
நான் ஒரு சிறைக் கைதி
யாரும் தீர்ப்பிடாத
குற்றங்களுக்காக
கம்பிகளே இல்லாத கூண்டொன்றில்
அடையுண்டுகிடக்கிறேன்
எனக்கு தீர்ப்பெழுதக்கூடிய
அந்த நீதிதேவன்
வருவான் எனச்சொல்கிறார்கள்
என்னை இங்கிருந்து மீட்க
அவன் வருவதற்கான
அறிகுறிகளேதுமில்லை
இதுவரை வந்ததுமில்லை
நானும் கூடவே
சேர்ந்து தேடினேன்
அவன் முகவரியாவது சிக்குமென்று
பல ஆண்டுகள்
தேடியதில்
இறுதியாகக் கண்டுபிடித்தேன்
அவன் வீட்டுக்கான
சில நூறு முகவரிகளில் எதிலும்
அவன் இல்லை என்று
இறுதியாக
நானே எழுதினேன்
எனக்கான தீர்ப்பை
நான் சுமந்துகொண்டிருக்கும்
காரணங்களற்ற குற்றங்களை
தள்ளுபடிசெய்துகொண்டு
"உலகம் தண்டிக்கப்படக்கூடியது"
என்று