனும் அடங்கா(த)
சொற்கள் சிலது
முட்கம்பிகளில்
பிடித்து நிற்கின்றன

மரணத்தை விடவும்
கொடியதோர் இரணத்திலிருந்து
மீண்ட வேதனையை
என் கரங்களில்
புதைந்தழுத
என் தாயின்
கண்ணீர் சொன்னது

இன்னும்
முடியவில்லை துயரம்

அம்மா அழுது தீர்த்துவிடாதீர்கள்

பருவம் பருவமாய்
அழிக்கப்படுகிறவர்கள் நாம்
மறந்துவிடாதீர்கள்

Tuesday, May 12, 2009

அகதியின் பிறந்தநாள்

பிக்னிக் கொட்டகைத் தூக்கம்
விழித்தால் சுர்றவர திருவிளாக்கோலம்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கூட்டம் கூட்டமாய் சன நெரிசல்
தொலைதூர
முட்க்ம்பி வேலிகளில்
ஐந்து நிமிட தரிசனத்திற்காய்
காத்துக்கிடக்கும் மக்கள்
சுற்றவர துப்ப்க்கிகளோடு
காவலர்கள்
உலக நாடுகளின்
பிரதிநிதிகளின் வாகனங்கள்
பரிசுப்பொருட்களோடு
அணிவகுப்பு ஆரம்பமாகிறது

புன்னகையோடு விடிகிறது நாள்
ஒரு அகதியின்
பிறந்தநாள்
சிறப்பாகத்தானிருக்கிறது