Monday, September 21, 2009

நிறம் மாறாத நினைவுகள்


இது ஒரு பிரபல்யமடையாத உன்னதமான ஒரு மனிதனின் கதை. அலங்காரங்கள் சூடப்படாமல் எழுதப்படுகிற ஓர் இளைஞனின் வரலாறு. எனது எழுத்துக்கள் அவருக்கு மரியாதை செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைகிறேன்.

எடின் ஜூட், ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை. அவருக்கு மூத்த சகோதரி ஜூடித், அவர்கள் எப்போதும் நண்பர்களைப்போலவே பழகுவார்கள். அன்பு மட்டுமே தெரிந்த அம்மா, பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றித்தர எப்போதும் தயாராயிருக்கிற அப்பா, இதுதான் எடினின் அமைதியான குடும்பம்.
எடின் தனது விருப்பங்களை எப்போதும் தனது பெற்றோரிடம் எடுத்துச்சென்று சம்மதம் பெற்ற பின்னரே எதையும் செய்வான். ஆனால் யூடித், தான் நினைத்ததை செய்தேமுடிக்கும் பிடிவாதக்காரி. படிப்பில் இருவரும் மிகவும் திறமைசாலிகள், எடின் படிப்பு மட்டும் அல்லாமல் நல்ல மேடைப்பேச்சாளனாகவும் இருந்தான்.

அப்போது எடின் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தான், வசிட்டர்கள் வாயால் இவன் "பொறியியல் பீடம்" செல்வான் என்று முத்திரை குத்தினார்கள். வசிட்டர்களுக்கு திறமைசாலிகளை அடையாளம் காணத்தெரியுமே தவிர வருங்காலத்தை எதிர்வுகூறவா முடியும். அந்த நாட்களில் எடின், கம்யூனிஸம், பொருளாதாரம், அரசியல், சமுகவியல்..... என்று தேடித் தேடி படித்து அனல் பறக்க மேடைகளில் பேசிக்கொண்டிருந்தான்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் எடின் பாடசாலை முடித்து வீட்டுக்கு வருகிறான், உடைகளை மாற்றிக்கொண்டு நேராக தாயிடம் செல்கிறான். " அம்மா, நான் போராட்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்ளப் போகிறேன்" என்று சொல்கிறான். தாய் அதிர்ச்சிகலந்த வேதனையோடு அமைதியாய் இருக்கிறாள். "அம்மா, ...." அவன் அவள் காலடியில் வந்து அமர்கிறான். "அப்பாவை கேட்டிட்டு போப்ப்பா" அவன் தலையை வருடியபடி எங்கோ வெறித்தபடி சொல்கிறாள் தாய். அவன் வளமையான புன்னகையோடு எழுந்து செல்கிறான்
எடின் அப்பாவின் அறைக்குள் செல்கிறான், "அப்பா உங்களோட ஒரு விசயம் பேசவேணும்"
தந்தை, புரட்டிக்கொண்டிருந்த பத்திரிகையை ஓரமாக வைத்துவிட்டு கேட்கிறார் "என்னப்பா என்ன விசயம்..... என்ன வேணும் கேளுங்கோ" வரப்போகிற துயரத்தை அறியாமலே தந்தை அவனது முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். "அப்பா நான் இயக்கத்தில சேரலாம் எண்டு இருக்கிறன்" அந்த நிமிடத்திலேயே எரிமலையாய் வெடித்துப்போனவர், எந்தவித சஞ்சலமும் இல்லாமல் கேட்கிறார் " நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுத்தநீங்களோ"

ஓம் அப்பா, நான் முழுத்திருப்தியோடதான் இதைச்சொல்லுறன்"

ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு தந்தை சொல்கிறார், "சரி, உமக்கு எது சரி எனத் தெரிகிறதோ அதையே செய்யும்"

எப்ப சேரப்போறீர்"

இண்டைக்கே,.... அப்பா போட்டுவாறன்!

"போட்டுவாங்கோ"

இவைதான் அவனது வாழ்வின் மிகக் கனதியான உரையாடல். அவனது வாழ்வின் பாதையை மாற்றிய துடுப்பு விசை. அந்த நிமிடம் தான் அவனது குடும்பத்தின், வசந்தகாலத்தின் முடிவு என அவன் எண்ணிப் பார்த்திருந்திருப்பானே என்னவோ?

வீட்டில் ஒருத்தருக்கு ஒருத்தர் அவனது பிரிவின் வேதனையை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்கள். நாட்கள் நகர்ந்தன, ஒரு வருடம் ஓடி மறைந்தது. ஒரு போராளியாக விடுமுறையில் வருகிறான் எடின். மகனைப் பார்த்ததும் தந்தைக்கும் தாய்க்கும் மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எடின் தனது சகோதரியை ஒருவாறாக சமாதானப்படுத்திவிட்டு, தனது அறைக்குள் நுழைகிறான். அவன் வைத்துவிட்டுப்போன பொருட்கள் ஒவ்வொன்றும் அப்படியே அந்தந்த இடத்தில் இருக்கின்றன, ஆனால் தூசியோ ஒட்டடையோ படராமல் அப்போதுதான் அவன் வெளியே போய் வருவதுபோல் காட்சியளிக்கிறது அறை. அவனது பெற்றோருக்கும் சகோதரிக்கும் அந்த அறைதான் மகனாகவும் தம்பியாகவும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறான். கண்கள் பனிக்க வாசல் கதவில் சாய்ந்து நிற்கிற சகோதரியை பார்க்கிறான், அவள் புன்னகைத்தபடியே சொல்கிறாள் "எடின் நல்லா படுத்து தூங்கும் காலையில் சந்திப்போம்.. குட்நைட்"

கதவை சாத்திவிட்டு அறையை சுற்றிப் பார்த்தபடியே பழைய ஞாபகங்களோடு கலந்துபோகிறான். உணர்ச்சி பெருக்கோடு அவனது இரகசியங்களின் பேளையாக இருந்த அலுமாரியை திறக்கிறான் அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. சின்ன வயசிலிருந்து அக்கா யூடித், எடினோடு சண்டைபோட்டுக்கொண்டு பிடிவாதத்தோடு பறித்து வைத்திருந்த பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அவை எடினுக்கு மிகவும் விருப்பமாயிருந்த பொருட்கள். அன்றிரவு அவனது சௌகரியமான கட்டிலில் கூட அவனால் தூங்க முடியவில்லை. நினைவுகள் முட்களாயிருந்தன, உறவுச் சிலுவையில் அன்பின் ஆணிகள் அவனை அறைந்துகொண்டிருந்தன.

அவன் விடைபெறும் நாள் வந்தது. யூடித், எடினிடம் கேட்கிறாள் "தம்பி நீர் இதில இருந்து விலகி வந்துவிடும், உமக்காக இல்லாட்டியும் அம்மா அப்பாவின் சந்தோசத்திற்காகவாவது..... எங்களுக்கு பயமா இருக்கு எடின்..."
எடின் பதில் சொல்கிறான், இல்லை அக்கா இது நானாகத் தெரிவுசெய்த பாதை, இப்ப நான் போயே ஆகவேண்டும், இதை நீங்களும் புரிந்துகொண்டேதான் ஆகவேண்டும்......
என் முழுவாழ்விற்கும் போதுமான அன்பை உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட திருப்தி எனக்கிருக்கிறது, நான் புதிய சூழலுக்கு என்னை பழக்கப் படுத்திக்கொண்டதை போல நீங்களும் நானில்லாத சூழலுக்கு உங்களை தயார்ப்படுத்தவேண்டும்" அவனது பேச்சைவிட அவன் சிரிப்பைத்தான் அதிகமாக கோபித்துக்கொண்டாள் யூடித். வார்த்தைகளால் மனங்களை வென்றுவிடுகிற சக்தியை கடவுள் உமக்கு கொடுத்திருக்கலாம், ஆனால் உமது நியாயங்கள் என்னிடம் எடுபடாது......என்று சொல்லிவிட்டு எழுந்துசெல்கிற அக்கவை பார்த்து, "பிடிவாதக்காற அக்கா" சொல்லிச் சிரிக்கிறான் எடின்.

ஆண்டுகள் கடந்தன, எடினின் குடும்பம் அவனது பிரிவால் தவிப்பதை மறந்து அவனது வரவிற்காய் காத்திருக்க தொடங்கியிருந்தது. இம்முறை அவனது வருகை புதுமாதிரியாக இருந்தது. ஒருநாள் காலை பத்திரிகை வாங்கிவந்த தந்தை அதை இரண்டுமுறை புரட்டிவிட்டு, அதை ஒரு ஒரத்திலே தூக்கிப் போட்டிருந்தார். இதை அவதானித்த யூடித் பத்திரிகையை எடுத்து என்ன செய்தியாக இருக்கும் என்று தேடுகிறாள், "எடின் யூட் என்றளைக்கப்ப்படும்.............நேரடிச் சமரில் வீரச்சாவடைந்தார்........" மீண்டும் மீண்டும் படிக்கிறாள் யூடித் " தம்பீ......" ஒலித்தடங்கியது வெறும் குரல் மட்டுமாயிருந்திருக்குமா!

அந்தச் செய்தி மிச்சமிருந்த இன்பங்களையும் பிடுங்கிக்கொண்டதன் பிறகு துயரத்தின் முழுமையான பிம்பத்தை ஒட்டிக்கொண்டது அந்த வீடு. மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியே அவனது தாயின் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறது, தந்தை நோய்வாய்ப்படுகிறார், யூடித் தனது உயர்கல்வியை பாதியிலே நிறுத்திக்கொள்கிறாள்.
இரண்டு ஆண்டுகளில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுகிறது, சமாதாச் சூழல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. யூடித் தந்தையை அழைத்துக்கொண்டு எடினின் கல்லறையை பார்க்க வருகிறாள். அங்கே அவனது அணிப் போராளிகளை கண்கிறார்கள்

நாங்கள் அவரை " கண்ணாடி அண்ண " எண்டுதான் கூப்பிடுவம், நல்ல மனிதர் அவர், சண்டை நேரம் தவிர்த்து எங்களோட அவரும் ஒருஆளா தான் இருப்பார். அவரிட்ட இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட விடயங்கள் நிறைய, அவர் ஒரு நல்ல ஆசான். ஆனால் நாங்கள் அவரை இவ்வளவு விரைவில் இழந்துவிடுவோம் என்று நினைக்கவில்லை.
அண்டைக்கு ஆமி எங்களை சுத்திவளைச்சிட்டான், வெளியால வர இருந்த ஒரு வழியையும் நெருங்கிக்கொண்டிருந்தாங்கள். அப்பதான் கண்ணாடி அண்ண சொன்னார், நான் வாறன் நீங்கள் முதல்ல வெளியேறுங்கோ" அவரோட ஒரு பத்துப்பேர் தான் அப்ப இருந்தாங்கள், எங்கள போகச் சொல்லீட்டு அவர் வாறவனை மறிச்சு அடிக்க தயாராகீட்டார், அவர முதல்ல வெளியேறச்சொல்லி நாங்கள் எவ்வளவு கேட்டும் அவர் கேக்கேல்ல, அவற்ற கட்டளையை எங்களால மீற முடியேல்ல. அவர் சண்டையை தொடக்க நாங்கள் அந்த நேரத்தில வெளியால வந்திட்டம். அவர் அடிச்சுக்கொன்டே எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கேக்க ஆமீன்ர செல்லில பீஸ் பட்டு அந்த இடத்திலயே வீரச்சாவடைஞ்சிட்டார். சரியான சிரமப்பட்டுத்தான் அவற்ற உடல மீட்டுக்கொண்டுவந்தனாங்கள்." களத்தில் நடந்ததை கண்கள் கசிய சொல்லிமுடித்தான் ஒரு போராளி.

அப்போதுதான் எடின், ஐம்பது பேர் கொண்ட அணியின் தலைவனாக இருந்திருக்கிறான் என்பதே தெரிய வந்தது. அன்றைய தினம், கார்த்திகை 27., இராணுவ மரியாதையோடு அடக்கம்செய்யப்பட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒரு நிமிடம் தீர்த்தக்கரைபோல திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் பேரமைதி விழுந்து சத்தங்களை எல்லாம் சிறை செய்து செல்கிறது. பின்பு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. சந்தன வாடையும் பூக்களின் புனிதமும் வீச, யூடித் றோஜாக்களால் தம்பியின் கல்லறையை அழகுசெய்துகொண்டிருந்தாள்.

Sunday, August 9, 2009

"WATER" திரைவிமர்சனம்


பத்து வயதுகூட நிரம்பாத குழந்தை சூர்யா , தூங்கிக்கொண்டிருக்கிறது.
அதனது தந்தை அவளை எழுப்புகிறார்.

My child,

"Do you remember getting married"

Baby said "No"

"Your husband is dead"

" You are a widow now"

Baby said " For how long father?"

WATER திரப்படம் இதிலிருந்து ஆரம்பிக்கிறது,

அந்தக் குழந்தையை தந்தை விதவைகள் வசிப்பிடமொன்றில் விட்டுவிட்டு வருகிறார், அவள் அம்மா அம்மா என்று கேட்டு அழுகிறாள். அந்த இல்லத்தின் பொறுப்பாளி மதுமதி வயசான கிழவி, அவள் அந்தக் குழந்தையிடம் சொல்கிறாள்

"Our Holly Books say a wife is part of her husband, while he is alive and when husband die, god help us, wives also half die so how can a half - dead women feel pain"

சூர்யா சொல்கிறள், " because she is half alive"

ஆத்திரம் கொண்ட முதியவள் சூர்யாவை கீளே தள்ளிவிட்டு திரும்பவும் இப்படி
பைத்தியக்காரத்தனமாய் நடந்துகொண்டால் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள். சூர்யா " " I don't want to be a stupid widow fatty" என்று கத்திவிட்டு அவள் கலை கடித்துவிட்டு ஓடிவிடுகிறாள்.

அங்குள்ள இன்னொரு பெண், மதுமதிக்கு அடுத்தபடியாக அந்த இல்லத்தை பராமரிப்பவள் பெயர் தேவி, சூர்யாயுக்கு எல்லம் செய்து கொடுக்கிறாள் ஆனாலும் கண்டிப்புடனேயே நடந்துகொண்கிறாள், சூர்யாவுக்கு இன்னொரு துணை கிடைக்கிறது, அவளை சூர்யா கண்டவுடனேயே "Angel' என்று அளைக்கிறாள், அவளது பெயர் கல்யாணி, அழகிய திருமண வயது நிரம்பிய இழம் பெண். அவளும் சூர்யாவின் வயதிலிருக்கும்போதே விதவையாகியவள். கல்யானி சூர்யாவுக்கு தன்னுடைய நாய்க்குட்டியை விளையாடக்கொடுக்கிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடிருக்கிறார்கள்.

ஒருமுறை பிரார்த்தனை செய்கிறபோது, " Where is the house for men widow" என்று சூர்யா கேட்கிறாள், அதற்கு " what a horrible thing to say, god protect our men from such fate, may your tongue burn, put out her tongue and throw it in the river" என்று கண்டபடி அவளை திட்டித்தீர்க்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது இவர்கள் இருவரும் நாராயணன் என்கிற வாலிபனை சந்திக்கிறார்கள், நாராயணன் கல்யாணிமீது காதல்வயப்படுகிறான், ஆரம்பத்தில் சங்கடத்தை உணர்ந்தாலும் கல்யணியும் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் அதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை, விதவைக்கு கல்யானமா? என்று எல்லோரும் சினக்கிறார்கள். ஆனாலும் கல்யாணியும் நாராயணனும் உறுதியாகவே இருக்கிறார்கள்.

இது அந்த முதிய கிழவிக்கு பிடிக்கவில்லை, காரணம் கல்யாணி அவர்களது சொத்தாயிருந்தாள், கல்யாணியை பணக்கார பிராமணர்களின் இச்சையை தீர்த்துக்கொள்ள அனுப்பி அதன்மூலம் பணம் பார்த்து பிளைத்துக்கொண்டிருந்தாள் அவள். அதற்காக பெண் தரகு வேலைபார்க்கும் அரவாணியோடு நட்பினையும் வைத்திருந்தாள். அவள் மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்களையும் வாங்கி அனுபவித்து வந்தாள் அந்தக்கிழவி. அவள் இதை அறிந்ததும் கல்யாணியின் கூந்தலை அறுத்து எறிந்து, அவளை ஒரு அறையில் போட்டு பூட்டிவிடுகிறாள்.

தேவி , தான் பணிவிடை செய்யும் வயசான பிராமணன் ஒருவனிடமிருந்து மறுமணம் பற்றிய சட்டம் அமுலில் இருப்பதை அறிந்துகொள்கிறாள், அவை ஏன் நமக்கு தெரிந்திருக்கவில்லை என்று அந்த முதியவனிடம் கேட்கிறாள், அதற்கு அவன், இதுபோன்ற சட்டங்களை நாம் புறக்கணிக்கிறோம் ஏன் என்றால் அவற்றல் நமக்கு ஒரு பயனுமில்லை என்று பதிலளிக்கிறான்.

தேவி அந்த இல்லத்தின் முதியகிழவியோடு சண்டையிட்டுக்கொண்டு, கல்யாணியை வெளியே அனுப்புகிறாள். கல்யாணியை ஏற்றுக்கொண்டு வள்ளத்தில் தனது வீட்டுக்கு அளைத்துச்செல்கிறான் நாராயணன், வளியில் அவனது தந்தையின் பெயரைக் கேட்கிறாள், அந்தப்பெயரை கேட்டதும் வள்ளத்தை திருப்பச்சொல்கிறாள், என்ன காரணம் என்று கேட்டதற்கு அதை உன் தந்தையிடமே கேட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு போகிறாள்.

நாராயணன் தந்தையிடம் கேட்கிறான், அதற்கு தந்தை " Bramins can sleep with whomever they want, and the women they sleep with are blessed" என்று பதிலளிக்கிறார்,

திரும்பிவந்த கல்யாணியை முதியவள் ஏழனித்துவிட்டு, கிலாபி ( பெண்தரகி) காத்திருக்கிறாள் அவ்ள் உன்னை ஒரு பிராமணன் வீட்டுக்கு அளைத்துச்செல்வாள், தயாராகு என்று கூறுகிறாள். வெறுப்படைந்த கல்யாணி ஆற்றில் மூழ்கி இறந்துவிடுகிறாள்.

நாராயணன் " Disguised as religion, it just about money" என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

கல்யாணி இறந்துபோனதால், வருமானமில்லாமல் தவித்த கிழவி மதுமதி, சூர்யாவை வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக ஆசை காட்டி பிராமணன் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறாள்,எங்கே வந்திருக்கிறோம் என்று அறியாத குழந்தை I have come to play" என்று சொல்கிறது.

சூர்யாவை காணாது தேடிய தேவி, மதுமதியிடம் வந்து கேட்கிறாள் அதற்கு அவள் சூர்யாவை குலாபி அளைத்துச் சென்றிருப்பதாகச் சொல்கிறாள், கதறியபடியே சூர்யாவை தேடி ஓடுகிறாள் அவள். ஆற்றில் சூர்யா மயங்கிய நிலையில் வள்ளமொன்றில் கிடப்பதை பார்க்கிறாள். அவளை தூக்கிகொண்டு நடந்து வருகிறபோது மக்கள் காந்திஜீ ஐ பார்க்க ஓடுகிறார்கள். இவளும் சூர்யாவை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். அங்கே காந்தி பேசுகிறார் "இவ்வளவு காலமும் நான் நம்பினேன் கடவுள் உண்மை என்று, ஆனால் இப்போது எனக்குத் தெரியும் உண்மைதான் கடவுள் என்று, தொழில்தான் உண்மை. இதுவே நான் அனுபவித்தவை அதுவே உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்". இதைக்கேட்டதும் அவள் சூர்யாவை காந்தியுடன் அனுப்பிவிடுவது என்ற உடிவுக்கு வருகிறாள், ஆனால் அவரை சூள நெருங்கமுடியாதளவுக்கு மக்களும் அவரது தொண்டர்களும் இருக்கிறார்கள். காந்தி ரெயினில் ஏறுகிறார், ரெயின் புறப்படுகிறது அவள் சூர்யாவை தூக்கிக்கொண்டு அருகாலேயே ஓடுகிறாள், இந்தக் குழந்தையையும் உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள், யாராவது இந்தக் குழந்தையை காப்பாற்றுங்கள், இவள் ஒரு விதவை என்று கத்துகிறாள். தொண்டர்களோடு நாராயணனும் இருக்கிறான் அவன் தேவியையும் சூர்யாவையும் காண்கிறான், சூர்வாவை வாங்கிக்கிள்கிறான், ரெயின் போய்க்கொண்டேயிருக்றது பெருமூச்சோடு சூர்யா மறையும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறாள் தேவி.


அந்த மங்கலான வெளிச்சத்தோடு திரை மூடப்படுகிறது.

விமர்சனம் என்று தலைப்பை எழுதிவிட்டு, படத்தையே ஒப்புவித்துவிட்டேன், காரணம் அங்கே விமர்சிக்குமளவுக்கு இடைவெளிகள் காணப்படவில்லை - படம் மிகத் தெளிவாக 1938ம் ஆன்டளவில் பெண்கள் அதுவும் விதவைகளுக்கு இருந்த நிலைமையை சொல்கிறது. மதம் என்கிற இயந்திரத்தை வைத்து மதவாதிகள் எப்படிப்பிளைக்கிறார்கள் என்று ஒப்புவிக்கிறது WATER.

DEEPA MEHTA இந்தப் படத்தினுடைய இயக்குனர், சர்ச்சைகளுக்குமேல் சர்ச்சையாக வாங்கிக்கட்டியவர். ஐம்பூதங்களை தலைப்பாக வைத்து படம் எடுக்கிறார். உலகம்முளுதிலும் இருந்து கண்டனம் கிளம்பியதாமே அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், உண்மை இருக்கிறது, பிறகு சர்ச்சை வராமல்?

"வைஸ்ணவ ஜனதோ...." என்ற மென்மையான இசையோடும், வெண்ணிற ஆடையோடும் படம் கலந்திருக்கிறது, அந்தக்காலத்தில் இருந்த மதவாதிகள் தமக்கேற்றாற்போல் தமது சௌகரியங்களுக்காக "புனித வாக்கு" சம்பிரதாயம் சடங்கு என்று எல்லாம் போட்ட சட்டங்கள் எத்தனை பேரின் வழ்வை பலியாக்கியது, யுத்தமில்லாத மரணம் இது.

மக்களெல்லாம் பூசிக்கிற மதங்களும் சமயச் சம்பிரதாயங்களும் அதன் மறுபக்கத்தில் எத்தனை அசிங்கத்தை பூசி நிற்கிறது என்பதை சொல்கிறது WATER. கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பிளைக்கும் கூட்டம், இந்தக்காலத்திலும் அழிந்துவிடவில்லை என்பதுதான் வருத்தம்.

இந்தக்காலத்து அரசியல் கட்சிகளும் மதங்களும் ஒன்று, பண்டைய காலத்தில் மக்களை அடிமைப்படுத்த அரசர்கள் உபயோகித்த தந்திர ஊடகம் தானே மதம், அதற்காகவே மதங்கள் தோன்றியும் இருக்கலாம். இன்றைய காலத்தில் அனேகமானோருக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போனதற்கு காரணமே மதங்கள் செய்கிற இதுபோன்ற அசிங்கத்தனங்கள்தான் காரணம்.

தீபா மேத்தாவின் சமூக அக்கறை, பெண்ணிய விடுதலை உணர்வு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. உலகத்தரம் வாந்த அருமையான திரைப்படம், கண்டிப்பாக இந்துமதத்தை பின்பற்றுபவர்கள் பார்க்கவேண்டிய திரைப்படம்.

இது ஒரு காலம் பிந்திய பதிவு, ஆனாலும் நல்ல படங்களை எப்போது வேண்டுமானாலும் பாராட்டலாம். ஏற்றுக்கொள்ளலாம்.

தீபா மேத்தாவுக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, July 22, 2009

போலிப் புன்னகை


வலிகள் வடியாத
துயரப் பேளை ஒன்று
என் தோழ்களை
எப்போதும் அழுத்திக்கொண்டிருக்கிறது
வேணிலின் ஸ்பரிசங்கள்
ஏதோ ஒரு தூரத்திலிருந்து
எனக்குள் கிளர்ந்தெளும் ஞாபகங்கள் - அவை
மரணித்துப்போய்விட்ட
அதன் நிஜத்தை எனக்குள்
ஏற்க மறுக்கின்றன

மீண்டும் எனக்கு
கொய்யக் கிடைத்த புன்னகைகள்
குறைகளோடும் காயங்களோடுமிருந்தன
பூக்கள் தம் காயங்களை
மறைத்துக்கொண்டு
முகம்காட்டி சிரித்தன
ஆனாலும் அவற்றின்
வாசனையில் மரணவாடையிருந்தது

கிளைகள் ஒடிந்தபின்னும்
மரங்கள் பூக்கின்றன
காய்க்கின்றன
எல்லாம் சரியாகிவிடும்
வடுக்களைத் தவிர.

[ இந்தக் கவிதை நான் கைகளிலும் தோளிலும் சுமந்த தங்கை "மியூரி"க்கு சமர்ப்பணம். " அண்ணா மீண்டும் வீட்ட வரும்போது என் போட்டோ இந்தச் சுவரில் தொங்கும்" இறுதியாக அவள் என்குறித்து சொன்ன வார்த்தைகள், அதை நிஜமாக்கிவிட்டு சென்றுவிட்டாள். அண்மையில் நான் வீட்டுக்கு சென்றபோது பெரியம்மா என்னை அணைத்துக்கொண்டு "தம்பி உன்ர தங்கச்சி நம்மை எல்லாம் விட்டுட்டு போய்ட்டாள்டா" என்று கதறினார். அதன் பிறகு நாம் நிறயப் பேசினோம், கண்ணீரை துடைத்துக்கொண்டு முகங்களில் பூத்த புன்னகை இது ]

Sunday, July 19, 2009

முகாமில் ஒருநாள்


அண்மையில் வவுனியா நலன்புரிநிலையத்திற்கு குடும்பத்தாரை பார்வையிடச் சென்றிருந்தேன், முட்கம்பிகளாலான ஆறடி உயர வேலியில் காத்துக்கிடந்தமக்களை பார்வையிட காண கூடடமாக மக்கள் இன்னொரு பக்கத்தில் நின்றார்கள். என்னை கவனமாக கூட்டிச்செல்லுமாறு மச்சாள் (என்வயதுதான்) ஒருவரிடம் அத்தான் ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி கிடைத்தது மடையுடைத்த வெள்ளம்போல் ஓடினோம், சோதனைகளுக்கு பிறகு 15பேராக 15நிமிடம் வரை பார்க்க அனுமதி. அங்கே அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் காத்திருந்தனர், மகன் வெய்யிலில் வருவான் என்பதற்காக அப்பா கொக்கொக்கோலா குளிர்பான போத்திலுடன் நின்றார், அம்மான் தானே சமைத்த எனக்கு விருப்பமான உணவுப்பொருட்களுடனும் ஒரு பையில் சில பொருகளுடனு நின்றார்கள். அப்பா வேலைக்கு லீவுபோட்டு வந்திருந்தார், தங்கைகள் பாடசாலை போகவில்லை. "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியே" பேசினோம். வார்த்தைகள் தீராமலே நேரம் தேய்ந்துபோனது. திருப்பி அனுப்பப்பட்டோம். மீண்டும் இராணுவகாவலர்களிடம் போய் பேசினேன், நான் கொழும்பில் இருந்து வருவதாகவும் உள்ளே செல்ல அனுமதிவேண்டும் என்றும்..... சிறிது நேர விவாதத்திற்கு பிறகு உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

உள்ளே சென்று எமக்கு கொடுக்கப்பட்ட கொட்டகைக்குள் சென்றோம். மகிழ்ச்சி முகங்களில் பிரகாசித்தது. அங்கே செல்வதற்கு பணம் என்னிடமிருக்கவில்லை, அப்போது கௌசி அண்ணா, ஒரு தொகை பணத்தை கொடுத்து போய் வீட்டாரை பார்த்துவா எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். இந்த மனம் இப்போது எத்தனை பேருக்குவரும். அந்தப்பணத்தில் தங்கைகளுக்கும் அப்பா அம்மாவுக்கும் உடைகளும் இனிப்புப் பண்டங்களும் வாங்கிப்போயிருந்தேன். அவர்கள் என்னை பார்த்த சந்தோசத்திற்குமேல் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லையானாலும், அண்ணா வாங்கிக்கொடுத்தது, மகன் வாங்கிக்கொடுத்தது என்று நண்பர்களிடம் காட்டினார்கள்.

நான் எல்லாவற்றையும் மறந்து ஒருநாள் சதோச்மாயிருந்தேன், அம்மா தேறிவிட்டார், தங்கைகள் தேறிவிட்டார்கள், சாப்பாட்டுக்கு குறையில்லை, அவர்கள் பேச்சில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருந்தது. என் அழகுத்தங்கையின் அழகுக் கூந்தலை தவிர, மீட்டு விட்டார்கள் தங்களை. நான் தூக்கி எறிந்த கடவுளை தேடிப்போய் சொன்னேன், இனியும் வேதனைகளை கொடுக்க நினைத்தால் அதை எனக்கே கொடு, இவர்களை விட்டுவிடு, சாவின் குகையிலிருந்து வந்த இவர்களிடம் இப்போது புதிதாக அரும்புகிற மகிழ்ச்சியை பிடுங்கிவிடாதே!

அங்கே எனக்காக நிறைய சாப்பாடுகள், பலாப்பளம். சோடா, கேக், சுவீட்ஸ்! அம்மா அவசர அவசரமாக சமைத்து மத்தியானம் சாப்பாடும்தந்தார்ர், எனக்கும் தங்கைகளுக்கும் தன் கையாலேயே சாப்பாடு தந்தார், அம்மாவுக்கு நாங்கள் மூன்றுபேரும் எப்போதும் இப்படியே பாசமாக ஒற்றுமையாக இருக்கவேண்டு என்றே விருப்பம், அதற்காகவே ஒரு கோப்பையில் சாப்பாடு போட்டு எம் மூவருக்கும் தருவார், அவர் அடிக்கடி சொல்வார் " எப்படி எம்முடையதெல்லாம் உங்களுடையதாகிறதோ அப்படியே உங்களுக்குள்ளும் எப்போதும் இருக்கவேண்டும் என்று" அதன் பொருள் இப்போதுதான் எனக்கு புரிகிறது, எனக்குளேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் "என்னுடையதெல்லாம் உங்களுடையதே" இந்த ஐந்துபோர் கொண்ட உலகம் எபோதும் இருக்கும் அம்மா.

இந்நாள் வரையிலான என்னது தமிழுக்கும் சிந்தனைக்கும் எப்படி அம்மா காரணமாக இருந்தாரோ அதேபோல என் அறிவுக்கும் ஆழுமைக்கும் பண்புக்கும் பளக்கத்துக்கும் அப்பா காரணமாக இருக்கிறார். அவர் இதுவரை எங்களை கைநீட்டி அடித்ததுகூடக்கிடையாது, குடிப்பளக்கமோ சந்திவளியே வெட்டிப்பேச்சு பேசும் பளக்கமோ ஏன் கடையில் தேனீர் அருந்தக்கூட போகமாட்டார். எங்களுக்ககவே தன் எல்லா உளைப்பையும் சிந்தனையையும் செலவளிப்பவர். எனக்கு இப்போதும் வெளியே போய் ஒரு அலுவல் பார்க்கத் தயக்கம், என் தங்கைக்கு தேநீர்கூட தயாரிக்கத்தெரியாது எல்லாவற்றையும் அவரே செய்துதருவார், இது இன்னொருவருக்கு பிளையாகப்படலாம் ஆனால் அவர் எங்கள்மேல் வைத்துள்ள பாசம், அக்கறை என்பதைத்தான் நாங்கள் உணர்கிறோம். அந்தப்பாசத்தினால்தான் புலிகளால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சுயனினைவை இழந்து இரத்தவெள்ளத்தில் கிடந்தார், தன் பிள்ளையை கொல்லக்கொடுக்க எப்படி ஒரு தந்தையால் சம்மதிக்கமுடியும் அதனாலேயே அடிபட்டார். இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களுக்குமேல் எங்களை இருக்கவைத்து சாப்பாடுபோட இயலும் அவரால், அதற்காக அவர் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். முகாம் மக்களுக்கு தன் பணியை செய்ய ஆரம்பித்துவிட்டார் அப்பா என்று அம்மா சொன்னார். எங்களுக்கு மட்டுமல்லாமல் உதவிகேட்டு வருபவர்களுக்கு சலிக்காமல் உதவுவார். எங்களுக்கு எல்லாமே அப்பாதான், அவரின் அன்புக்கும் அக்கறைக்கும் பதில் என்ன செய்துவிடப்போகிறோம்?

மாலையானது நான் விடைபெற இருந்தேன், என்னை வாசல்வரை அளைத்துவந்தார்கள், அம்மா பிரியமுடியாமல் என்னை அணைத்து முத்தமிட்டா, கடைசி தங்கையும் வெட்கப்படுக்கொண்டே ம்ம்ம் கொஞ்சிளாள், அம்மா சொல்லிவைத்தார் போல. அப்ப எனக்கு கொஞ்சேல்ல? பெரியவள் ஓடிவந்து என் இரண்டு கன்னங்களிலும் ம்ம்ம். "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியெ

தூரத்தே நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த நினைவுகள் போதும் என்னை வாழ்வின் வலிகளில் இருந்து விடுவிக்க

Friday, June 19, 2009

பிரியத்தின் தூரம்


என் மனதில் ஏதோ ஒரு
சுமை ஒன்று
அது நீ
இல்லாததன் வெறுமையை
உள்வாங்கிப் பருக்கிறது
நினையுகள் கூட
தூரத்தே நெளியும்
நிலாவின் பிம்பமாய்
அலைந்துகொண்டிருக்கிறது
ஒருவாசல் திறந்து
ஒரு நேசம் வர
இன்னொரு வாசலால்
நீ போயிருப்பாய் என்று
சாவகாசமாய் இருந்துவிட்டேன்
இப்போதுதான் புரிகிறது
மனம் என்பது
வருவதற்கு மட்டுமே
ஏற்பாடுசெய்யப்பட்ட
ஒருவளிப்பாதை என்று

இப்போதுதான் புரிகிறது
எதை எல்லாம்
நான் அடைந்துவிட்டேன்
என்று நினைத்தேனோ
அதையெல்லாம் அப்போதே
இழந்துவிட்டேன் என்று
எதையெல்லாம்
என்னால் அடையமுடியாமல்போனதோ
அதைஎல்லாம் அடைவதற்காய்
இன்னும் மனம்
போராடிக்கொண்டிருக்கிறது

பெற்றுக்கொண்டவைகளை
விடவும்
பெறத்தவறியவைகளோடே
வாழ்கிறேன் நான்