Saturday, March 14, 2009

அன்புத் தம்பி அன்பழகனுக்காக- ஆத்துமத்திலிருந்து இறுதி வார்த்தை

அன்பு என்கிற வார்த்தை
உதடுகளில் மட்டும் உயிர்ப்படைவதாகச் சொல்கிறார்கள்
நான் நேசித்தவர்களில் நீயும் ஒருத்தன்
அப்படியானால்
எனது நேசத்தை
என்னவென்று எழுதுவேன் நான்

அன்பனே
உலகை நேசித்த மனிதன் - அதை
அழித்து அழகாக்கியதன் எச்சம்தான்
இப்போதிருக்கும் மரண பூமியாம்
உறவுகளை நேசித்த மனிதன்
பிழவுகளை மட்டுமே பிரசவித்தான்
அதனால் என்னவோ
நமக்குள் மலர்ந்த நட்பு அளவாகவே இருந்தது
அதிகமாகவே நேசித்தேன் நான் - உன்னை

உனதண்ணனின்
நண்பன் என்பதற்காய்
மரியாதை என்ற பெயரில்
ஐந்தடி தூரத்தில்
நின்றன உனது வார்த்தைகள்
எட்டத்தில் நின்றது
நமது உறவு
அதன் முளுஅழகும் இப்போது
எனக்கு விளங்க வைத்து
எட்டாத வானுக்கு விரைந்ததாம்
உன் உயிர்ப் பறவை

தம்பி
இந்த அண்ணன்களுக்கு முன்னமே
ஆகாயம் பிளந்து
சுவர்க்கம் போய்விட்டாயாமே
இப்போது
என்னுள்ளே புரள்வது
குற்ற உணர்வா,
துரோகமா,
வஞ்சகமா - இல்லை
உன்னைப் பிரிந்த
வேதனையா புரியவில்லையடா

உனக்கு நாட்டம் இல்லாதுபோனாலும்
நான் எழுதியதற்காய்
இரண்டுதடவை
புரட்டிவிட்டுச் சொல்வாய்
"நல்லாயிருக்கு கவிதை" என்று
நானும் ஒரு புன்னகை ஒன்றைத் தருவேன்
என்மீதிருந்த உனது நேசத்துக்காக

இன்னொருமுறை
நீ எனக்குச் சொன்னாய்
" அருள் அண்ண இந்தமுறை நீங்க போறீங்க மொறட்டுவ கம்பச்சிற்கு அடுத்தமுறை நான் அங்க வாறன் பாருங்க" என்று
நான் காத்திருந்த அந்த ஒரு வருடத்துக்குள்
உனக்கு கம்பஸ்சும் கிடைத்தது
நீவரவேண்டிய பாதைதான் மரணித்துப்போயிருந்தது

பிறகுதான் சொன்னார்கள்
உன்னையும்
பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று

உலகம் முளுக்க
இருக்கிறான் தமிழன்
ஈழத்திலிருந்து தப்பியவனெல்லாம்
சிங்கார வாழ்க்கை வாழ்கிறான்
சிறீலங்காவில் இன்னும்.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே
பலிகடாவா
இங்கே யாருக்கடா வேண்டும்
தமிழீழம்

ஒரு விடுமுறையில்
இந்த அண்ணன் வீட்டுக்கும்
வந்தாயாம்
எந்தாய் உன்னை உச்சிமோர்ந்து
கண்கள் கலங்கியதை
எனக்குச்சொன்னாள்
தன் பிள்ளைபோல் உணர்ந்ததாய்

அப்போதே
என்கண்கள் பனித்து
எனக்குள்ளே சுரந்த பாசம்
இன்னும் என் அடினெஞ்சில்
தேங்கினிற்குதடா

நீயிருந்தால்
திருவிளாவைப்போல் கலகலப்பாயிருப்போம் நாம்
அந்த நினைவுகள் வந்து என்னைச்
சித்திரவதை செய்யுதடா

தம்பி
இன்னொரு பிறவி இருக்குமானால்
மீண்டும் சந்திப்போம்
இங்கு வேண்டாம்
யுத்தமே இல்லாத ஏதேனுமோர்
தேசத்தில் (கிரகத்தில்)

15 comments:

Anonymous said...

பிரிய நண்பா...
எனக்கு கவிதை எழுதும் மனநிலைகள் இல்லை.. ஆனாலும் அவன் மீதான உன்பிரியம். என்னைப் பெருமைகொள்ளச் செய்கிறது. (நிச்சயமாக நான் அவனது மரணத்திற்காக பெருமைப்படவில்லை..) மேலேயிருக்கிற ஒவ்வொரு வரியோடும் என் மனம் உடன்படுகிறது.. பாதுக்காப்பாக இருப்பவனுக்கு அங்குள்ள வலி தெரியாமல்.. இருக்கலாம்.. அடுத்தவன் மரணங்களைப் பெருமைப்படுத்திப் பெருமைப்படுத்தியே உயிர்வாழ்ந்து விடுகிறார்கள் இவர்கள். (வடிவேலு பாணியில் சொன்னால் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்குவது) உனது வரிகளை நான் அதற்காகவே ஏற்றுக்கொள்கிறேன். அவனது மரணத்தை நீ தீரமாகப் பார்க்கவில்லை என்பதனாலேயே உன்னோடு நான் உடன்படுகிறேன். அந்த மரணம் அவன்மீது திணிக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொண்டிருப்பதுதான் உண்மையான வரலாறு அதை எழுதியிருக்கிறாய் என் நண்ப.. நன்றி.. இதற்கு எம் ஆருயிர்த் தோழர்கள் வந்து கூச்சலிடக் கூடும். வரலாற்றுத் தவறென்றோ.. இன்னும் துரோகி மயிர் மட்டையென்றோ.. அவர்களுக்கு சொல்கிறேன்.. இந்தக் கவிதைஎழுதியவனைச் சேர்க்கிற பட்டியலில் என்னையும் சேருங்கள்.. நான்.. அவனோடும் அவன் கவிதையோடும் முழுமையாக உடன்படுகிறேன்..(கவனிக்க எல்லா சொற்களோடும்)

ரூபன் தேவேந்திரன் said...

//உலகம் முளுக்க
இருக்கிறான் தமிழன்
ஈழத்திலிருந்து தப்பியவனெல்லாம்
சிங்கார வாழ்க்கை வாழ்கிறான்
சிறீலங்காவில் இன்னும்.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே
பலிகடாவா//

ஒரு முறை எங்கோ ஒரு இணையத்தளத்தில் வாசிக்கும் போது "tamil war mongers" என்றொரு வார்த்தையை பாவித்திருந்தார்கள். இப்படியானவர்கள் அல்லது நீங்கள் மேலே சொன்ன சிங்கார வாழ்க்கை வாழ்பவர்கள் இன்னொருவரின் இறப்பு நிகழவே தான் வேண்டும் என்றும், அது ஒரு காலப்பெருமை என்றும் பேசிக்கொள்வதும் உங்களையும் இன்னும் சிலரையும் அடையாளமிடுவது தொடர்ந்தாலும் நீங்கள் ,நீங்களாகவே இருங்கள், அவை இன்னும் சிலதாய் எஞ்சி இருக்கும் அன்புக்குரியவர்கள் மீட்க என்றாலும் உதவும்

Anonymous said...

வலிமிகுந்த கவிதை,

Aaradhana said...

// கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே
பலிகடாவா
இங்கே யாருக்கடா வேண்டும்
தமிழீழம் //

இன்றைய கால கட்டத்தில் எல்லாரும் நினைக்க வேண்டிய உண்மை..
இறுதியில் எஞ்சப் போவது புழுதியும் குருதியும் மட்டுமே ஈழத்தில்..

உண்மை சொன்னால் உதைப்பவர் கோடி..
கொழும்பு வாழ்கை தந்த சொகுசு என்பர் சிலர்
எண்ணிப் பார்த்தால் நண்ப நானும் உன் பக்கமே..

Anonymous said...

குருபரன்..

தம்பி அன்பழகனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்....

//உலகம் முளுக்க
இருக்கிறான் தமிழன்
ஈழத்திலிருந்து தப்பியவனெல்லாம்
சிங்கார வாழ்க்கை வாழ்கிறான்
சிறீலங்காவில் இன்னும்.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே
பலிகடாவா//

ம்... கிளிநொச்சி முல்லைத்தீவு என்று சொல்லி எங்கு வாழ்ந்தாலும் பலிக்கடா தான்....


அருள்நேசா!!! சந்தேகத்தின் பெயரில் பிடித்து உடம்பெல்லாம் துனளத்து கொன்று வீசுகிறார்களே இதை என்ன சொல்கீறாய்???? வன்னியிலிருந்து வெளியில் வந்த இளம் தரவளியை கொன்று யூரியா பைகளில் அடைத்து புதைத்து தள்ளுகிறார்களே இதை என்ன சொல்கிறாய்????? எம்மை முற்றிலுமாய் கொன்று விட்ட பின் மற்ற மற்ற இட தமிழர்களையும் சிங்களமும் உலகமும் கொல்லும் கவலைப்படாதே....

சிறிலங்காவில் ஜசியை பார்த்து விட்டு நீ வன்னியா என்று கேட்பார்களே ஏன்???? சிங்களவன் எதையுமே தமிழில் மொழி பெயர்கமாடட்டானே ஏன்???? சிங்களன் எதிலுமே தமிழனை விட மாட்டானே ஏன்???
வன்னியிலிருந்து வவுனியாக்கு வந்ததுகளின்ர பெத்த பிள்ளைகளையே பார்க்க விடுகிறானில்லையாம் சிங்களன்...ஏன்?????? இதுக்கெல்லாம் பெரிய கவிதை எழுதி பத்திரிகைளில போடுங்களன்....

நீ சிறிலங்காவில சிங்களன்ர கூட்டத்தில "ஒண்டும் விளங்கல ஆங்கிலத்தில மொழி பெயருங்க" என்று சொன்னாயே சிங்களன் என்ன புடுங்கினான்????

இப்படி நிறைய சொல்லலாம்....

காலம் அவனை வீரனாய் காவு கொண்டது....

Anonymous said...

இப்படி எத்தனை இழப்புக்கள் எம் தேசத்தினில்... மனதினை உருக்கும் கவிதை

Anonymous said...

//அருள்நேசா!!! சந்தேகத்தின் பெயரில் பிடித்து உடம்பெல்லாம் துனளத்து கொன்று வீசுகிறார்களே இதை என்ன சொல்கீறாய்???//

உண்மைதான் குருபரன்.. எங்கிருந்தாலும் சாவுதான் சிங்களவன் எங்களை மரியாதையாக நடத்துவான் என்று அருள்நெசன் எங்கே சொல்லியிருக்கிறான். அல்லது சிங்களவனுக்கு வக்காலத்தா வாங்கியிருக்கிறான்.. எனக்கொரு சந்தேகனம்.. நீ கேட்டிருக்கிற இத்தனை ஏன்களுக்கும் நான் ஒரே ஒரு ஏன் கேட்கிறேன். பதில் சொல்லு.. அன்பழகன் கம்பஸ் கிடைச்சும் படிக்கமுடியவில்லையே.. ஏன்.. நீயும் கிளிநொச்சியில் தான் பிறந்தனி அவனும் கிளிநொச்சியில்தான் பிறந்தவன்.. அவனும் கணிதப்பிரிவு நீயம் கணிதப்பிரிவு..

ஒரு படைப்பாளியாய்.. மட்டுமல்ல ஒரு மனிதனாய்.. அருள் நேர்மையாக நடந்திருக்கிறான்.. எழுதியிருக்கிறாய். இந்த ஏன்களெல்லாம் உனக்கு இப்போது தோன்றுவதேன்.. 23 வருசமாய்.. செல்லடிக்குள் வாழும்போது தோன்றவில்லையே ஏன்..?

அதாவது ஒரு உண்மை சொன்னதற்கே.. சிங்களவனோடு சேர்த்துவைத்து அவனுக்கு ஆதரவானவனாக முத்திரை குத்த வெளிக்கிடுறியே குரு ஏன்..?

உண்மைகள் உனக்கு தெரியாதா? நீ எனக்கு நான் கேட்ட அன்பழகன் ஏன் கம்பஸ் கிடைச்சும் கம்பசுக்கு வரயில்லை அவனுக்கும் உன்னைமாதிரிப்படிக்கோணும் எண்டு ஆசையிருந்திருக்காதா.. இந்த ஏனுக்கு மட்டும் உண்மையான காரணத்தை யோசி.. அதோட அன்பழகன்ர பச்சில வேறயாருமே படிக்கவரயில்லையா அதையும் யோசி.. நண்பா.. சிங்களவன் எங்களை அடிமைகளாக எண்ணுகிறான்.. அது இன்றைக்கல்ல.. அதை யார் இப்போ மறுத்தது..

ஒரு தகவல் குரு..
யாழ்ப்பாணத்தில் 1995ல் இருந்து இராணுவத்தின் பிடிக்குள் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.(அவர்கள் பாலும் தேனும் ஒழுகும் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று சொல்லவில்லை) ஆனால் இந்த பதினைந்து வருடத்தில்.. நீ நாக்கால மூக்கால எல்லாம் எண்ணினாலும். ஒரு 2000 பேரைச் சொல்லுவியா.. கொல்லப்பட்ட காணாமல் போனவர்கள் என்று.. வன்னியில் இந்த வருடத்தொடக்கத்தில் 3 மாதம் முழுசாக நிறைவுபெறாத நிலையில் மட்டும்.கொல்லப்பட்டவர் எண்ணிக்கை.. எத்தனை ஆயிரம்.. எனது அம்மாவும் அருள்நேசனின் அம்மாவும்.. இன்னும் கொஞ்சநாள் வாழவேண்டுமெனில் எங்கேயிருக்கவேண்டும்.. உனது உணர்வு பூர்வமான (பாணும் பருப்பும்) சிந்தனைகளைவித்து கொஞ்சம் நிதானமாக உண்மைகளை யோசித்து பார்க்கவேண்டுகிறேன்..

நண்பா..

Anonymous said...

//காலம் அவனை வீரனாய் காவு கொண்டது....//

காளை அடக்கிற போட்டி நடந்துகொண்டிருந்திச்சு மைதானத்தில.. றோட்டில தன்பாட்டிற்கு போய்க்கொண்டிருந்த ஒருத்தனை வலியத்தூக்கி மைதானத்துக்க எறிஞ்சுபோட்டாங்கள் (அப்படி நிறையப்பேரை) கடைசியா.. காளை முட்டி அவன் செத்துப்போனான்... போட்டியை ரீவியிலும்.. பேப்பரிலும்.. ரேடியோவிலும்.. இணையதளங்களிலும்.. விறுவிறுப்பாக பார்த்துக்கொண்டிருந்த குருபரன் சொல்றார்..(குருபனைப்போல நிறையப்பேர்) அதோபார்.. காளைஅடக்கும் போட்டியில் வீரமரணம் அடைந்தான் அவன் ஒரு மாவீரன்.. விளங்குதா குரு.. நீ என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாய்.. என்பது..நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதும்..

ப. அருள்நேசன் said...

நண்பர்களுக்கு வணக்கம்,
நான் இங்கே எழுதியதை கவிதையாக, அஞ்சலியாக, பிரியமாக இன்னும் ஒரு படைப்பாக பார்க்கிறீர்கள். அதோடு உங்கள் கருத்துக்களையும் கூறியிருக்கிறீர்கள். அதற்கு எனது நன்றிகள்.

இன்னும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நான் என்ன எழுதவேண்டும் என்பதை தீர்மானிப்பவன் நான்தான். ஆக நான் எழுதியது எழுதியதுதான், [ போதியளவு விளக்கத்தை எனது எழுத்துக்கள் கொண்டிருக்கின்றன, அதை விளங்கிக்கொள்வது உங்களைப்பொறுத்ததாகிறது]

அகிலன், உன் தம்பியை பிரிந்தசோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.

சிநேகத்துடன்
ப.அருள்நேசன்

Anonymous said...

குருபரன்.மா

மரணம்... இழப்பு எவ்வாறாயினும் ஏற்று கொள்ள முடியாதுதான் ஆனால்...... எமது கருத்தை ஞாயப்படுத்த முற்படும் போது அது சுயநலமற்று இருக்க வேண்டும் அதைத்தான் நான் அருள்நேசனுக்கு நான் சொல்ல வந்தேன்....

தனியாக இணையதளம் திறந்து தன் சுயநலகருத்தை ஒரு இனம் சார்பாக எம் பிணங்களில் அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் போல் கருத்து வெளியிடுவதை நான் தவறென்கிறேன்..
உவமைகளும் உவமானங்களும் உதாரணங்களும் வாதங்களுக்கு சரியாகலாம் ஆனால் உண்மைகளை உரைப்பதற்கு சரியாகாது...

சுயநலமற்ற விளம்பர நோக்கமற்ற நடுநிலை எழுத்தாளன் என்று சொன்னால் அருள்நேசனால் இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் எல்லா அராஜகங்களை பற்றியும் எழுத முடியுமா????அதைத்தான் நான் கேட்டேன்... இது ஒரு வாசகனின் கருத்து மாத்திரமே.. நீங்கள் உங்கள் சுயநல்திற்காக எதையும் எழுதலாம் சில நண்பர்களைப் போல்...

அகிலன் நாம் இன்னும் இந்த இலங்கையில் தான் உள்ளோம்.. எங்கும் ஓடவில்லை...நான் இங்கு எதையும் ஞாயப்படுத்தவோ குறை கூறவோ வரவில்லை...இந்த கவிதை மரணத்துக்கு செலுத்தும் அஞ்கலி இல்லை என்றே சொல்ல வந்தேன்...


இணையதளங்களில் செய்திகளை வாசிப்பவர்களுக்கு அது செய்தி மட்டுமே....இங்குள்ள ஆஸ்பத்திரிகளில் வந்து பாருங்கள் பிணங்களையும் பிய்ந்து வரும் உடம்பகளையும் அந்த வலி சொல்லும் எப்படி எழுதுவதென்று...


இனி இதைப்பற்றி சொல்வதற்கு நான் வரவில்லை.....உவமைகளை எழுதி பல பேர் பெரியாளாகிவிட்டார்கள் அது போல் இன்னும் பல பேரை என் தமிழ் வாழ வைக்கும்...

ப. அருள்நேசன் said...

நண்பரே உமது கோபத்தின் நியாயம் புரியவில்லை எனக்கு,
"விளம்பர நோக்கமற்ற நடுநிலை எழுத்தாளன்...." அப்படியானால் இந்தக்கவிதை எதை விளம்பரப்படுத்துகிறது அல்லது யாரச் சார்ந்து பேசுகிறது என்று கொங்சம் சொல்லமுடியுமா. அந்தக்காலத்திலயிருந்து வீட்டுக்கு பிள்ளைகள் செத்து வருகிறபோது சனம் "உவங்கள் நாசமாப்போகட்டும்" எண்டு திட்டுறது உமக்கும் தெரியும்தானே ஆனா, எங்கயாவது அதை எழுதினமா, இல்ல, அது சார்பில்ல. எங்கட பெண் பிள்ளைகளை சாமத்தில ஓட்டைப்பிரிச்சு அரைகுறை உடுப்போட இழுத்துக்கொண்டு போய், சீரளிச்சுக்கொண்டாங்களே ( பிறகு அவங்களே, அந்த கேவலங்கெட்டவனுகளை கொண்டானுகளே) அதை எழுதினமா இல்லா, அது சார்பில்ல. அதுக்கெல்லாம் கட்டளைபோடுற தலைவர் இன்னும் மகத்துவமான தலைவன் தான்.
அதையும் பொறுத்தம், காசை வாங்கிக்கொண்டு இந்தத் தறுதலையை ஜனாதிபதியாக்கினது யார், அதை எழுதினமா இல்ல. ஏன்?,,, கடைசிய நம்பியிருந்த அத்தனை சனத்தையும் சகவிட்டிட்டு ஆழாளுகு காசை சுறுட்டிக்கொண்டு கருணாவின்ர வளியில காட்டிக்கொடுத்துக்கொண்டு... சாகிறது பாவம் சனங்கள் அதுவும் வன்னிச்சனங்கள். இங்கயிருந்து கோசமும் கொடியும் பிடிக்கிறசனமா சாகுது, அவங்களைத்தான் பேசுது கவிதை குரு, நல்லப்பார் விளங்கும் அதனுடைய நியாயம்.

இப்படி பேசியிருந்தால் உம்முடைய கோபம் நியாயம்தான் குரு,

நீ சொன்னதுபோல அதை இந்தக்கவிதையில எழுதியிருக்ககூடாதுதான், ஆனால் எழுதக்கூடாத விசயமில்ல. முதல்ல என்னுடைய கண்ணில உள்ள துரும்பை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணைபார்க்க வேணும், அவன் சிங்களவன் செய்யிறதெல்லாம் கொடுமையும் அனியாயமும் அதையார் இல்லையெண்டார், அதையே எழுதியெழுதி யாருக்கு காட்டச்சொல்கிறாய், இதற்கெல்லாம் காலாய் ஆயுதமும் பணமும் தரும் அதே உலகத்திற்கா, இல்ல கிளட்டுப்பிள்ளை தமிழ்த்தலைவர் கருணாநிதிக்க,

அந்தச்சனங்களை, இருந்தால் அந்தக்கடவுள்வந்து காப்பாற்றட்டும்

யாருடைய கோசமும் வேண்டாம், நாடு நாடாய் ஓடிப்போய் இருந்துகொண்டு கோசம்போட்டு மயிரப்புடுங்கி ஈழம் வேண்டும் என்று நின்று கூத்தாடி, எங்கட சனங்களின்ர ரத்தத்தில் சித்திரம் வரைந்துபார்க்கும்....... கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், மட்(டட) டக்களப்பிலும், திருகோணமலியிலும் இன்னும் ஊரெல்லாம் சுதியோட இருக்கிறவன் சொல்லுவான், வேணும் ஈழம் விடாத பிடி எண்டு, பொத்திக்கொண்டிருங்கடா மானங்கெட்டவனுகளே எண்டுதிட்டினா.......

இனியொரு விளக்கம் தேவையில்ல எண்டு நினைக்கிறன்

மற்றப்படி எனக்குமிருக்கிறது எமது மக்களின் சுதந்திரமான், அமைதியான வாழ்வின் அக்கறை அல்லது விருப்பம். அதை யார் செய்தாலும், சரியாகச்செய்தால் ஏன் நானும் வேண்டாமென்கிறேன். அவர்களே அதை செய்தால் நனும் சந்தோசப்படுவேன்.

Anonymous said...

மா.குருபரன்

அருள்நேசன்... திரும்பவும் நான் சொல்கிறேன் எதையும் நான் நியாயப்படுத்த வரவில்லை...விடுதலைக்கு வன்முறைதான் வழியென்றால் அது உலக விடுதலை வரலாற்றில் ஏற்று கொள்ளபட்டதொன்றுதான்...


ஏற்கனவே இது ஒரு வீரமரணத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட கவிதையில்லை... இப்படியிருக்க நாம் இங்கே விவாதம் செய்வது நல்லதல்ல...



யாவருக்கும் தனிமனித எண்ணங்கள் என்ற வகையில் நிகழ்காலம் தொடர்பாக உன்னுடைய கருத்துகளும் கற்பனைகளும் உனது உரிமையே... தனிப்பட்ட ஆசைகள் தேவைகள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து பார் உணர்வுகளும் உரிமைகளும் பற்றிய பல வரலாற்றுப் பாடங்கள் உண்டு.....

த.அகிலன் said...

நண்பா குருபரன்.. நான் உன்னிடம் கேட்ட கேள்விகளிற்கு நீ பதிலே சொல்லவில்லை.. நீ என்னிடம் நேரடியாகவே பேசலாம்.. இணையதளம் நடத்துகிற நண்பர்கள்.. அது இதெண்டு என்ன கிசுகிசுவா எழுதுகிறாய்..

நீ இலங்கையில்தான் இருக்கிறாய்.. நான் இந்தியாவுக்கு ஓடிவந்துவிட்டேன். உண்மைதான்.. ஆனால் வன்னியில் நீயும் இல்லை நானும் இல்லையே நண்பா அதைத்தான் சொல்கிறேன். சரி நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். வன்னியில் இருக்கிற உனது அம்மாவாக இருந்தால்.. நீ அவாக்கு என்ன சொல்லுவாய்.. வன்னியிலேயே இருக்க சொல்லியா இல்லை அங்கிருந்து வெளியேறச் சொல்லியா.. மனசாட்சியுடன் உனது அம்மாவுக்கு மகனாக பதில் சொல்லு நண்பா.. என்ன சொல்லுவாய்.. இதற்கு திறந்த வெளியில் பதில் சொல்ல வெட்கப்பட்டால்.. தனிமடல் அனுப்பு.. நண்பா.. நான் எனது அம்மாவை வெளியேறுமாறுதான் சொல்வேன்.. எனது அம்மாவிற்கு சொல்வதைத்தான்.. என் பெரியம்மாவுக்கும் ஏன் உனது அம்மாவுக்கும் கூட சொல்லமுடியும் என்னால்.. எனது அம்மாவை வெளியெறி வரச் சொல்லிவிட்டு.. உனது அம்மாவை மானத்துடன் சாகச் சொல்லிவிட முடியாது என்னால்.. எனது அம்மாவுக்கு என்னால் என்ன சொல்ல முடியுமோ அதையே அம்மா சார்ந்த மொத்த சமூகத்திற்கும் சொல்லுவேன்.. அமமாவுக்கு ஒரு நீதி அடுத்தவனின் அம்மாவுக்கு இன்னொரு நீதியா சகோதரா.. நீ கிசு கிசுக்களாக பதில் சொல்வதை விட்டு விட்டு நேரடியாகப் பேசு.. உண்மையைப் பேசு... இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் இருக்கிறார்கள்.. தானே தமிழர்கள் குருபரன்.. வன்னியில் இருப்பதும் கொழும்பில் இருப்பதும் ஒண்டா... வன்னியை விடகொழும்பு மோசமான இடமாக இருந்தது ஒரு காலம் நண்பா.. (இப்போதும் கொழும்பில் நிலைமை மாறவில்லை) ஆனால் வன்னியில் நிலைமை அதைவிட மோசமாகிவிட்டதில்லையா.. ம்.. கிசுகிசுப்பாணியில் எழுதுவதை விட்டு விட்டு.. பேசு நேரடியாக..

Anonymous said...

குருபரன்.மா


அகிலன் நான் எதையும் வாதிட வரவில்லை....நீ எப்படி கடவுள் என்பதை ஏற்று கொள்ளவில்லையோ அப்படி சிலவற்றை என்னாலும் ஏற்று கொள்ள முடியாது.... சில கேள்விகளக்கு காலம் தான் விடை சொல்லமுடியும். 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவிரர்களின் குடும்பம் 100000 ற்கு மேற்பட்ட சொந்தங்களையிழந்த என்தமிழ் உறவுகள் பெற்ற இழப்போடு வலியோடு என் மொழி விடுதலைக்காய் இன விடுதலைக்காய் நான் எதையும் தாங்க தயார். இந்த வரியின் பின் நீ கேட்க போகும் சில சுயநலமான அர்த்தமற்ற கேள்விகளுக்கு நான் பதிலளிக்கும் நிலையில் இல்லை நண்பா.

கவிதைகளுக்கு சிறந்த கருத்துகளை கூறும் பழைய அகிலனாய் இழப்பென்பதை தாண்டி தலையங்கத்திற்கேற்ற கவிதையா இது சொல்லு.. எனது தமிழ் அறிவிற்கு எட்டியவகையில் இது அஞ்சலியல்ல என்றே சொல்ல வந்தேன்....


அருள்நேசா வாசகனிடம் கேள்வி கேட்பதைவிட்டு இந்த கவிதையில் நீ என்ன சொல்ல வந்திருக்கிறாய் சொல்லு.. புலிகள் பிடித்து கொண்டு போய் இளைஞ்ஞர்களை கொல்கிறார்கள் அப்பிடியென்று சொல்ல வருகிறாயா இல்லை ஓரு மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துகிறாயா???

ஓரு எழுத்தாளனாய் உள்ள போது நீங்கள் இடும் தலைப்பிற்கேற்ற கருத்தை உள்ளடக்கத்தில் சொல்லுங்கள். அஞ்சலிக்குரிய நடையில் அஞ்சலி இருக்க வேண்டும். உங்களுடைய வாதங்கள் ஆதங்கங்கள் தனிப்பட்ட கருத்துகளை அதற்கதற்கேற்றமாதிரி தலையங்கங்கள் அமைத்து எழுதுங்கள் அதுதான் ஒரு எழுத்தாளனுக்கு அழகு.



எம் தழிழிற்கு எம் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை நயவஞ்சகங்களை கொடுமைகளை இன வெறி அராஜகங்களை உலகத்திற்கு எடுத்து சொல்லு.... எம்மை இரண்டாம் இனமாய் பார்க்கும் தமிழனுக்கு சொல்லு..... அதைவிட்டு குடும்பத்தில் நடப்பவற்றை கூடியிருந்து கும்மியடித்து எதைக் கண்டாய்???? மற்றவன் எமை எண்ணி எள்ளி நகையாடுவான்.


எழுதுபவர்கள்.... அது உங்கள் உரிமை எதையாவது எழுதுங்கள்....வாழ்த்துகள்...


எனக்கும் சில தெரியும் என்ற நம்பிக்கையில் இந்த கவிதையில் இருந்த சில பொருத்தபாடற்ற தன்மைகளை கூறினேனே தவிர நான் வாதிட வரவில்லை......

த.அகிலன் said...

குருபரன்.. நீ என்ன மனநிலையில் இருக்கிறாய் என்பதை விளங்கமுடிகிறது.. ஆனால் உண்மை என்பது தனியே இருக்கிறது அதை ரசிக்கவும் முடியாது ஏற்கவும் முடியாது சிலபேருக்கு.. அதில் தான் நீயும் அடங்ககிறாய்.. நான் கேட்ட ஏன் களில் ஒன்றுக்கேனும் பதில் சொல்லாமல்.. ஏதோ விண்ணாணம் பேசுகிறாய்.. தலைப்பு எதுவாய் இருந்தால் என்ன இப்ப உனக்கு தலைப்பு பிரச்சினையா கவிதை பிரச்சினையா..