
வானம் பார்த்தபடி
மல்லாந்து கிடக்கிறாள்
கடல் இராட்சசி
வார்த்தைகளற்ற மொழியின்
சங்கீதம்
கரையின் நீளத்திற்கும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அலைகளின் கரங்களால்
தழுவிக்கொண்டேயிருக்கிறாள்
தன் மக்களை.
அவர்களுக்கு
கடலே தாய்
கடலே காதலி
கடலே சொந்தம் இன்னும்
கடலே தெய்வம்
அவர்களிடம் கண்ணீர் இருக்காது
கவலை இருக்காது
அந்த நாள்
அவளுக்கு என்ன துயரமோ…
என்ன கோபமோ…
என்ன நோய் தொற்றிக்கொண்டதோ…
இல்லை யார் மீது மோக வெறியோ…
அலைச்சேலையை
அவிழ்த்தெறிந்து அம்மணமானாள்
தலைவிரித்து கரைக்கேறி
தாண்டவமாடினாள்
தன் மக்களைத் தின்று
சக்கை துப்பினாள்
பூமியின் முதல் கர்ப்பம்
கலைந்து
சிதைந்து கிடந்தது
கரையெங்கும் பிணங்கள்…
முதன்முதலாய்
அலைகளையும் மீறிற்று
உலகின் ஒப்பாரிக் குரல்கள்
முதன்முதலாய்
பூமியே அழுதது
ஒருமுறை
சாதி
மதம்
இனம்
ஒன்றாகச் செத்துக்கிடந்தது
அவர்களின் சமாதிகள் மீது
மலர்ந்திருந்தது
மாசற்ற மனிதநேயம்
அத்தனை வலிகளையும்
வேதனைகளையும்
மெதுவாய் வருடிக்கொண்டு…