அன்பு என்கிற வார்த்தை
உதடுகளில் மட்டும் உயிர்ப்படைவதாகச் சொல்கிறார்கள்
நான் நேசித்தவர்களில் நீயும் ஒருத்தன்
அப்படியானால்
எனது நேசத்தை
என்னவென்று எழுதுவேன் நான்
அன்பனே
உலகை நேசித்த மனிதன் - அதை
அழித்து அழகாக்கியதன் எச்சம்தான்
இப்போதிருக்கும் மரண பூமியாம்
உறவுகளை நேசித்த மனிதன்
பிழவுகளை மட்டுமே பிரசவித்தான்
அதனால் என்னவோ
நமக்குள் மலர்ந்த நட்பு அளவாகவே இருந்தது
அதிகமாகவே நேசித்தேன் நான் - உன்னை
உனதண்ணனின்
நண்பன் என்பதற்காய்
மரியாதை என்ற பெயரில்
ஐந்தடி தூரத்தில்
நின்றன உனது வார்த்தைகள்
எட்டத்தில் நின்றது
நமது உறவு
அதன் முளுஅழகும் இப்போது
எனக்கு விளங்க வைத்து
எட்டாத வானுக்கு விரைந்ததாம்
உன் உயிர்ப் பறவை
தம்பி
இந்த அண்ணன்களுக்கு முன்னமே
ஆகாயம் பிளந்து
சுவர்க்கம் போய்விட்டாயாமே
இப்போது
என்னுள்ளே புரள்வது
குற்ற உணர்வா,
துரோகமா,
வஞ்சகமா - இல்லை
உன்னைப் பிரிந்த
வேதனையா புரியவில்லையடா
உனக்கு நாட்டம் இல்லாதுபோனாலும்
நான் எழுதியதற்காய்
இரண்டுதடவை
புரட்டிவிட்டுச் சொல்வாய்
"நல்லாயிருக்கு கவிதை" என்று
நானும் ஒரு புன்னகை ஒன்றைத் தருவேன்
என்மீதிருந்த உனது நேசத்துக்காக
இன்னொருமுறை
நீ எனக்குச் சொன்னாய்
" அருள் அண்ண இந்தமுறை நீங்க போறீங்க மொறட்டுவ கம்பச்சிற்கு அடுத்தமுறை நான் அங்க வாறன் பாருங்க" என்று
நான் காத்திருந்த அந்த ஒரு வருடத்துக்குள்
உனக்கு கம்பஸ்சும் கிடைத்தது
நீவரவேண்டிய பாதைதான் மரணித்துப்போயிருந்தது
பிறகுதான் சொன்னார்கள்
உன்னையும்
பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று
உலகம் முளுக்க
இருக்கிறான் தமிழன்
ஈழத்திலிருந்து தப்பியவனெல்லாம்
சிங்கார வாழ்க்கை வாழ்கிறான்
சிறீலங்காவில் இன்னும்.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே
பலிகடாவா
இங்கே யாருக்கடா வேண்டும்
தமிழீழம்
ஒரு விடுமுறையில்
இந்த அண்ணன் வீட்டுக்கும்
வந்தாயாம்
எந்தாய் உன்னை உச்சிமோர்ந்து
கண்கள் கலங்கியதை
எனக்குச்சொன்னாள்
தன் பிள்ளைபோல் உணர்ந்ததாய்
அப்போதே
என்கண்கள் பனித்து
எனக்குள்ளே சுரந்த பாசம்
இன்னும் என் அடினெஞ்சில்
தேங்கினிற்குதடா
நீயிருந்தால்
திருவிளாவைப்போல் கலகலப்பாயிருப்போம் நாம்
அந்த நினைவுகள் வந்து என்னைச்
சித்திரவதை செய்யுதடா
தம்பி
இன்னொரு பிறவி இருக்குமானால்
மீண்டும் சந்திப்போம்
இங்கு வேண்டாம்
யுத்தமே இல்லாத ஏதேனுமோர்
தேசத்தில் (கிரகத்தில்)